பரண்:
மணிக்கொடித் தலைமுறையின் கடைசித்துளி
லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் – சுருக்கமாக லா.ச.ரா.
தமிழ் இலக்கிய உலகில் வீணை வாசித்ததைப் போல மொழியின் நரம்புகளை மீட்டிய எழுத்துக் கலைஞர் நிறைந்த வயதில் மறைந்திருக்கிறார்.
சென்னையில் மழை விடாமல் பெய்து குளிர் பரவியிருந்த வேளையில் அவருடைய மரணச் செய்தி. மறைந்த லா.சராவிற்கு வயது 91.
அபூர்வமாக வெகு சிலருக்கு நேர்வதைப் போல பிறந்த நாளிலேயே (30.10.1916 பிறப்பு) ( இறப்பு 30.10.2007) மறைந்திருந்தார் லா.ச.ரா.
கவிதையின் அற்புதமான தருணங்களை சிறுகதை, நாவல்,கட்டுரை வடிவங்களுக்குள் இயல்பாக வெளிக்கொணர்ந்த அவருடைய எழுத்துக்களின் அடிநாதமாக இருப்பது சருகிற்கிடையே
சலசலத்து விரையும் பாம்பினைப் போன்ற வேகம். அபாரமான கற்பனை வளம். பெண்களின் கூந்தல் வளைவை மோதிரச் சுருளாகவும், வெள்ளைச் சங்கின் நுனியிலிருந்தும் மெல்ல ஏறி அதன் முதுகிலிருந்து சட்டென்று சரிகிற சரிவை – அவசரச் சரிவாகவும் பார்த்தவர்.
எங்கோ பொழிய சரசரவென விரைந்தேகும் மேகக்கூட்டம் என்று அழுத்தம் கூட்டியவர். அடுப்பில் தகிக்கும் தீயைக் குங்குமப் பிழம்பாகப் புதுவடிவம் காட்டியவர்.
‘’என் சொல் தான் என் உளி’’ லா.ச.ரா.வின் இந்த வாக்குமூலத்தை அவருடைய எழுத்திற்குள் பயணிக்கிற ஒவ்வொருவரும் உணர முடியும்.
“நான் தேடும் பொருளோ, நயமோ தரும் சொல் கிட்ட, ஓரோரு பக்கத்தை, பதினெட்டு, இருபத்தேழு தடவைகள் எழுத நான் அழுத்ததில்லை.
இன்னமும் என் கதைகளின் சில முதல் நகல்களைப் பத்திரமாய் வைத்திருக்கிறேன். எனக்கு அவைகளை விட்டுப் பிரிய மனமில்லை. அடிபட்ட மிருகம் மறைவிடமாய், சாகவோ, தேறவோ படுத்துத் தன் காயங்களை நக்கிக் கொள்வது போல, தேடிச் சலித்து மனம் சோர்ந்த சமயங்களில் என் முதல் நகல்களைப் புரட்டிப் பார்ப்பதுண்டு.
ஒவ்வொன்றும் ஒரு ரண களம். இக்குப்பைகள் என் இதயத்தில் வெடித்த பாளங்கள். அத்தனையும் என் ரத்தம்.
நான் சொல்லைத் தேடும் சான்று’’ ஒரே குடும்பச் சூழலைப் பற்றியே எழுதுகிறார் ; நாவல்,சிறுகதை, எல்லாவற்றிலும் இவர் எழுதுவது ஒன்றைத் தான் என்கிற விமர்சனங்கள் இவரைச் சுட்டிக்காட்டி வைக்கப்பட்டபோது –தானே ஒப்புக் கொள்கிற விதத்தில் இப்படி எழுதுகிறார்.
‘’நான் என்னைப் பற்றித் தான் எழுதுகின்றேன். எனக்காகத் தான் எழுதிக் கொள்கிறேன்.
என்னை அதிகம் பாதித்தவர், இன்னமும் பாதித்துக் கொண்டிருப்பவர் என் பெற்றோர்கள் தாம்.
அவர்கள் காலமாகி வெகு காலமாகிவிட்டது. ஆனாலும் பாதிப்பு என் எழுத்தில் பிரதிபலிக்கிறது’’
புத்ர, அபிதா, கழுகு, என்ற நாவல்கள், ஜனனி, கங்கா, தயா, அஞ்சலி, இதழ்கள் என்று சிறுகதைத் தொகுப்புகளுமாய் இருபத்தைந்து தொகுப்புகள் என்று அவருடைய நீண்ட வாழ்க்கைக்கான எழுத்துத் தடயங்கள் நம் முன்னால் காலத்தை நீந்திக் கிடக்கின்றன. வயது மங்கும் வரை எழுதிக் கொண்டே இருந்திருக்கிறார்.
மணிக்கொடி இலக்கியவாதிகளின் வரிசையில் எஞ்சியிருந்த முதுமையான துளி லா.ச.ரா.
அவருடைய பார்வை, குடும்பச் சூழலை விட்டு எழுத்தை வெளியேற விடாத உபாசக மதிப்பீடுகள் – எதையும் பலர் ஒதுக்கிவிடலாம் சுலபமாக.
ஆனால்- அவர் உருவாக்கிய மொழியின் அற்புதத்தை- எழுத வரும் இளைய தலைமுறை நிராகரிக்க முடியாது.
அறுபது ஆண்டுகளாக நுணுக்கி மெதுவாக உருவாக்கிய அவருடைய படைப்பாற்றல் மிக்க உளி மின்னும் மொழிடமிருந்து படைப்பின் தகிப்பை உணரக்கூடிய எந்த இளம் படைப்பாளியினாலும் நிறையவே கற்றுக் கொள்ள முடியும்.
– நவம்பர் 16- 2007 – புதிய பார்வையில் மணா எழுதிய ‘ஊர் சுற்றிக் குறிப்புகளில்’ இருந்து..