அ.தி.மு.க-வுக்கு இது இலையுதிர் காலமா?

மாற்றம் என்பது எந்த இயக்கத்திற்கும் தவிர்க்க முடியாதது தான்.

ஆனால் அ.தி.மு.க.வில் அண்மைக் காலத்தில் உருவாகும் மாற்றங்கள் அதன் தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.

தொண்டர்கள் தான் இயக்கத்தின் தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தனித்துவமாக அ.தி.மு.க இயக்கத்தின் விதியைக் கட்டமைத்தவர் அதன் நிறுவனரான எம்.ஜி.ஆர்.

தொண்டர்களின் அரவணைப்பால் உருவான இயக்கத்திற்கு அவர் கொடுத்த மதிப்பு அது. அந்த விதியை எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றக்கூடாது என்பதில் தனிக்கவனம் செலுத்தினார் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. இயங்கிய போதும், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை எதிர்த்து யாரும் எந்தக் கேள்வியையும் எழுப்பியதில்லை.

அ.தி.மு.க. இயக்கத்திற்குள் சிலச்சில எதிர்வினைகள் இருந்திருக்கின்றன. எஸ்.டி.சோமசுந்தரம் போன்றவர்கள் சில விமர்சனங்களை எழுப்பியபோதும், அவரையும் அரவணைத்துச் செல்கிறவராகவே இருந்தார் எம்.ஜிஆர்.

அவரை எதிர்த்து தி.மு.க.வில் இயங்கிய மதுரை முத்து போன்றவர்களைக் கூட தன்னுடைய இயக்கத்தில் இணைத்துக் கொண்டு, அவர்களுக்கு உரிய மதிப்புக் கொடுத்தவர் அவர்.

ஜெயலலிதாவும் கூட தனக்கு எதிராக இயங்கிய ஆர்.எம்.வீரப்பன், காளிமுத்து, பி.ஹெச்.பாண்டியன், திருநாவுக்கரசு போன்றவர்களை அ.தி.மு.க.வில் இணைத்திருக்கிறார்.

சில காரணங்களுக்காகக் கட்சியை விட்டு நீக்கி, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திரும்பவும் அவர்களைச் சேர்த்த நிகழ்வுகள் நிறையவே அ.தி.மு.க.வில் நடந்திருக்கின்றன.

இதெல்லாம் குறிப்பிட்ட தலைமை சார்ந்த இறுக்கம் அவர்களிடம் இல்லை என்பதையே வெளிப்படுத்துகின்றன.

தன்னை விட, இயக்கம் முக்கியமானது என்கிற அக்கறை அவர்களிடம் இருந்தது. யாரையும் வலிந்து ஒதுக்கி வைத்து அவர்கள் காய்களை நகர்த்தவில்லை.

இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கான குரலாக ஒலிக்கிற ஜெயக்குமாரையே குறிப்பிட்ட சில காலத்திற்கு ஒதுக்கி வைத்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு சசிகலா பொதுச் செயலாளராகத் நேர்ந்தெடுக்கப்பட்ட போது, அதைப் பெரும்பாலான தலைவர்கள் ஆதரித்தவர்கள் தான்.

சசிகலா சிறைக்குப் போன பிறகு நிலைமை மாறுகிறது.

பல தலைவர்களுக்கு நேற்றைய நினைவுகள் மறந்து போனது. அவர்களுடைய தலைவியான ‘அம்மா’ ஜெ-வின் மொழியில் சொன்னால் ‘செலக்டிவ் அம்னீஷியா’வின் பாதிப்பு கடுமையாகி, தொலைக்காட்சிக்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை எல்லாம் மறந்து போனார்கள்.

அந்த அளவுக்கு அவர்கள் இயக்கப்பட்டார்கள். ஆட்சியையும், கட்சியையும் தக்க வைத்துக் கொள்ள, அதில் தங்களுடைய அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் தயாராக இருந்தார்கள்.

பொதுக்குழுவைக் கூட்டினார்கள். விதிகளை மாற்றியமைத்தார்கள். பொதுச்செயலாளர் என்று நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட பதவியே அவருடைய இயக்கத்தில் காணாமல் போனது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டு, ஓ.பி.எஸ்.ஸூம், ஈ.பி.எஸ்.ஸூம்  அமர்ந்து அதிகாரங்களைப் பிரித்துக் கொண்டார்கள். தேர்தல் ஆணையமும் அதை வழி மொழிந்தது தான் ஆச்சர்யம்.

