தற்கொலைகள் குறிப்பிட்ட சதவிகித அளவுக்கு எப்போதும், ஏதோ சில காரணங்களால் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
இருந்தாலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் பொருளாதாரம் சரிந்து, கொரோனா காலத்தில் மேலும் பாதிப்புக்குள்ளாகி, நம்பிக்கை ஆதாரங்கள் குலைந்து தற்கொலை செய்து கொள்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பது தான் அதிர்ச்சியூட்டும் விதத்தில் இருக்கிறது.
தேசியக் குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டிருக்கிற தகவலைப் பாருங்கள்..!
2019 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 39,123 பேர்.
2020 ஆம் ஆண்டில் அதுவே ஒரு லட்சத்து 53,052 ஆக உயர்ந்துவிட்டது.
அதாவது 11.3 சதவிகித அளவுக்கு உயர்ந்திருக்கின்றன தற்கொலைகள்.
இதில் அதிகபட்சமான தற்கொலைகள் நடப்பது மகாராஷ்டிரத்தில். 19 ஆயிரம் பேருக்கு மேல்.
அடுத்து தமிழ்நாட்டில் ஏறத்தாழ 16 ஆயிரத்து 883 பேர்.
இதில் விவசாயிகளும் அடக்கம்.
இந்தியா முழுக்க பத்தாயிரம் விவசாயிகளுக்கு மேல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
தற்கொலை செய்து கொண்டவர்களில் ஆண்கள் தான் அதிகம். 70.9 சதவிகிதம். பெண்கள் 29.1 சதவிகிதம்.
இப்படித் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கையில், மக்களவையில் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சரான நரேந்திரசிங் தோமர் “கடந்த ஆண்டில் மட்டும் 5,579 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்திருக்கிறார்.
இவை வெளியே தெரிய வந்த அல்லது அரசின் கவனத்திற்கு வந்த பதிவான தற்கொலை தொடர்பான புள்ளிவிபரங்கள்.
இது தவிர காவல்துறையின் கவனத்திற்கு வராமலோ அல்லது வேறு விதமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் உயிரிழப்புகளையும் சேர்த்தால் இன்னும் எண்ணிக்கை கூடலாம்.
இதில் நாம் எழுப்புவது சில கேள்விகள் தான்.
ஏன் இவ்வளவு அதிகமானவர்கள் கொரோனாக் காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்?
அந்த அளவுக்கு வாழ்வதில் நம்பிக்கை குறைந்து இந்த முடிவுகளை இவ்வளவு பேர் எடுக்க என்ன காரணம்?
வேற்று கிரகத்தில் மனிதர்களை வசிக்கச் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நவீன யுகத்தில், இந்த அளவுக்குத் தற்கொலைகள் நடப்பது நம் சமூகத்தின் அவலத்தையும், இயலாமையையும் தானே வெளிப்படுத்துகிறது?
*