இரட்டைத் தலைமைக்கு அதிகாரங்களை வழங்கிய செயற்குழு!

அ.தி.மு.க தொண்டர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட செயற்குழு இன்று சென்னையில் நடந்துமுடிந்திருக்கிறது.

கூட்டம் நடப்பதற்கு முன்பே பாதுகாப்பாக அன்வர்ராஜா போன்று, சென்ற கூட்டத்தில் பேசப்பட்டவர்களைக் கட்சியில் இருந்தே வெளியேற்றிவிட்டார்கள்.

இதனால் செயற்குழு கூடுவதற்கு முன்பே ஒருவிதப் பீதியை உருவாக்கிவிட்டார்கள். அப்புறம் யார் வாயைத் திறந்து பேச முன்வருவார்கள்?

அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த பிறகு அந்தப் பொறுப்பில் தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டிருக்கிறார் தற்காலிகமாக.

செயற்குழுக் கூட்டத்தில் 11 தீர்மானங்களும், சில சட்டத்திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க அரசு எப்போது நிறைவேற்றப்படும் என்பதை உடனடியாக அறிவிக்காவிட்டால், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்பதும் தீர்மானங்களில் ஒன்று.

வழக்கம் போல தி.மு.க வுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிற அ.தி.மு.க செயற்குழு, ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவருக்குமான அதிகாரத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

சிறப்புத் தீர்மானங்களாக மூன்றைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இதன்படி அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களால் கழக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் வாக்கின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இனி பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டது நடக்காது.

கழகத்தின் சட்டவிதிகளை மாற்றும் அதிகாரம் படைத்த பொதுக்குழு மேலே சொன்ன முறையை மட்டும் திருத்த முடியாது.

சட்டவிதிகளில் மாற்றம் செய்ய கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கே அதிகாரம் உண்டு.

ஆக – சென்ற முறை ஒரு வழிகாட்டுதல் குழு அ.தி.மு.க.வை வழிகாட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டதை அப்படியே மாற்றி முழு அதிகாரத்தையும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வசம் குவிப்பதற்கான கூட்டமாக நடந்து முடிந்திருக்கிறது அ.தி.மு.க செயற்குழு.

ஏற்கனவே குழு மோதல்களும், முட்டல்களும், விவாதங்களும் குறையாத நிலையில் மேலும் விவாதங்களை வலுக்க வைத்திருக்கிறது அ.தி.மு.க. தலைமையின் இந்த நடவடிக்கை.

Comments (0)
Add Comment