புகழேந்தி

அதற்கு முன்பு இதே அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்த போது, கேள்வி எழுப்பி கட்சியின் சின்னமான இரட்டை இலையையே முடக்கிய தேர்தல் ஆணையம் தற்போது அனுமதித்தது.

கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்குத் தகுதியான பொறுப்புகள் வழங்கப்படவில்லை. இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். வழிகாட்டுதல் குழுவில் கூட அவர்கள் சேர்க்கப்படவில்லை.

ஒரு காலத்தில் கட்சியில் சில கேள்விகளை எழுப்பியவர்களுக்குக் கிடைத்த ஜனநாயக உரிமை கூட அண்மைக்காலத்தில் இல்லாது போயிற்று.

அ.தி.மு.க.வை விமர்சித்த பா.ம.க.வைப் பதிலுக்கு விமர்சித்தவரான பெங்களூரு புகழேந்தி அ.தி.மு.க.வை விட்டு உடனடியாக விலக்கப்பட்டார்.

தற்போது, எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருந்து வரும் மூத்த தலைவரான அன்வர் ராஜா கட்சிக் கூட்டத்தில் பேச முயற்சித்ததற்காகவும், ஊடகங்களில் பேசியதற்காகவும் கட்சியை விட்டு, செயற்குழு நடப்பதற்கு முந்திய இரவில் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

“அன்வர் ராஜாவை கட்சியை விட்டு நீக்கியது சரியானது தான். இல்லை என்றால் அவரை மாதிரிப் பலர் கட்சியில் பேசுவார்கள்” என்கிறார் அ.தி.மு.க.வின் தற்போதைய பிரச்சாரகரான ஜெயக்குமார்.

அ.தி.மு.க.வின் பொன்விழா நேரத்தில் எப்படிப்பட்ட நிலையில் அந்த இயக்கம் இருந்து கொண்டிருக்கிறது? சசிகலா உள்ளிட்டவர்களைக் கட்சிக்குள் இணைத்து இயக்கத்தைப் பலப்படுத்தலாம் என்று சொல்கிறவர்கள் உதாசினப்படுத்தப் படுகிறார்கள் அல்லது விலக்கப்படுகிறார்கள்.

இப்படி எத்தனை பேர்களைக் கட்சியை விட்டு விலக்குவார்கள்?

அ.தி.மு.க.வில் இருந்து அதிருப்தியுடன் வெளியறிவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் போய்ச் சேருகிறார்கள்.

அ.தி.மு.க. என்ற இயக்கத்தின் செயல்பாடு என்பது இது தானா?

புகழேந்தி, அன்வர் ராஜாவைத் தொடர்ந்து பல பேர் கட்சியை விட்டு விலக்கப்படலாம் என்கிற வதந்திகள் அலையடித்துக் கொண்டிருக்கின்றன.

ஐம்பது ஆண்டு காலம் எம்.ஜி.ஆராலும், ஜெயலலிதாவாலும் கட்டிக்காக்கப்பட்ட கட்சியின் நிலை இந்த அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறதே என்கிற கவலை அ.தி.மு.க.வின் மூத்த தொண்டர்களிடம் இருக்கிறது.

அதைத்தான் அன்வர் ராஜா போன்றவர்கள் பிரதிபலித்திருக்கிறார்கள்.

அன்வர் ராஜா

தலைமை என்கிற பெயரில் சில திருத்தங்களைச் செய்து, அ.தி.மு.க. என்கிற இயக்கத்தில் ஜனநாயகம் இல்லாத யதேச்சதிகாரத்தை ஏற்படுத்தினால் – லாபம் யாருக்கு என்பதை இன்றையக் கட்சித் தலைமை யோசிக்க வேண்டும்.

இல்லை என்றால் அடுத்து நடக்கவிருக்கும் நகராட்சித் தேர்தல் முடிவுக்குப் பிறகு அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கும்.

அந்த முடிவையும் கட்சித்தொண்டர்களும், அனுதாபிகளும் தான் உருவாக்கிக் கொடுப்பார்கள் என்பது நினைவிருக்கட்டும்!

– யூகி

Comments (0)
Add Comment