சினிமாவில் பலருக்கு இப்படி நடந்திருக்கிறது. ஒரு படத்தில் அறிமுகமாக வேண்டிய நடிகர், நடிகைகள் ஏதோ காரணங்களால் அறிமுகமாகாமல் போவதும் பிறகு வேறு படத்தின் மூலம் அறிமுகமாவதும் நடந்திருக்கிறது.
இது சிலருக்கு மட்டுமல்ல, பல முன்னணி நடிகர், நடிகைகளுக்குமே நடந்திருக்கிறது. நடிகை சாவித்ரியும் இப்படியொரு நிலையை எதிர்கொண்டிருக்கிறார்.
எஸ்.எஸ்.வாசன் தனது ஜெமினி ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்தப் படம் ’மூன்று பிள்ளைகள்’.
அமெரிக்காவில் வெளியான, விக்டர் பிளமிங் இயக்கிய, ‘த வே ஆஃப் ஆல் பிளஷ்’ (The Way of All Flesh) என்ற மவுனப் படம் இந்தியாவிலும் அப்போது நன்றாக ஓடியது. சென்னையிலும் 25 வாரங்கள் ஓடி சாதனைப் படைத்தது.
இதைப் பார்த்த கன்னட திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான நாகேந்திர ராவ், தமிழில் அந்தக் கதையை படமாக்கலாம் என்று நினைத்தார்.
ஜெமினி நிறுவனம் தயாரித்த ’அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் சின்ன வேடத்தில் அவர் நடித்திருந்தார். அப்போது எஸ்.எஸ்.வாசன் அவருக்கு அறிமுகம்.
அந்தப் பழக்கத்தில் அவரிடம் இந்தக் கதையைச் சொன்னார். சரி என்று அவரும் தயாரிக்க முன் வந்தார். தமிழ், தெலுங்கில் உருவானது இந்தப் படம். இந்த கதையை பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் மெருகேற்றியதாகக் கூட சொல்வார்கள்.
படத்தை இயக்கிய நாகேஷ்வர ராவ் முக்கிய கேரக்டரில் நடித்தார்.
கண்ணாம்பா, எம்.கே.ராதா, (ஜெமினி) கணேசன், சுந்தரி பாய் உட்பட பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்த இந்தப் படத்துக்கு பி.எஸ்.அனந்தராமன் இசை அமைத்திருந்தார்.
கொத்தமங்கலம் சுப்பு, வி.சீதாராமன் பாடல்கள் எழுதி இருந்தனர். மொத்தம் 10 பாடல்கள். சில பாடல்கள் அப்போது வரவேற்பைப் பெற்றன.
ஜெமினி கணேசன் இந்தப் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருப்பார். அப்போது அவர் வெறும் கணேசன்தான்.
ஜெமினி நிறுவனத்தில் பணியாற்றிய அவர், இந்தப் படத்தின் காஸ்ட்டிங் அசிஸ்டெண்டாகவும் இருந்தார். இந்தப் படத்தின் ஒரு கேரக்டருக்கு நடிகை சாவித்ரியை சிபாரிசு செய்தார்.
அப்போது சாவித்ரிக்கு வயது 14. “சின்னப் பெண்ணா இருக்கியே, கொஞ்சம் நடிச்சுக் காட்டு“ என்று கேட்டு, அதைக் கண்டபின்தான் அவருக்கு சிபாரிசு செய்தார் ஜெமினி கணேசன்.
ஆனால், கடைசி நேரத்தில் அவருக்கு இந்தப் படத்தில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. நடித்திருந்தால், சாவித்ரி அறிமுகமான முதல் தமிழ்ப் படமாக இருந்திருக்கும்.
இந்தப் படத்தில், காமெடி நடிகர் சந்திரபாபு சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்தார்.
அவர் பிரபலமாவதற்கு முன் நடித்த படம் இது. பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருந்தாலும் இந்தப் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததுதான் அந்தக் கால சோகம்!
– அலாவுதீன்