வானளாவிய அதிகாரத்துக்காக திருத்தப்படும் சென்சார் விதிகள்!

தற்போது எந்தத் தமிழ் சினிமா வெளிவந்தாலும் அல்லது ட்ரெய்லர் வெளிவந்தாலும் கூட, அது பற்றி கூப்பாடு போடுகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.

சென்சார் அதிகாரிகளுக்கு மேலான அதிகாரக் குரல் பொதுவெளியில் கேட்கிறது. இவர்கள் புது சென்சார் போர்டாக உருமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

சாதி, மதம், அரசியல் சார்ந்து புதுப்புதுக் குரல்கள் கேட்கின்றன. அரசால் நியமிக்கப்பட்ட சென்சார் போர்டு உறுப்பினர்களை மட்டுமல்ல, இனி இவர்களைப் போன்ற அறிவிக்கப்படாத சென்சார் போர்டு உறுப்பினர்களையும் மனதில் வைத்தே இனி திரைப்படங்களை இயக்கவோ, தயாரிக்கவோ வேண்டும் போலிருக்கிறது.

இந்த நிலையில் – ஏற்கனவே சென்சார் பற்றி வெளியிட்டப்பட்ட ஒரு கட்டுரை – மீள் பதிவாக உங்கள் பார்வைக்கு:

****

சினிமாவை சீர்படுத்த ஒரு அமைப்பு தேவை என்ற வகையில் தான் தணிக்கை வாரியம் உருவாக்கப்பட்டது.

தங்களது படைப்பாளுமைக்கும் சுதந்திரத்துக்கும் அவ்வமைப்பு பல முட்டுக்கட்டை போடுகிறது என்று கலைஞர்கள் தொடர்ந்து குரலெழுப்பும் சூழலில், அதையும் மீறிய ஏகபோக உரிமையைப் பெறும் வகையில் புதிய சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு.

1952ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளப்பட்டு, ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவு மசோதா 2021 என்ற பெயரில் மத்திய அரசினால் வெளியிடப்பட்டிருக்கிறது.

அரசு நினைத்தால் எந்தவொரு சினிமாவையும் தன் அதிகார கரங்களுக்குள் அடக்கிவிடலாம் என்பதே இதற்கெதிரான கூக்குரல்களின் பின்னணியில் இருக்கிறது.

பிடுங்கப்படும் தணிக்கை அதிகாரம்!

திரைப்படம், ஆவணப்படம், விளம்பரப்படம் உட்பட பொதுவெளியில் காட்டப்படும் காட்சிப்படங்களில் மத்திய சான்றிதழ் வாரியம் அளிக்கும் சான்றிதழ் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

அதற்கு முன்பாக, ஐந்து பேர் கொண்ட தணிக்கைக் குழு அப்படைப்பைப் பார்த்து, அதில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள், வசனங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய அம்சங்கள் இருந்தால் சுட்டிக்காட்டப்பட்டு, அதற்குட்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

தணிக்கைக் குழுவின் முடிவில் திருப்தியில்லாதபோது, திரைப்படக் குழுவினர் மறுதணிக்கைக் குழுவை அணுகலாம். அதையும் தாண்டி, திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை நாடலாம்.

கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட தீர்ப்பாயச் சட்ட திருத்த மசோதா மூலமாகக் கலைக்கப்பட்ட நான்கு தீர்ப்பாயங்களில் திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் ஒன்று.

இதனால், தணிக்கை குழுவின் முடிவை மீறி மாநில உயர் நீதிமன்றங்களை நாட வேண்டிய நிலைக்கு திரையுலகினர் ஆளாகியுள்ளனர்.

அது சும்மா ‘ட்ரெய்லர்’தான் என்பது போல, இப்போது தணிக்கை துறையின் அதிகாரமே மத்திய அரசின் பிடிக்குள் செல்லப் போகிறது.

திருத்தத்தினால் ஏற்பட்ட வருத்தம்!

அமெரிக்கா போன்ற நாடுகளில் பிஜி13, பிஜி16 என்று சான்றளிக்கப்படுவது போல, தற்போதைய திருத்தத்தின்படி யுஏ 7+, யுஏ13+, யுஏ16+ என்று படத்தின் உள்ளடக்கத்துக்கு ஏற்ப, பெற்றோரின் வழிகாட்டுதலுடன் குழந்தைகள் பார்க்க வேண்டிய சினிமா வரையறை செய்யப்படும்.

வழக்கமாக வழங்கப்படும் யு, யுஏ, ஏ சான்றிதழ்களோடு இம்மாற்றங்களும் சேர்க்கப்படும்.

அதேபோல, சான்றிதழ் வழங்கும் தணிக்கை குழு, நீதிமன்றம் இரண்டின் முடிவையும் தாண்டி இச்சட்டத்துக்கு ஒவ்வாததாக ஒரு திரைப்படம் உள்ளதாக மத்திய அரசு கருதினால், எந்நேரத்திலும் அதில் தலையிட முடியும். தேவைப்பட்டால் அச்சான்றிதழைத் திரும்பப் பெறவும் அதிகாரம் உண்டு.

குறிப்பிட்ட மதம், இனம், சாதி மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் குறித்து திரைப்படங்களை உருவாக்கி, அவற்றை தணிக்கை குழுவிடம் காட்டி சான்று பெறுவதற்குள் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் தலைகீழாக நிற்க வேண்டிய சூழலே எக்காலத்திலும் உள்ளது.

இப்படியொரு நிலையில் கருத்து சுதந்திரமே இல்லாமல் போய்விடும் ஆபத்தை இச்சட்ட திருத்தம் கொண்டுவருமென்று இயக்குனர் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், கமல்ஹாசன், நந்திதா தாஸ், சூர்யா உள்ளிட்ட பல கலைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக, கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று கார்த்தி, ரோகிணி, தயாரிப்பாளர் முரளி ராமநாராயணன் உள்ளிட்ட குழுவினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

சினிமா தொழிலே பாதுகாப்பற்று இருக்கும் நிலையில், அதனை மேலும் நசிக்க இச்சட்ட திருத்தம் வழியமைக்கும் என்று தெரிவித்தனர்.

ஏன் வேண்டாம்?

ஒரு படைப்பில் பாலுணர்வை, வன்முறையை அதீதமாக முன்வைக்கும் காட்சிகளோ, தவறான திரிபுகளோ இருந்தால் அவற்றை தணிக்கைக்கு உட்படுத்துவதும், தேவையென்றால் தடை விதிப்பதும் இயல்புதானே என்ற கேள்வி சிலரால் முன்வைக்கப்படுகிறது.

பொதுவாக, தணிக்கைக்கு உட்படுத்தும்போது மேற்கண்ட அம்சங்கள் தாண்டி ஒரு திரைப்படத்தின் உள்ளடக்கத்தில் இருக்கும் பல விஷயங்கள் கேள்விக்கு உட்படுத்தப்படும்.

ஆட்சியில் இருக்கும் அரசுக்கு, கட்சிகளுக்கு, பொது அமைதிக்கு எதிராக சிறு துளி இருந்தால் கூட, அத்திரைப்படக் குழுவினர் பல்வேறு கேள்விகளை எதிர்கொள்வார்கள்.

பொதுவெளியில் நடந்த குற்றங்கள், கலவரங்கள், அநீதிகள், அரசு மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் என்று பலவும் வெகு அரிதாகவே சினிமாவில் சொல்லப்படுகின்றன.

அப்படைப்புகள் எந்த அளவுக்கு குறிப்பிட்ட விஷயத்தை நேர்த்தியாகவும் சாமர்த்தியமாகவும் கையாண்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து, தணிக்கையின் போது நீளும் அசுரக் கரங்களைத் தாண்டி தியேட்டர்களில் வெளியாகும்.

இந்த தணிக்கை குழுவில் பொதுவெளியிலுள்ள பிரபலங்கள், நீதித் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அரசு சார்பானவர்களும் கூட இடம்பெறுவர்.

பல காலமாகத் தொடரும் இவ்வழக்கத்தினால், படைப்பாளுமைமிக்க ஒருவர் தனது கருத்து சுதந்திரத்தைப் பயன்படுத்தி எத்தகைய கருத்தையும் முன்வைத்துவிடலாம் என்ற சூழல் இங்கு கிடையாது என்பதே உண்மை. அதையும் தாண்டி வெளியாகும் சில விஷயங்களே பேசுபொருளாகின்றன.

புதிய சட்ட திருத்தத்தால், தணிக்கை குழுவையும் மீறி எத்தனை கவனத்தோடு ஒரு திரைப்படம் மக்கள் முன் வைக்கப்பட்டாலும், அதனை சுருட்டி முடக்கும் அதிகாரம் மத்திய அரசின் கைகளில் இருக்கும்.

’இனிவரும் திரைப்படங்களை மட்டுமல்ல, ஏற்கனவே வந்த படைப்புகளையும் இது பாதிக்கும். சினிமாவை நம்பியிருக்கும் கலைஞர்களின் வாழ்வாதரத்தை சீர்குலைக்கும்’ என்றிருக்கிறார் நடிகர் கார்த்தி.

