ஜனநாயகத்துக்கான உண்மையான விளக்கம் என்ன?
ஜனநாயகம் என்பது, பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்.
இந்த அவையில் கிட்டத்தட்ட நான் மட்டும்தான் – அல்லது நண்பர் பேராசிரியர் ரத்தின சாமியையும் என்னுடன் சேர்த்துக்கொள்ளலாம்; வேறு யாருடைய உதவியையும் இங்கே நான் எதிர்பார்க்க முடியாது.
எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் நாங்களே ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதாக உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார். எல்லோருமே என்னைத் தாக்கும்போது அது பிரச்சினையாகத்தான் இருக்கிறது;
இருந்தாலும் நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதைச் சொல்லாமல் விடுவது என்னுடைய கடமையிலிருந்து தவறிய செயலாகிவிடும்.
எனவே, இப்போதைய மசோதா முழுக்க முழுக்க அதிருப்தியையே தருகிறது என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தி ஆட்சிமொழியாவதை எதிர்த்து உணர்ச்சிபூர்வமாகத் தெரிவிக்கப்படும் எதிர்ப்பை இந்த மசோதா கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை;
இந்த எதிர்ப்பு இந்தியாவின் ஏதோ ஒரு சிறு பகுதியிலிருந்து வரவில்லை. தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் வருகிறது.
என்னுடைய நண்பர் பூபேஷ் குப்தா (கம்யூனிஸ்ட்) இன்றைக்கென்று பார்த்து ஆங்கிலத்தை விரட்டியடித்தே தீர வேண்டுமென்று முடிவெடுத்து விட்டார். எனவே, ஆங்கிலத்துக்கு எதிராகக் கடுமையாக ஆங்கிலத்திலேயே பேசி விட்டார். ஷேக்ஸ்பியரின் நாடகப் பாத்திரங்களான ரோமியோ, ஜூலியட்டைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை..
தமிழ் என்றவுடனேயே எனக்குப் பெருமிதம் தோன்றுகிறது. அப்படி ஒரு எண்ணம் ஆங்கிலம் தொடர்பாக எனக்கு வருவதில்லை. எனது மாநிலத்தில் தமிழ்தான் ஆட்சிமொழி. நான் இங்கேதான் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறேன்.
என்னுடைய மாநிலத்தில் தமிழில்தான் பேசுகிறேன் என்பதை குப்தாவின் நண்பர் அவருக்குச் சொல்லியிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டை காங்கிரஸ் ஆண்டாலும், அங்கே ஆட்சிமொழி தமிழ்தான். பள்ளிக்கூடங்களில் உயர் வகுப்புகளில்கூட பயிற்று மொழியும் தமிழ்தான்.
தாய்மொழிதான் ஆட்சிமொழியாகவும் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று எங்கள் மாநில அரசு மீது நான் செல்வாக்கு செலுத்துவதைப் போல, மேற்கு வங்க அரசு மீதும் பூபேன் குப்தா செல்வாக்கு செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..
பூபேஷ் குப்தா: மன்னிக்கவும், என்னால் அதைச் செய்ய முடியாது.
சி.என்.அண்ணாதுரை: அவரால் செல்வாக்கு செலுத்த முடியாது என்பதற்காக அனுதாபப்படுகிறேன்; நான் ஆங்கிலத்துக்காக மன்றாடுகிறேன்.
ஆங்கிலத்திலேயே பேசுகிறேன் – ஆங்கிலத்தால் மிகவும் கவரப்பட்டு அல்ல: என்னுடைய தாய்மொழியைவிட ஆங்கிலத்துக்கு உயர்ந்ததொரு இடத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக அப்படிப் பேசவில்லை.
இந்திய மாநிலங்களுக்கிடையே உரையாடலுக்கும் தகவல் பரிமாற்றத்துக்கும் ஆங்கிலம் எளிதான மொழியாக இருக்கிறது என்பதற்காக. நன்மைகளையும் தீமைகளையும் சரிசமமாகப் பகிர்ந்து கொடுக்க ஆங்கிலம் நமக்கு நல்ல ஊடகமான மொழி
இந்தியா ஒற்றை நாடு அல்ல; ஒரே மொழி பேச!
இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழி வேண்டும் என்று பலரும் பல விதங்களில் வாதாடினர்; அது ஏற்கப்பட்டால் இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் ஒன்றைத்தான் பொதுமொழியாக ஏற்க வேண்டும்.
அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தியா ‘ஒற்றை நாடு’ என்றால் இந்த வாதம் ஏற்கத்தக்கதே. ஆனால், இந்தியா ‘கூட்டாட்சி நாடு’. இந்தியச் சமூகம் பன்மைத்தன்மை கொண்டது.
எனவே, ஒரேயொரு மொழியைப் பொதுமொழியாக வைத்துக்கொள்வது ஏனைய மொழி பேசுவோருக்கெல்லாம் அநீதியைச் செய்வதாகிவிடும். அது மட்டுமல்ல சமூகத்தின் பெரும் பகுதி மக்களால் அம்மொழியைப் படிக்க முடியாமல் குறைகள் ஏற்படும்.
இந்தியா ஒரே நாடு அல்ல; இந்தியா பல்வேறு இனக் குழுக்களையும் மொழிக் குடும்பங்களையும் கொண்ட நாடு. இதனாலேயே இந்தியாவை ‘துணைக் கண்டம்’ என்று அழைக்கிறார்கள்.
எனவேதான், ஆட்சிமொழி ஒரே மொழியை நம்மால் ஏற்க முடியவில்லை. இதை நான் சொல்வதற்காக காங்கிரஸ் நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும் – தேசிய கீதங்களாக இரு பாடல்களை நம் நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது, ‘ஜனகண மன’ என்ற தேசிய கீதமும், ‘வந்தே மாதரம்’ என்ற தேசத் தாய் வாழ்த்துப் பாடலும் ஏற்கப்பட்டுள்ளன, இந்த இரண்டுமே இந்தியில் எழுதப் பட்டவை அல்ல’.
என்னுடைய நண்பர் பூபேஷ் குப்தாவைப் போல அவையும் வங்காளத்திலிருந்து வந்தவை. இந்தி மொழி மிகவும் முன்னேறிவிட்டது என்று உள்துறை அமைச்சர் எவ்வளவுதான் பேசினாலும் இந்தியின் நிலை இதுதான்;
ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையுள்ள மொழி என்னுடையதாக இருக்கும்போது – அதைப் பொதுமொழியாக என்னால் ஏற்கச்செய்ய முடியாத நிலையில் – “நன்றாக முன்னேறிவிட்டது; இந்தியைப் பொதுமொழியாக வைத்துக்கொள்வோம்” என்று உள்துறை அமைச்சர் பேசுவதால் எனக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்வது எப்படி?
இந்தியாவின் மொழிகளில் – வழக்கொழிந்துவிட்ட சம்ஸ்கிருதம் நீங்கலாக தமிழுக்குத்தான் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய இலக்கிய மரபு இருக்கிறது.
தமிழில் இயற்றப்பட்ட ‘தொல்காப்பியம்’ என்கிற இலக்கணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வெளியிட குடியரசுத் தலைவர் எங்களுடைய மாநிலத்துக்குச் செல்கிறார்.
‘தொல்காப்பியம் என்பது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் இயற்றப்பட்ட இலக்கண நூல், அத்தகைய பாரம்பரியம் எங்களுக்கு இருக்கிறது. ஆங்கில எடுபிடிகளைப் போலப் பேசுகிறோம் என்று நண்பர் பூபேஷ் குப்தா நினைக்க வேண்டாம்.
இந்தி தேசிய மொழியாகவும் ஆட்சிமொழியாகவும் வேண்டும் என்று வாதிட்ட பூபேஷ் குப்தா இன்னமும் இந்தி படிக்கவோ பேசிவோ முயற்சிகளே எடுக்கவில்லை.
– 1963 மே மாதம் மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா பேசியதிலிருந்து ஒரு பகுதி…
பேச்சின் தலைப்பு: இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்.