இந்திய அரசியல் சாசன தினத்தன்று பேசிய பிரதமர் மோடி “தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தால் ஒரு கட்சி நடத்தப்படுவதும், ஒட்டு மொத்த அமைப்பையும், அந்தக் குடும்பம் கட்டுப்படுத்துவதும் வளமான ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்” என்றிருக்கிறார்.
இதை காங்கிரசுக்கு எதிரான விமர்சனம் என்று சொல்கிறவர்கள் பல மாநிலங்களிலும் பா.ஜ.க அதே குடும்ப அரசியலைச் செய்திருப்பதையும், தேசிய அளவில் அமித்ஷாவின் வாரிசுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்தும், மேனகா காந்தி, வருணுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
பல தொலைக்காட்சி சேனல்களில் இதுவே விவாதப் பொருளாகி இருக்கிறது.
கடந்த தேர்தலின் போது பா.ஜ.க பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டபோது இதே வாரிசு அரசியலை அப்போது கணக்கில் எடுத்துக் கொண்டதா என்கிற கேள்வியையும் எழுப்புகிறார்கள்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவில் ஆரம்பித்து, தமிழகத்தில் தே.மு.தி.க.வை, பா.ம.க.வை, தமிழ் மாநில காங்கிரஸை எப்படி ஆதரித்தது என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
இதைவிட, ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பேச்சாளர் ஒருவர் கேட்டார்.
“இவ்வளவு தூரம் வாரிசு அரசியலை விமர்சித்துப் பேசுகிற பா.ஜ.க.வுக்குள் வாரிசு அரசியல் எந்த அளவுக்குத் தழைத்தோங்கி இருக்கிறது என்று ஆய்வாளர் ஒருவர் அரசியல் ஆய்வை நடத்தியிருக்கிறார். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?”
பெரும் விவாதத்தைக் கிளம்பும் கேள்வி தான்!
*