கல்வி சமூகத்திற்கானது தான்!

ஒரு நாள் மாலை வேளை ஒரு அலைபேசி அழைப்பு. திருப்பத்தூர் தூய நெஞ்சகக் கல்லூரியிலிருந்து வந்தது.

அழைத்தவர் “அருட்தந்தை ஆண்ட்ரூஸ் ராஜா உங்களைப் பார்க்க வேண்டும்” எனக் கேட்டார்.

“எதற்காக?” என்றேன்.

“புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சித் தலைவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவும், பயிற்சியும் வைத்திருக்கின்றோம். அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாங்கள் உரையாற்ற வேண்டும்” என்றார்.

“வாருங்கள் விபரத்தைத் தெரிவியுங்கள். முடியுமா என்று பார்க்கிறேன்” என்று கூறி வரச் சொன்னேன்

மறுநாள் மாலை என் இல்லம் தேடி வந்து, தாங்கள் என்னென்ன பணிகளை கிராமங்களில் செய்கின்றோம், இந்த உள்ளாட்சிகளுடன் இன்னும் அதிக அளவில் பணி செய்ய வேண்டியுள்ளது. அதற்காகவே இந்த ஏற்பாடு. எனவே தான் தங்களை நாடி வந்துள்ளேன்” என்றார் அருள்தந்தை ஆண்ரூஷ் ராஜா.

அவர் என்னிடம் அந்தக் கல்லூரி கிராமங்களில் செய்கின்ற பணிகளை விளக்கிக் கூறி ”நீங்கள் வந்தால் அது எங்களுக்கும் எங்கள் பணிகளுக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும்” என்று கூறிய பிறகு அவரிடம் மறுத்து என்னால் எந்தப் பதிலும் கூற முடியவில்லை.

“சரி நான் வருகிறேன்” என்று கூறினேன். உடனே தேதியைத் தாருங்கள் என்றார். நவம்பர் 20ஆம் தேதி வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கூறி அனுப்பி வைத்தேன்.

உடனே எல்லா ஏற்பாடுகளையும் செய்து அழைப்பிதழ் அடித்து முடித்து விட்டார். 19ஆம் தேதி காலை உங்களுக்கு வாகனம் அனுப்பி வைக்கிறேன். வந்து விடுங்கள் எனக் கூறினார் அருள்தந்தை ஆண்ரூஸ் ராஜா.

17ம் தேதி தமிழகப் பள்ளிக் கல்வித்துறை “இல்லம் தேடி கல்வி” திட்டத்தின் திட்ட இயக்குனர் தொலைபேசியில் அழைத்து 19ஆம் தேதி காலை இந்தத் திட்டச் செயலாக்கத்திற்கான ஒரு பயிற்றுனர் பயிற்சி ஒன்று தொட்டியத்தில் நடைபெறுகிறது.

கட்டாயம் வந்து மக்கள் பங்கேற்புடன் பொதுப்பள்ளிக் கல்வியை பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் எப்படி மேம்படுத்துவது என்று உரையாற்ற வேண்டும். எனவே 19ஆம் தேதி காலை உங்கள் இல்லத்திற்கு வாகனம் வந்துவிடும் என்றார்.

பொதுப்பள்ளிப் பாதுகாப்புக்காக பல தன்னார்வலர்களும், கல்வியாளர்களும் களத்தில் போராடி வருகின்றனர். இதனையும் தட்டிக் கழிக்க முடியவில்லை.

19ஆம் தேதி தொட்டியத்தில் நடைபெற்ற அந்த கல்வித்துறை பயிற்றுனர் பயிற்சியில் பேசி விட்டு மாலை அங்கிருந்து திருப்பத்தூர் ஐந்து மணி நேரம் பயணம் செய்து அந்தக் கல்லூரியை அடைந்தேன்.

இரவு ஓய்வு எடுத்துவிட்டு மறுநாள் காலை அந்தக் கல்லூரியை சுற்றிப் பார்த்தேன்.

அங்குள்ள பயிற்சி மையங்கள், விரிவாக்கப் பணிக்கான மையம், திறன் மேம்பாட்டுக்கு உருவாக்கப்பட்ட பயிற்சி மையம், நூலகம் என அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப்பார்த்தேன். வியக்க வைக்கும் அளவுக்குத் தூய்மையாக இருந்தது.

