ரஜினியின் தோல்விப் படங்கள்: ஓர் அலசல்!

‘அண்ணாத்த’ படத்தின் தோல்வி கோடம்பாக்கத்தைத் திகைக்க வைத்துள்ளது.

அஜித்தை வைத்து தொடர்ச்சியாக 3 வெற்றிப் படங்களைக் கொடுத்த சிவா, ரஜினியை வைத்து –
பெரிய பேனரில், பெரிய நடிகர்களைக் கொண்டு உருவாக்கிய இந்தப் படம் தோல்வி அடைந்திருப்பது ரஜினியையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உச்சநட்சத்திரம் என்ற அந்தஸ்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக தன் வசப்படுத்தியுள்ள ரஜினிகாந்த் இதற்கு முன்பும் பல தோல்விப் படங்களைத் தந்துள்ளார்.

அது குறித்த விரிவான பார்வை.

கொடி பறக்குது

இந்தப்படம் அவ்வளவு தூரம் மோசம் இல்லை என்றாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

பாரதிராஜா முதன் முதலாய் இயக்குநராக அறிமுகமான ‘16 வயதினிலே’ படத்தில் ரஜினி வில்லனாக நடித்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்த படம் – கொடி பறக்குது.
இடைப்பட்ட காலத்தில் இருவரும் இமாலய உயரத்தை எட்டி இருந்தனர்.

மண்வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள் என தொடர்ச்சியாக மூன்று வெள்ளி விழா படங்களைக் கொடுத்துவிட்டு, ரஜினியுடன் பாரதிராஜா இணைகிறார்.

தம்பிக்கு எந்த ஊரு?, தங்கமகன், வேலைக்காரன், படிக்காதவன் என 100 நாள், 150 நாள் சினிமாக்களை விசிறி விட்டு, இயக்குநர் இமயத்துடன் சேர்கிறார் ரஜினி.

இந்தக் கூட்டணி, ஒரு பிரளயத்தை ஏற்படுத்தும் என சினிமா உலகம் மிரண்டது நிஜம்.
1998ல் வெளியானது கொடி பறக்குது படம்.

“பாரதிராஜா படம் மாதிரியும் இல்லை – ரஜினி படம் மாதிரியும் இல்லை’’ என்ற “ஓபனிங் டாக்’’ படம் கவிழ முதல் காரணம். இரண்டாவது காரணத்தை ஒரு பிரபல நாளிதழ் அப்போதே சொன்னது.

அந்த நேரத்தில், ‘ராஜாதி ராஜா’ வெளி வந்திருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது கொடியை நன்றாகவே பறக்க விட்டிருந்தார் பாரதிராஜா. ஆனால், ராஜாதி ராஜாவில் இளையராஜா. விசுவரூபம் எடுத்திருப்பார்.

அத்தனைப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். (இது ராஜாவின் சொந்தப்படம்) ‘பாடல்கள் தான், கொடி பறக்குது படத்தை விட ராஜாதி ராஜாவை ஹிட் அடிக்க வைத்து, வசூலிலும் சக்கைப் போடு போட வைத்தது’’ என அந்த நாளிதழ் குறிப்பிட்டிருந்தது. இது நூற்றுக்கு நூறு உண்மை.

அதிசய பிறவி

ரஜினிக்கு பல சூப்பர் ஹிட்களை கொடுத்த எஸ்.பி.முத்துராமன் – முதன் முதலாய் வழங்கிய தோல்வி படம் இது.

அப்படியே எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளையின் அப்பட்டமான காப்பி & பேஸ்ட்.
காட்சிகளும் கூட ஈயடிச்சான் காப்பி.

அதிசய பிறவி தோல்வி அடைந்ததில் ஆச்சர்யம் இல்லை. அதிசயமும் இல்லை.

நாட்டுக்கு ஒரு நல்லவன்.

ரஜினிகாந்தின் 30 ஆண்டு கால சினிமா சரித்திரத்தில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், அவருக்கு பெருத்த அடியை கொடுத்த ஒரே படம் இது தான்.

1991 ஆம் ஆண்டு படம் ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே காற்று வாங்கிய ஒரே ரஜினி படமும் இது தான். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இந்தப் படம் உருவானது.

கன்னடத்தில் அப்போது பிரபலமாக இருந்த நடிகர் வி.ரவிச்சந்திரன், நான்கு மொழிகளிலும் டைரக்ட் செய்தார். தயாரிப்பாளரும் அவரே.

கன்னடத்தில் அவரே ஹீரோவாக நடித்தார். தமிழ், இந்தியில் ரஜினி ஹீரோ.

தெலுங்கில் நாகார்ஜுனா நாயகன். படத்துக்கு நிறைய செலவு செய்தார்கள். ஏகப்பட்ட நாட்களையும் தின்றது. நிறைய நட்சத்திரங்கள் உண்டு. வருவார்கள். டயலாக் பேசுவார்கள். போவார்கள்.

இந்தப் படத்தின் கதை என்ன? நான்கு மொழிகளில் படத்தை உருவாக்கியதன் நோக்கம் என்ன?
ரஜினி ஏன் இந்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார்? – என்பதெல்லாம் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

பாபா

பாரதிராஜாவின் கொடி பறக்குது சினிமா போல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். ரஜினியை வைத்து, அண்ணாமலை, வீரா, பாட்ஷா என மூன்று மெஹா ஹிட் படங்களைக் கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா படம் என்பதால், இந்திய சினிமா உலகமே ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருந்த படம்.

சுரேஷ் கிருஷ்ணாவின் மேஜிக்கும் இல்லை. ரஜினியின் மேஜிக்கும் இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக லாஜிக்கும் இல்லாததால், பாபா – முத்திரை பதிக்கவில்லை.

அண்ணாத்த 

நவம்பர் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆகி மூன்றாவது வாரத்தில் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட இந்தப் படத்தை பற்றி அதிகம் சொல்லத் தேவை இல்லை.

’’வரிசையாக வெற்றிப் படங்கள் கொடுத்த தலைவருக்கு இந்தப் படம் ஒரு திருஷ்டி பொட்டு‘’ என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

ஆமோதிப்போம்.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment