– கண்ணதாசன்
“இந்தியாவின் எதிர்காலத்தைக் காப்பாற்ற இளைஞர்கள் முன்னுக்கு வர வேண்டும்.
அரசியலுக்கு வருகிற ஒருவன் கவனிக்க வேண்டிய ஒன்று அச்சுதமேனனைப் போல நாணயமானவனா, திறமைசாலியாக, பொறுமைசாலியாக, பதவியில் இருந்தும் எண்ணெயும், தண்ணீரும் போல பதவியைக் கருதிக் கொண்டிருப்பவனாக இருக்க வேண்டும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் அவனுக்குக் கோபம் வரக்கூடாது.
ஒரு ஆயிரம் பேரைச் சந்திக்க வேண்டியிருக்குமானால், சந்தித்தே ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையை வைத்திருக்க வேண்டும்.
நடவடிக்கை எடுப்பதில் கடுமையான மனோபாவம் வேண்டும்.
இந்த நடவடிக்கையை இப்போது எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் வருமானால், உடனடியாக அதை எடுத்துவிட வேண்டும்.
நடவடிக்கை எடுக்கலாமா, கூடாதா என்று யோசித்துக் கொண்டே காலந்தள்ளி தவறு செய்துவிடக் கூடாது.
யோசித்துத் தள்ளிப்போட்டு ஒன்று பாழாவதை விட, ஒரு காரியத்தை அரசாங்கத்தில் இருப்பவன் செய்து, தவறு செய்து விடுவது தவறல்ல.
அந்தக் காரியத்தின் மூலம் அவன் பலன் தேடக்கூடாது என்பது தான் முக்கியம் என்பதை இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஒரு ஃபைலிலே கையெழுத்துப் போடக்கூடாது.
ஆனால் இந்த ஃபைலில் கையெழுத்துப் போடுவது சரி என்று உனக்குத் தோன்றிவிட்டால், கையெழுத்துப் போட்டுவிட வேண்டும்,
அதன் விளைவாக குற்றங்கள், தவறுகள் ஏற்படுமானால், அதை நீ சமாளித்துக் கொள்ள வேண்டும். காரணம், நீ லஞ்சம் வாங்கவில்லை.
இது சரி என்று கருதினாய்; கருதிய படியே செய்தாய். செய்த காரியம் தவறாகிவிட்டது; அதை எதிர்கொள்ள நீ கடமைப் பட்டிருக்கிறாய்.
நீ செய்தாய், நீ அதை முகம் கொடுத்துச் சமாளிக்க வேண்டியவன் என்று கருதிக் கொண்டு, அரசியலில் ஈடுபட வேண்டும்.”
– ‘நான் பார்த்த அரசியல் நூலில் இருந்து என் பிரார்த்தனை’ என்ற கட்டுரையில் இருந்து ஒரு பகுதி.
வெளியீடு; கண்ணதாசன் பதிப்பகம்