அங்கு படித்த மாணவர்கள் பலர் பணியில் இருப்பவர்கள், தொழில் செய்பவர்கள் என பலர் அங்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.

அந்தக் கல்லூரி உருவாக்கிய மாணவர்கள் பலர் செய்கின்ற பணிகளைக் கேட்டபோது எனக்கு அங்கு சென்றது பொருளுள்ளதாகவே பட்டது.

அந்த அளவுக்கு சமூகப் பார்வை கொண்ட மாணவர்களை அந்தக் கல்லூரி உருவாக்கியுள்ளது என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று.

விழா 11.15 மணிக்கு ஆரம்பித்தது. நிறையப் பெண்கள் வந்திருந்தனர். இந்த நிகழ்வுக்கான பல பணிகளை அங்கு பயிலும் மாணவர்களே ஆர்வமுடன் பணி செய்து கொண்டிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு பணியையும் அந்த மாணவர்கள் கவனமாகச் செய்து கொண்டிருந்தது இன்னொரு தனிச்சிறப்பு.

மிக எளிமையாக சிறிய வரவேற்புரையை அந்தச் சமூகவியல் துறையின் தலைவர் அருள் தந்தை ஆண்ரூஸ் ராஜா ஆற்றினார்.

அதன் பிறகு தலைவர்களுக்கு ஆடை அணிவித்து கௌரவித்து விட்டு என்னை உரையாற்ற அழைத்தார்கள்.

முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவர்களாக வந்தவர்களை பாராட்டிவிட்டு, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த கல்லூரியையும் பாராட்டிவிட்டு என்னுடைய கருத்துரையை ஆரம்பித்தேன்.

புதிய பஞ்சாயத்து முறைக்கும், பழைய பஞ்சாயத்து முறைக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கி இன்று வந்துள்ள பஞ்சாயத்து அரசாங்கமாக அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்டு அரசியல் சாசனத்தின் பகுதி IXல் சேர்க்கப்பட்டுவிட்டது.

எப்படி மத்திய அரசாங்கம் அரசியல் சாசனத்திலிருந்து அதிகாரங்களை எடுத்துச் செயல்படுகிறதோ, அதே போல்தான் மாநில அரசாங்கமும் அதே அரசியல் சாசனத்திலிருந்து அதிகாரங்களை எடுத்துச் செயல்படுகிறது.

இந்த இரண்டையும் போலத்தான் உள்ளாட்சியும் அதிகாரங்களை அரசியல் சாசனத்தில் எடுத்துச் செயல்பட வேண்டும். பொதுவாக அதிகாரங்களை யாரும் யாருக்கும் கொடுப்பதில்லை.

அதிகாரங்களை எடுத்துக் கொண்டு மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் இந்த அரசாங்கம். மத்திய அரசு முடிவுகளை எடுத்து அதிகாரிகள் மூலமாக செயல்படுத்தி வருகிறது. மாநில அரசு முடிவுகளை எடுத்து அதை அரசின் அதிகாரிகள் மூலமாக செயல்படுத்தி வருகின்றது.

அதேபோல்தான் உள்ளாட்சியும். மக்கள் மன்றம் முடிவெடுத்து அதை உள்ளாட்சி அலுவலர்களை வைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆனால், இந்த உள்ளாட்சி அதற்கு தந்திருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தும் ஆற்றலை வளர்த்துச் செயல்பட்டால் காந்தி கண்ட கிராம ராஜ்யத்தை அடைந்து விடலாம்.

ஆனால் உள்ளாட்சித் தலைவர்கள் சட்டத்தின் மூலம் தந்திருக்கின்ற அதிகாரங்களைத் தெரிந்தவர்களாக, புரிந்தவர்களாக, தெளிவு பெற்றவர்களாக ஆற்றல் பெற்றவர்களாக, சாதிக்க வேண்டும் என்று வேட்கை கொண்டவர்களாக, சமுதாயம் சீர்பட வேண்டும் என்ற பார்வை கொண்டவர்களாக இன்று மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கின்றனர் என்பதுதான் ஆய்வுகள் கூறும் செய்தி.

