எம்ஜிஆர் வற்புறுத்தி வரச்சொன்ன இசையமைப்பாளர்!

“எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதி ஏ.வின்சென்ட் இயக்கிய பழைய படம் ‘முறைப்பெண்’. அதில் வரும் ஒரு பாடலை எப்போது கேட்டாலும் மனம் கலங்கும்.

கரயுன்னோ புழ சிரிக்குன்னோ
கரயுன்னோ புழ சிரிக்குன்னோ
கண்ணீருமொலிப்பிச்சு
கைவழிகள் பிரியும் போல்
காயுன்னோ புழ சிரிக்குன்னோ

– என்ற பல்லவியிலேயே அலாதியான ஒரு துக்கம் உடலுக்குள் பரவ ஆரம்பிக்கும்.

மலையாளத் திரையிசையில் தனித்துவத்தை உருவாக்கிய ஆரம்ப நாள் இசையமைப்பாளர்களில் ஒருவரான பி.ஏ.சிதம்பரநாதன் மலையாளிகளுக்குக் கொடுத்த காலத்தை வென்ற நன்கொடை இந்தப் பாடல்.

மலையாளம் மணக்கிற பாடல் என்று சொல்லப்பட்டாலும், இதில் மெல்லிய தமிழ் இழையோடியிருக்கிறது என்று யோசித்திருக்கிறேன். அண்மையில் மறைந்த சிதம்பர நாதனைப் பற்றி வெளிவந்த செய்திகளை வாசித்த பின்னர் என்னுடைய சந்தேகம் நிவர்ததியானது.
சிதம்பரநாதன் தமிழ் நாட்டுக்காரர். அன்று திருவிதாங்கூரின் பகுதியாக இருந்த கன்னியாகுமரி பூதப்பாண்டியில் பிறந்தவர். அப்பா அருணாசல ஆசானின் பாட்டுக்கள் தாம் பிள்ளை சிதம்பர நாதனை இசை மீது காதல் கொள்ளச் செய்திருக்கிறது.

மார்த்தாண்டம் நாகமணி, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை ஆகியவர்களிடம் வாய்ப்பாட்டும், மிருதங்கமும் கற்றுக் கொண்டிருந்திருக்கிறார். ராஜமாணிக்கம் பிள்ளையிடமே வயலினும் கற்றுக் கொண்டிருந்திருக்கிறார் .

அங்கே அறிமுகமான இசையரசு எம்.எம். தண்டபாணி தேசிகர் தான் சிதம்பரநாதனை சென்னைக்குக் கொண்டு வந்தவர். நீண்டகாலம் இசை உதவியாளராக இருந்து 46 ல் இசையமைப்பாளர் ஆனார்.

72 வரை இசையமைப்பாளராகப் பணியாற்றினாலும், அவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை குறைவு. திரையுலகின் புறக்கணிப்பால் இசையமைப்புப் பணியிலிருந்து விலகியவர். பக்திப்பாடல்களுக்கும், மெல்லிசைப் பாடல்களுக்கும் உருவம் கொடுத்தார்.

திரையுலகில் அவருக்கு நெருக்கமாக இருந்த நண்பர் ஒருவர் அவரை மறுபடியும் சினிமாவுக்கு இசையமைப்புச் செய்ய வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.

என்னை வேண்டாம் என்று சொன்ன சினிமா எனக்கும் வேண்டாம் என்று நிரந்தரமாக விலகியே இருந்தார் சிதம்பர நாதன். அதில் அந்த நண்பருக்கு வருத்தம். அந்த நண்பரின் பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

மேலே உள்ள மலையாளப் பாடலின் மொழி பெயர்ப்பு :
அழுகிறதா நதி சிரிக்கிறதா
அழுகிறதா நதி சிரிக்கிறதா
கண்ணீரைச் சிந்திக் கொண்டு
கிளை வழிகள் பிரியும்போது
அழுகிறதா நதி சிரிக்கிறதா?

– 2007 செப்டம்பர் மாதம் எழுதப்பட்ட கட்டுரை.

நன்றி: அந்திமழை பதிப்பகம் வெளியிட்ட சுகுமாரன் எழுதிய ‘வேழாம்பல் குறிப்புகள்‘ நூலில் இருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment