29.11.2021 2 : 30 P.M
கொரோனா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவானாலும், முதலில் அதன் மூலமாக சீனாவில் உள்ள வுஹான் நகர் சொல்லப்பட்டது. பிறகு ஆய்வு நடந்ததாகச் சொல்லப்பட்டு, பரவலுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
அப்புறம் – கொரோனா டெல்டா வைரஸ் உருவாகி, அந்தத் தொற்று பல உலக நாடுகளுக்குப் பரவி, சில கோடிப்பேரைப் பாதித்து, பல லட்சக்கணக்கானவர்களின் உயிர்களைப் பறித்துக்கொண்டு போனது.
தடுப்பூசியை இன்னும் முழுமையாகப் போட்டு முடிக்காத நிலையில், அடுத்து இன்னொரு பெரும் ஆபத்தாக உருவாகிப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது ‘ஒமைக்ரான்’ என்னும் புதிய வகைக் கொரோனா.
புயலுக்கு விதவிதமான பெயர்கள் சூட்டப்பட்டு அவை கலவரப்படுத்துவதைப் போல, கொரோனாவுக்குப் புதுப்புதுப் பெயர்கள் சூட்டப்பட்டு உலகளாவிய அளவில் கலவரப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
லேட்டஸ்டாகத் தற்போது ‘ஒமைக்ரான்’.
தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தப் புதுக் கொரோனாத்தொற்று பரவியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதிலும் எச்ஐவி நோயாளிகளிடம் இருந்து இந்த வீர்யமான நோய்த்தொற்று பரவியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் அந்த நாட்டிலிருந்தும், அந்தத் தொற்று பரவியிருக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படும் இஸ்ரேல், பெல்ஜியம், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், பல நாடுகளுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
சீனாவில் வுஹான் நகரிலிருந்து கொரோனாத் தொற்று பரவியிருப்பதாகத் தாமதமாகத் தான் ஆய்ந்து (!) சொல்லப்பட்டது.
தற்போது அப்படி இல்லை. மூன்றாவது கொரோனா வகையான ‘ஒமைக்ரான்’ தொற்று கண்டுணரப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே தென்னாப்பிரிக்காவில் இருந்து தான் பரவியிருக்கிறது என்பதை உடனடியாக ‘ஆய்வு’ செய்து அறிவித்து விமானத் தடையையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் இதுவரை தென்னாப்பிரிக்க அரசு தரப்பில் இருந்து ‘ஒமைக்ரான்’ தொடர்பான விளக்கம் எதுவும் தரப்படவில்லை.
அதிசயமாக ஒமைக்ரான் ‘மூலம்’ உடனே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மற்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கும்போது, தென்னாப்பிரிக்க நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் சதவிகிதம் வெறும் 24 சதவிகிதம் மட்டுமே.
இதில் இன்னொரு ஆபத்தான அம்சம் – புதிதாக உருவாகியிருக்கிற தொற்று வழக்கமாகப் போடப்படும் தடுப்பூசிகளுக்கெல்லாம் கட்டுப்படாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இவ்வளவு தூரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் தொற்றைக் கட்டுப்படுத்த தென்னாப்பிரிக்காவில் என்ன செய்யப் போகிறார்கள்?
தென்னாபிரிக்காவை கொரோனாவைக் காரணம் காட்டித் தனிமைப்படுத்தப் போகிறார்களா?
ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கிற தென்னாப்பிரிக்கா இந்தப் பெருந்தொற்றை எப்படிச் சமாளிக்கும்? உருவான இடத்தில் எத்தகைய பாதுகாப்பும், தடுப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட இருக்கின்றன?
அதே சமயத்தில் மற்ற நாடுகளுக்குப் பரவாமல் தடுப்பதற்குத் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறதா?
முக்கியமாக இந்தியா இந்தப் பெரும் தொற்றை எப்படிச் சமாளிக்கப்போகிறது?
இரண்டாவது அலை என்று சொல்லப்பட்ட கொரோனாவே நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் பேருக்கு மேல் பரவிக்கொண்டிருக்கிறது.
அதன் பாதிப்பிலிந்தே இன்னும் முழுமையாக நாம் விடுபடாத நிலையில், மூன்றாவதாக உருவான ‘ஒமைக்ரான்’ தொற்றை எப்படிச் சமாளிக்கப்போகிறோம்?
அணு ஆயுதப் போர் உருவானால் ஏற்படுத்தும் பேரழிவைப் பற்றிச் சுற்றுச் சூழலியலாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
இப்போது உலகளாவிய இணைப்புச் சங்கிலி நெருக்கமாக இருக்கும் நேரத்தில், விதவிதமான கொரோனாத் தொற்றை முன்வைத்து பல உலக நாடுகளை அச்சுறுத்தும் உள் அரசியல் விபரீதம் துவங்கிவிட்டதா?
நாளைய இளம் தலைமுறை இதை எப்படிச் சமாளித்து வளரப் போகிறது?
- யூகி