எனவே தலைமைத்துவத்தை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொண்டு செயல்பட வேண்டும். தலைமைத்துவத்தை வளர்ப்பது என்பது ஒரு மிகப் பெரிய போராட்டம். தேர்தலில் வெற்றி பெறுவதால், நாம் அதிகாரம் பெற்ற மக்கள் பிரதிநிதிதானே தவிர தலைவர்கள் அல்ல.

தலைவர் என்பவர் சமூகத்தை மாற்றுபவர், சாதனை படைப்பவர். அது தலைமைத்துவம் வளர்ந்தால் மட்டுமே சாத்தியம்.

உள்ளாட்சியில் வெற்றி பெற்றிருப்பது சாலைகள் போடுவதற்கும், தெரு விளக்குக்கள்ளைப் பராமரிப்பதற்கும், கட்டிடங்களைப் கட்டுவதற்கும் மட்டும் செயல்படுவதற்காக அல்ல, ஒட்டு மொத்த கிராமத்தில் இருக்கும் மக்கள் ஒரு உயர்ந்த உன்னதமான மானுட வாழ்க்கையை வாழ மக்களைத் தயார் செய்வதற்கும் அதற்கான சூழலை உருவாக்க வேண்டும்..

அரசு தரும் திட்டங்களை முறையாகப் பயன்படுத்தி, வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கும் பணி செய்யத்தான் இந்தப் புதிய உள்ளாட்சிகள்.

அத்துடன் இன்றைய மக்களின் மனோபாவத்தில் இருக்கும் பயனாளிச் சிந்தனையைப் போக்கி குடிமக்கள் சிந்தனையை வளர்த்து பொறுப்பு மிக்க குடிமக்களாக எல்லாப் பொது நிகழ்வுகளிலும் பங்கேற்கச் செய்து, ஒரு பங்கேற்பு மக்களாட்சியை அடித்தளத்தில் கட்டுவதுதான் இன்றைய உள்ளாட்சிகளின் பணியாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அனைத்தும் நிதியால் வருவதல்ல. மக்களின் சிந்தனையால், நடத்தையால் வருவது.

இன்றையப் பொதுத் தளத்தில் விவாதிக்கப்படுகின்ற அரசின் பயன்கள், பயனாளிகள் மற்றும் மனுதாரர்கள் என்ற பொருள்களை மாற்றி உரிமைகள் பற்றி விவாதிக்க, மக்களைத் தயார் செய்வதன் மூலம்தான் கிராமத்து மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

இன்றைய உள்ளாட்சிகள் என்பது அதிகாரப் பரவல் சார்ந்தது. அது ஏவல் சார்ந்தது அல்ல. அதிகாரப்பரவல் என்பதும் ஒரு போராட்டத்தைச் சந்திக்காமல் நடைபெறுவது அல்ல.

அதேபோல் இன்று அரசியல்சாசனத்தின் மூலமும், இன்ன பிற சட்டங்களின் மூலம் கிடைத்த உரிமை சார்ந்த சட்டங்களை நாம் கையிலெடுத்துப் போராடுவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

எனவே இந்த உள்ளாட்சியைப் பயன்படுத்தி பொறுப்பு மிக்க குடிமக்களை உருவாக்கி கிராமத்து மக்களின் உரிமைகளைக் கூட்டாக வென்றெடுக்கத் தேவையான ஒரு கூட்டு முயற்சியை எடுக்கத்தான் இந்த உள்ளாட்சி இப்படி அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய உள்ளாட்சிகள் என்பது ஒரு கூட்டுச் செயல்பாட்டை உருவாக்கி மக்கள் தயாரிப்பைச் செய்திட உருவாக்கப்பட்டதேயொழிய ஒற்றைத் தலைமையை நம்பி உருவாக்கப்பட்டதல்ல. உள்ளாட்சி அமைப்புக்கள் மூன்றடுக்காக உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு அடுக்கிலும் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவைகளின் உதவியோடு உள்ளாட்சியைச் செயல்பட வைக்க வேண்டும்.

அடித்தட்டில் கிராம ஊராட்சிகளை, கிராமசபை என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, அதன் செயல்பாடுகள் மூலம் செயல்பட வைத்துள்ளது நம் சட்டம். இந்த கிராம சபை தான் மக்கள் பாராளுமன்றம், மக்களாட்சியை வளர்த்தெடுக்கும் நாற்றங்கால்.

இந்த அமைப்பை எவ்வளவு புரிதலோடு நாம் நடத்துகின்றோமோ ,அந்த அளவுக்கு மக்களாட்சி மக்கள் மத்தியில் விரிவடையும் ஆழப்படும். அகலப்படும்.

இந்தப் பணிகளைச் செய்வதற்கான தலைமைத்துவத்தை வளர்த்துக் கொண்டு கிராமப் பஞ்சாயத்தில் தலைவர்கள் செயல்பட வேண்டும்.

இதில் மிக முக்கியமானது மக்களுடன் கிராம மேம்பாட்டுக்கான ஒரு கனவினை உருவாக்கிச் செயல்படுவதுதான் என்று கூறி தொடர்ந்து இந்தக் கல்லூரியை கிராமப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனக் கூறி என் உரையை நிறைவு செய்தேன்.

அதனைத் தொடர்ந்து நிக்கொலஸ் என்ற நண்பர் மாவட்ட வள நிறுவனத்தில் பஞ்சாயத்துக்காகப் பணிபுரிபவர்.

அவர் உங்கள் ஊரில் தற்போது திட்டமிடும் பணி ஆரம்பிக்க வேண்டும், அதை செய்வதற்கு இந்தக் கல்லூரியும், பஞ்சாயத்துக்கான மாவட்ட வள மையமும் உதவிட தயாராக இருக்கின்றது அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல பஞ்சாயத்துக்களுக்கு நான்கு பரிசுகள் ஆண்டு தோறும் சாதனை செய்யும் பஞ்சாயத்துக்களுக்கு வழங்கப்படுகிறது. அதனைப் பெறும் அளவுக்கு சாதனைகளைச் செய்யுங்கள். ஒவ்வொரு பரிசும் 10 லட்ச ரூபாய்.

தூய்மைப் பணிக்காக ஒரு பரிசு, கிராம சபைக்காக ஒரு பரிசு, திட்டமிடுதலுக்காக ஒரு பரிசு, குழந்தை நேயத்திற்காக ஒரு பரிசு என ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

அது மட்டுமல்ல, மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக புதிதாகத் திட்டம் தயாரிக்கும் பஞ்சாயத்துக்களுக்கும் ஒரு தனி நிதி ஆதாரம் இருக்கிறது. அதனையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறி முடித்தார்.

அதனைத் தொடர்ந்து மற்றுமொரு நண்பர் – அந்தக் கல்லூரியில் பணிபுரிபவர் கூறினார் “உங்கள் ஊரில் வேலை வேண்டும், எங்கும் வேலை கிடைக்கவில்லை என்று இருக்கும் அத்தனை பேரையும் அழைத்து வாருங்கள் இங்கு அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளித்து திறன் கூட்டப்பட்டு, அவர்களுக்கு வேலையும் வாங்கித் தருகின்றோம்” என்று கூறி எங்கள் துறையைப் பயன்படுத்தி மக்களுக்கு உதவிடுங்கள் என்ற கோரிக்கையோடு நிறைவு செய்தார்.

அவரது உரையினைத் தொடர்ந்து அதே கல்லூரியிலிருந்து மற்றொரு ஆசிரியர் கூறினார் “உங்கள் ஊரில் யாராவது புதிய சிறு குறு தொழில் துவங்க வேண்டும் என்று ஆவலுடன்  இருந்தால்ஃ, அந்த இளைஞர்களையும் பெண்களையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்.

நாங்கள் இலவசமாகப் பயிற்சியளித்து தொழில் தொடங்கத் தேவையான நிதிக்கும் ஏற்பாடு எங்கள் துறையின் மூலம் உதவி செய்கிறோம், எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து மற்றொருவர் கூறினார்,” எங்கள் மாணவர்களில் பலர் சிறிய நிறுவனங்கள் வைத்துள்ளனர், அத்துடன் அவர்களும் பயிற்சியளிக்கின்றனர், எங்களுடன் பல நிறுவனங்களும் இணைந்து மாணவர்களுக்கு உதவி செய்கின்றன.

தொழில் முனைவோராகச் செயல்படுவதற்கு அவர்களையும் எங்கள் மூலமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு தலைவர்களை பாராட்டி விட்டு அமர்ந்தார்.

