கடைசி பென்ச் மாணவன் அஜித்!

அது 1971, மே 1, சனிக்கிழமை. கோடை வெயிலில் சற்றுக் கூடுதலாகவே தகித்துக் கொண்டிருந்தது ஹைதராபாத்.

அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் திருமதி. மோகினி. வாசலில் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தார் அவரது கணவர் சுப்ரமணியம்.

மோகினிக்கு சொந்த ஊர் கொல்கத்தா. நடுத்தர வர்க பெங்காலி குடும்பத்தில் பிறந்த மோகினி நன்கு படித்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் கொல்கத்தாவுக்கு புதிதாக வந்து குடியேறினார் சுப்ரமணியம்.

இவரது சொந்த ஊர் பாலக்காடு. அங்குள்ள ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்த சுப்ரமணியம் படித்து முடித்த பின் மருந்து விற்பனை பிரதிநிதியாக வாழ்க்கையைத் துவக்கினார்.

மிகத் திறமையாக பணியாற்றிய சுப்ரமணியத்துக்கு அடுத்தடுத்த பதவி உயர்வுகள் கிடைத்தன. கூடவே டிரான்ஸ்ஃபர்களும் காத்திருந்தது. அப்படி மாறி மாறி அவர் சென்று சேர்ந்த இடம் கொல்கத்தா.

அங்கு மோகினிக்கும் சுப்ரமணியம் என்கிற மணிக்கும் காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது. 1960-களின் இறுதியில் பல எதிர்ப்புகளை சமாளித்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களுக்கு முதல் மகன் பிறந்தான். அவனுக்கு அனுப்குமார் என்று பெயர் வைத்தனர்

. ஒரு சில வருடங்களுக்கு பின்னர்… இப்போது தன் இரண்டாவது பிரசவத்துக்காகத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் திருமதி மோகினி மணி.

அவர்களுக்கு இரண்டாவதாகவும் ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தைக்கு ‘அ’ வில் தொடங்கிய பெயர் வைத்ததால் இரண்டாவது மகனுக்கும் ‘அ’ என்ற எழுத்திலேயே பெயர் வைக்க அவர்கள் முடிவு செய்தனர்.

எத்தனையோ பெயர்களை தேடித் தேர்வு செய்து, இறுதியில் அவர்கள் ஓ.கே. செய்த பெயர் அஜித்குமார்.

நம்ம ‘தல’யின் குழந்தைப் பருவம் தொடங்கியது என்னவோ ஹைதராபாத்தில் தான் என்றாலும் சில வருடங்களில் திரு.சுப்ரமணியம் அவர்களுக்கு சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்தது. அவருக்கு மூன்றாவதாக ஒரு மகனும் பிறந்திருந்தார். கடைக்குட்டிக்கு அணில்குமார் என்று பெயர் வைத்தனர்.

அஜித்துடன் பிறந்த சகோதரர்களில் மூத்தவரான அனுப்குமார் இப்போது நியூயார்க் நகரில் உள்ள பங்குச் சந்தையில் உயர்பதவியில் இருக்கிறார்.

தம்பி அணில் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்துவிட்டு இப்போது அமெரிக்காவின் சியாட்டல் நகரில் பணியாற்றுகிறார். வீட்டிலேயே அஜித் மட்டும் தான் வேற மாதிரி.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் ‘ஆசான் மெமோரியல்’ என்ற தனியார் பள்ளியில் தான் அஜித் படித்தார். படிப்பில் படுசுட்டியெல்லாம் கிடையாது. சுமார் ரகம் தான். ஹோம் வொர்க் செய்வது, எக்ஸாம் எழுதுவது என்பதெல்லாம் ‘தல’க்கு அப்போதே செட் ஆகாத சமாச்சாரங்கள்.

ஆனால் அஜித்தின் அண்ணனும், தம்பியும் படிப்பில் படுகெட்டி. எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாக இருக்கும் முதல் வரிசை மாணவர்கள் அவர்கள். ஆனால் நம்ம ’தல’யோ கடைசி பெஞ்ச் மாணவன் தான்.

பள்ளி நாட்களிலேயே பைக்குகள் மீது ஏற்பட்ட காதல் அவரது கவனத்தையே திசை திருப்பியது. அஜித்தின் இந்த பைக் ரேஸ் ஆர்வத்துக்குக் காரணமான அந்த நபர் அவர் வீட்டிலேயே இருந்தார். அது வேறு யாரும் அல்ல. அஜித்தின் தந்தை திரு. சுப்ரமணியம் தான்.

சுப்ரமணியம் வேலை பார்த்த பார்மசுடிகல்ஸ் நிறுவனத்தின் எம்.டி. ஒரு பைக் ரேஸ் பிரியர்.

சனி, ஞாயிறுகளில் சென்னைக்கு அருகே இருக்கும் இருங்காட்டுக் கோட்டையில் பைக் ரேஸ், கார் ரேஸ் பார்க்க அஜித்தின் தந்தையையும் அழைத்துக் கொண்டு செல்வார் அவர்.

அப்போது பள்ளிச் சிறுவனாக இருந்த அஜித்தையும் தன்னுடன் ஒருமுறை பைக் ரேஸ் பார்க்க அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த நாள் தன் வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்று அஜித் அப்போது உணர்ந்திருக்க வாய்ப்பில்லை தான்.

முதல் முறை பைக் ரேஸ் பார்த்த நிமிடமே தானும் ஒரு ரேஸராக வரவேண்டும் என்று சொல்லத் தொடங்கினார் அஜித்.

ஆனால், அந்த நேரத்தில் அவரிடம் இருந்ததோ சைக்கிள் தான். அந்த சைக்கிளையே பைக் போல வேகமாக ஓட்டுவது, முன் சக்கரத்தை மட்டும் தூக்கியபடி ஓட்டி வீலிங் செய்வது, வேகமாக வந்து பேக் ப்ரேக்கை அடித்து சாலையில் ஸ்கிட் செய்வது என்று பைக் கனவுகளில் கடந்தது நாட்கள்.

அந்தக் காலகட்டத்தில் அஜித் ஒரு கிரிக்கெட் ப்ளேயர் வேறு. மிகத் திறமையான பேட்ஸ்மேன் அவர்.

அஜித் வளர வளர ரேஸ் மீதான தீராத காதலும் வளர்ந்து நின்றது. எப்படியோ பல்லை கடித்துக் கொண்டு பத்தாம் கிளாஸ் வரை வந்தவருக்கு திடீர் ஞானோதயம் பிறந்தது.

”நமக்கு இந்த படிப்பெல்லாம் செட் ஆகாது. பைக் ரேஸ் தான் நம்ம லைஃப்” என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.

வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும் பிடிவாதமாக பத்தாவதோடு படிப்பையே நிறுத்திக் கொண்டார். ஆட்டோமொபைல் துறையில் சாதிக்க அவர் மனம் ஏங்கியது.

பைக் மெக்கானிஸம் தெரிந்தவர்கள், பைக் ரேஸில் ஆர்வம் உள்ளவர்களை தேடிப் போய் நட்பாக்கிக் கொள்ள தொடங்கினார்.

ஆனால் பைக் ரேஸிங் துறையில் சாதிக்க வேண்டுமானால் அதற்கு நிறைய பணம் தேவை. முதலில் உயர் ரக பைக் ஒன்றை வாங்க வேண்டும். அதற்கு நிறைய பணம் தேவை.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அஜித்திடமோ அவ்வளவு பணம் இல்லை.

பணம் சம்பாதிப்பது எப்படி என யோசித்தவருக்கு பளிச்’சென ஒரு ஐடியா உதித்தது. அது என்ன?

-அருண் சுவாமிநாதன்

(இன்னும் தெறிக்கும்…)

Comments (0)
Add Comment