இப்போதும் தமிழ் திரையுலகில் உள்ள அனைவரும் இச்சட்ட திருத்தத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துவிடவில்லை. சொல்லப்போனால், கால தாமதமாகத்தான் இப்பிரச்சனை மீது அதீத கவனம் குவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஜுன் 18, 2021 அன்று ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவு மசோதா 2021 பற்றிய விவரங்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டு, ஜூலை 2ஆம் தேதிக்குள் அது பற்றிய கருத்துகளை மக்கள் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கோவிட்-19 பதற்றத்தில் இருந்து மீளாத சூழலில், தொடர்ச்சியாக இது போன்ற சட்ட திருத்தங்களை அமல்படுத்த முனைவதுதான் அரசின் மீதான விமர்சனங்களுக்குக் காரணமாகிறது.

இது தேவையா?

தணிக்கை குழு, நீதிமன்றம் இரண்டையும் தாண்டி ‘திருத்தும் ஆற்றல்’ (Revisionary Power) மத்திய அரசுக்கு உண்டு என்பதே இச்சட்ட திருத்தத்தின் சாராம்சம்.

ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவு மசோதா 2021ஆல் திரைப்படத் துறையின் படைப்புச் சிந்தனை முடக்கப்படும் என்றும், சிபிஎப்சி சான்றளித்த பிறகு மத்திய அரசு அதனை மறுபரிசீலனை செய்வது திரைப்படத் தொழிலை நிச்சயமற்றதாக்கிவிடும் என்றும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

சான்றுடன் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் ஒரு திரைப்படம் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட நிலையில், அதில் மத்திய அரசின் தலையீடென்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு படைப்பு தணிக்கைக்கு உட்பட வேண்டுமா, வேண்டாமா என்பது தனி விவாதம் என்றாலும், ஒழுங்கமைப்புடன் ஒரு சமூகம் இயங்குவதற்குச் சில கட்டுப்பாடுகள் அவசியம் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அப்படிப்பட்ட அதிகாரத்தின் பற்கள் ஒவ்வொன்றாகப் பிடுங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக அந்த அதிகாரத்தையே கபளீகரம் செய்யும் ஆற்றலுக்காகவே இச்சட்ட திருத்தம் பயன்படுத்தப்படும்.

அப்பட்சத்தில் அரசுக்கு சாதகமான அல்லது அரசில் அங்கம் வகிக்கும் சில தனிமனிதர்களுக்குச் சாதகமான விஷயங்களே திரையில் முன்வைக்கப்படும்; எதிர்ப்பைக் காட்டும் சிறு விமர்சனம் கூட அடியோடு புறக்கணிக்கப்படும்.

இப்போதும், இதற்கு முன்னரும் இது போன்ற விஷயங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

வரலாற்று திரிபுகளும், வன்மங்களும் கொண்ட படைப்புகள் ஒருபுறம் என்றால், தாங்கள் முன்வைக்கும் படைப்புகளுக்கு எதிரான சூழலுக்காகக் கலைஞர்கள் காத்துக்கிடக்கும் நிலை இன்னொரு புறம்.

உதாரணமாக, 2006இல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் ‘ரங் தே பசந்தி’ எனும் திரைப்படத்தை உருவாக்கினார் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா.

இப்படத்தில் குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் ஊழலொன்றில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் காட்சிகள் வரும். காஷ்மீரில் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது குறித்து, 2020இல் இயக்குனர் விது வினோத் சோப்ரா ‘ஷிகார்’ எனும் படத்தை உருவாக்கினார்.

குறிப்பிட்ட கட்சிகள் ஆட்சிப்பொறுப்பில் இல்லையென்றால், இப்படைப்புகள் முழுமை பெற்று வெளியாகியிருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் இது போன்ற எத்தனையோ படைப்புகள் வந்திருக்கின்றன. யாரேனும் ஒருவர் அதில் தங்களுக்குப் பாதகமான அம்சங்களை ஆராயத் தொடங்கினால், அவை எதிர்காலத்தில் முடக்கப்படலாம்.

இதனால், பன்மைத்தன்மையும் முரண்களும் மாறுபாடுகளும் உண்மைத்தன்மையும் திரைப்படங்களில் காணாமல் போகும்.

பன்மைத்தன்மை என்பதே இந்தியாவின் சிறப்பு. அப்படிப் பல்வேறு அம்சங்கள் ஒன்றிணைந்திருப்பதை மறந்தவர்களோ அல்லது மறக்கத் துடிப்பவர்களும் மட்டுமே இச்சட்ட திருத்தத்தால் பலன் பெறுவார்கள்.

அதில் நாமும் இருக்கிறோமா என்று சிந்தித்துவிட்டு, இச்சட்ட திருத்தத்துக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ குரல் கொடுக்கலாம்!

-உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment