பாலியல் வன்முறை வழக்கு: ஒரே நாளில் தீர்ப்பு!

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரை கடந்த ஜுலை 22-ம் தேதி மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது தொடர்பாக மறுநாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்த வழக்கு அராரியாவில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த மாதம் 4-ம் தேதி சாட்சிகளின் வாக்குமூலம் பெறப்பட்டு, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்யப்பட்டு, தண்டனையும் அன்றே வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

இதன் மூலம் நாட்டிலேயே மிகவும் வேகமாக (ஒரே நாளில்) தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்காக இந்த வழக்கு மாறியிருக்கிறது.

ஒரே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டாலும், தீர்ப்பின் விவரம் கடந்த 26-ம் தேதிதான் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மத்தியப் பிரதேசத்தில் கற்பழிப்பு வழக்கு ஒன்றில் கடந்த 2018-ம் ஆண்டு 3 நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

Comments (0)
Add Comment