அடுத்து சமூகப்பணித் துறை தலைவர் அருட்தந்தை ஆண்ரூஸ் அவர்கள்,

”உங்கள் எந்த ஆய்வுப் பணி திட்டமிடும் பணி விழிப்புணர்வு ஏற்படுத்தும் எந்தப் பணியாக இருந்தாலும் எங்கள் துறையில் படிக்கின்ற மாணவர்களையும், ஆராய்ச்சியாளர்களையும், ஆசிரியர்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

அடுத்து கல்லூரியின் முதல்வர் அருள் தந்தை மரிய அந்தோணி ராஜ் கூறினார்.

”எங்கள் கல்லூரியை எந்த அளவிற்கு உங்கள் கிராம மேம்பாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் ஊர்க் குழந்தைகளைப் படிக்க வேண்டும் என்றால் இந்த கல்லூரி அரசின் உதவிபெறும் தன்னாட்சிக் கல்லூரி தான். இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் ஊரில் உள்ள ஏழை எளிய மக்கள் ஆரோக்யமாக வாழ வேண்டும்.

அவர்களுடைய குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்ட வேண்டும், அவர்களுடைய வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

அந்தப் பணிகளைச் செய்வதற்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய தயாராக இருக்கின்றோம். அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பஞ்சாயத்துத் தலைவர்கள் சிலர் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். “சற்றுமுன் சிறப்புரையாற்றிய பேரா.பழனித்துரை கூறினார். மூன்று அரசாங்கங்களும் ஒரே அரசியல் சாசனத்திலிருந்து தான் தங்கள் அதிகாரங்களைப் பெறுகின்றன என்றார்.

அந்த அடிப்படையில் நாங்கள் முன் வைப்பது எங்கள் கிராமங்களில் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிப்புக்காக உங்கள் கல்லூரியை அணுகும்போது எப்படி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பளித்து அவர்கள் பரிந்துரை செய்கின்றவர்களுக்கு உதவிகள் செய்கின்றீர்களோ,

அப்படி நாங்கள் பரிந்துரை செய்யும்போதும் எங்களை அலட்சியப்படுத்தாமல் நாங்களும் மக்கள் பிரதிநிதிகள்தான் என்பதை வைத்து உதவிடுங்கள் ”எனக் கேட்டார் ஒரு கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்.

பலத்த கரவொலி எழுந்தது அரங்கில்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு பஞ்சாயத்துத் தலைவர் எழுந்து கூறினார்.

“இந்தக் கல்லூரியின் அழைப்பை ஏற்று இங்கு எதற்காக வந்துள்ளோம் என்றால் இந்தக் கல்லூரி நம் சமுதாயத்துடன் இணைந்திருக்கிறது, நம் குழந்தைகள் இங்கு படிக்கின்றார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான்” என்றார்.

இந்த நேரத்தில் ஓர் உண்மையை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தக் கல்லூரியில் பல மாணவர்களை நான் சேர்த்து விட்டிருக்கிறேன்.

இந்தக் கல்லூரி முதல்வர் யாரையும் நிராகரிப்பது கிடையாது, சமப்பார்வை கொண்ட அருள் தந்தை மரிய அந்தோணிராஜ். யார் சிபாரிசு செய்தாலும், அந்த மாணவர்களின் சமூகப் பொருளாதாரப் பின்புலம் என்ன என்பதை விசாரிப்பார்.

தாய் இல்லை, தந்தை இல்லை, ஒடுக்கப்பட்ட குடும்பம், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பம் என்றால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து சேர்த்துக் கொள்வார்.

யார் சிபாரிசு செய்கின்றார் என்பதைப் பார்த்து அவர் தருவது அல்ல, தகுதியான மாணவர் யார் என்று பார்ப்பார். அவர் செய்கின்ற உதவி சரியானதா என்று பார்த்து அந்த மாணவர்களின் தன்மை பார்த்து படிக்க அனுமதியளிப்பார்.

எனவே இங்கு மாணவர் சேர்க்கைக்கு நாம் கவலைப்படத் தேவையில்லை இந்தக் கல்லூரியின் சேவை கிராமங்களுக்குத் தேவையானது” என்று கூறி அவர் நிறைவு செய்து கொண்டார்.

அடுத்து மற்றொரு பஞ்சாயத்துத் தலைவர் பேசும்போது கூறினார் “கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ முடிவெடுக்க முடியாது. அந்தந்த கிராமங்களில்தான் முடிவெடுக்க முடியும்.

இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழையில் எங்கள் ஊரில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு அதிகாரிகளால் பார்வையிட்டு பரிதாபப்பட முடிந்ததே தவிர, பணி செய்ய முடியவில்லை. அவைகளை நாங்களே சரி செய்து கொண்டோம்.

எனவே கிராமங்கள் முன்னேற நமக்கு நாமே தான் என்ற நிலையில் இந்தக் கல்லூரி எங்களுடன் பணியாற்ற உதவிட முனையும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்” என்று கூறி முடித்துக் கொண்டார்.

நிறைவாக சமூகப்பணித் துறையின் தலைவர் அருட் தந்தை ஆண்ட்ரூஸ் ராஜா கூறினார்.

”இரண்டு மாதத்திற்கொருமுறை நாம் இப்படிப்பட்ட கூட்டத்தினைக் கூட்டி கிராம மேம்பாட்டுக்காக விவாதிப்போம், கைகோர்ப்போம், செயல்படுவோம், நம் கிராமங்களை முன் மாதிரியாகக் கொண்டு வருவோம்” எனக் கூறி மாணவர்களின் நன்றி நவிலல் நாட்டுப் பண்ணுடன் அந்த நிகழ்வு பிற்பகலில் நிறைவு பெற்றது.

அந்த நிகழ்வில் சமூகப் பணித்துறை தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் இணைந்து ஆர்வமாகப் பணி செய்து நிகழ்வை நடத்தியது பங்கேற்பு நிகழ்வுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

அந்த நிகழ்வுக்கு வந்து கல்லூரி முதல்வர் கலந்து கொண்டு பங்கேற்றுப் பேசியது துறை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஊக்கமளித்தது பாராட்டப்பட வேண்டியதாக இருந்தது.

கல்லூரியில் விரிவாக்கத்துறை மூலமாக என்னென்ன பணிகளையெல்லாம் கிராமங்கள் பெற்றுக் கொள்ளமுடியும் என்பதை பார்த்தபோது, இப்படி மாவட்டத்திற்கு ஒரு கல்லூரி இந்த உணர்வுடன் செயல்பட்டாலே, இந்தியக் கிராமங்களை மேம்பாடடையச் செய்து விடலாம்.

அந்தக் கல்லூரி விரிவாக்கத் துறையின் மூலம் செயல்படுவதை பார்த்தபோது, எவ்வளவு அரசுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த நம் கல்விக் கழகங்களால் முடியும் என்பது தெரிந்தது.

அரசுடனும் சமூகத்துடன் கைகோர்த்து ஒரு கல்லூரி செயல்படுவது கல்வி சமூகத்திற்கானது என்பதை உறுதி செய்கிறது. இவைகளைப் பார்த்து, இவர்கள் நிகழ்வில் பங்கேற்று விட்டு மாலை ஊருக்குப் புறப்படும்போது என் உள்ளத்தில் உதித்தது ஒன்றே ஒன்று தான்,

“எதற்கும் மனம் தயாரானால் மக்களுக்குத் தொண்டாற்றும் வாய்ப்புகளும் வந்து கொண்டேயிருக்கும் அதை இந்த நிறுவனம் நிரூபித்துக் கொண்டு பல கனவுகளோடு உயிர்த் துடிப்போடு செயல்பட்டுக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்படிப்பட்ட கல்லூரி ஒன்றைக் கிராமிய மேம்பாட்டிற்காகத் தயார் செய்ய வேண்டும்.

கட்டுரை ஆசிரியர் டாக்டர் க.பழனித்துரை

(தொடர்புக்கு: gpalanithurai@gmail.com)

காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர்.

சமூக நலத்திட்டங்கள் சார்ந்த 82 நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியிருப்பவர்.

க.பழனித்துரை

126 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருப்பவர்.

ஊடகங்களில் சுமார் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிற இவர், எழுபது சிறப்பு வெளியீடுகளையும் கொண்டு வந்திருக்கிறார்.

ஜெர்மெனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தின் வருகைதரு பேராசிரியர்.

பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வெளிவருவதற்குத் தன்னுழைப்பைத் தந்திருப்பவர்.

29.11.2021  12 : 30 P.M

Comments (0)
Add Comment