உறவுகள் தொடர்கதை – 16
தாம்பத்தியம் சிறந்த முறையில் அமைவது ஆண் / பெண் இருவரையும் பொறுத்ததுதான் என்றாலும், இதில் பெரும்பாலான சீர்கேடுகள் விளைவது ஆணினால்தான். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
வெளி வட்டாரப் பழக்கங்கள் அதிகமாக இருப்பது, உணவுப் பழக்க வழக்கங்கள், உடலைக் கெடுக்கும் பழக்கங்கள், பணி, பெற்றோர், குடும்பம் ஆகியவற்றில் ஏற்படும் சூழ்நிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்தான். மேலும், உடலியல் ரீதியாகவும், தூண்டுதலின் பேரில் உறவில் செயல்படுவதும் அவன்தான்.
இதற்காக பெண்கள் செயல்பாடுகள் குறைவானவை என்று சொல்லவே முடியாது. வினையூக்கியாக செயல்படுவது மிக முக்கியமான அம்சம்.
இரு பாலருக்கும், உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் சரியாக வைத்துக் கொள்ளாவிட்டால், நாளடைவில் உறவு விரிசல் கண்டு, வெகு விரைவில் உடைந்து போகும் நிலையை அடையும். முதலில் உடல்நலம் பற்றிப் பார்க்கலாம்.
உடலில் ஊளைச் சதை இல்லாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். இது தோற்றப் பொலிவை கெடுப்பதுடன், உறவிலும் அதிருப்தியை அளிக்கும். தொப்பை என்பது இப்பொதெல்லாம், இள வயதினருக்கு வந்து விடுகிறது. இதனால் உடல் எடை கூடும்.
உடலின் பாரம், அதனால் இழுத்து செல்லத் தேவைப்படும் கூடுதல் சக்தி, அதை சாத்தியமாக்க, கூடுதல் பணி செய்ய வேண்டியிருப்பதால், உடலின் சக்தி அதற்கே அதிகமாகத் தேவைப்படுகிறது. அப்படி இருக்கும்போது, தாம்பத்திய உறவுக்குத் தேவைப்படும் சக்தி தேவைப்படும் அளவுக்குக் கிடைக்காது.
இதோடு கூட, படித்தவர்களாக இருந்தாலும், உடல் உழைப்பு மட்டுமே செய்யும் படிக்காதவர்களாக இருந்தாலும், பொதுப் பழக்கம் மது அருந்துவது என்றாகி விட்டது. இந்த மதுப்பழக்கம், போதையைக் கொடுக்கிறது.
பொதுவான உடல் செயல்பாடுகளின் வேகம், கவனப் படுத்தல் ஆகியன குறைகிறது. இது தாம்பத்தியத்திலும் எதிரொலிக்கும். அப்படியே ‘போதை வேகத்தில்’ துவங்கினாலும், மிக விரைவிலேயே, உறவு முடிந்துவிடும்.
இப்படியே தொடர்ந்தால், பிரச்சினைதான். இதற்கு மேல் விவரங்கள் தேவையானால், வலைதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
இது சுவாசப் பையான நுரையீரலை நேரடியாக பாதிக்கிறது. மூச்சு விடுவதற்கு, உடலின் சக்தி அதிகமாகத் தேவைப்படுகிறது.
தாம்பத்திய உறவு என்பது சந்தோஷத்திற்காகத்தான். ஆனால், அந்த சந்தோஷம் அனுபவிக்க தெம்பு வேண்டும். அந்த சக்தி, சிகரெட் பழக்கத்தால் குறைந்து கொண்டே வரும். அப்புறம் என்ன? பிரச்சினைதான்.
மூன்றாவதாக ஆங்கிலத்தில் Junk food என்ற அடைமொழியோடு அழைக்கப்படும், பிட்ஸா, பர்கர், வகையறாக்கள். இதை விளம்பரத்தின் மூலம், மிகச் சாதாரணமான மாற்று உணவு என்பதைப் போல கொண்டு வந்து விட்டார்கள்.
ஆனால் இந்த உணவு வகையறா எந்த அளவுக்கு தாம்பத்திய வாழ்க்கையைக் கெடுத்து நாசமாக்குகிறது என்பதைப் பற்றி, நமது தலைநகரமான டில்லியில் நடத்திய ஆய்வின் மூலம் நிரூபித்து உள்ளார்கள்.
’ஜங்க் உணவுகளில், முழுவதுமே, டிரான்ஸ் கொழுப்புக்கள் நிறைந்தவை. இதோடு கூட மிக அதிக அளவிலான சோடியமும் கலந்து இருக்கிறது.
இதை சொல்லியிருப்பவர், மும்பையைச் சேர்ந்த, டாக்டர் கீதாஞ்சலி பிடே என்ற விளையாட்டு மற்றும் உடல் திறன் உணவியலாளர். இந்த வகையான உணவுகளை சாப்பிடுவதால், உடல் பருமன் கூடுகிறது.
உறவில், ஆண்களின் உடலியல் செயல்பாடுகளுக்கு மிக முக்கிய காரணியான, டெஸ்டோஸ்ட்ரோன் என்ற ஹார்மோன்களின் அளவு குறைகிறது. போதாக் குறைக்கு, ரத்த அழுத்தத்தின் ஏற்ற இறக்கங்கள், அதிகமாகிறது.
இது ஆண்களின் வீர்யத்தையும், உறவுக்கான கிளர்ச்சியடையும் தன்மையையும், பாதிப்படைய வைக்கிறது. இந்த உணவுகளில் உள்ள மிகக் குறைவான சத்துக்கள் உடலில் ஹார்மோன்களில் சமச் சீரற்ற நிலையை உருவாக்குகிறது.
பெண்களையும் இது விட்டு வைப்பதில்லை. இதை உண்பதால், பெண்களின் உடல் பருமன் கூடுகிறது. மலட்டுத் தன்மை உருவாகக் காரனமாகிறது. மேலும் அதிக உடல் பருமன், அழகையும் கெடுக்கும்.
பொதுவாக, தம்பதியர்களுக்குள், மிக விரைவாகவே பரஸ்பரப் புரிதல், இனக் கவர்ச்சி ஆகியன நீர்த்துவிடும். அந்தச் சமயத்தில், உடல் பருமனாகி, அழகும் போனால், ஈர்ப்பு என்பது தானாகக் குறையும் அல்லவா? இதையும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம்.
மேக்ஸ் ஹெல்த் கேர் என்ற டெல்லியைச் சேர்ந்த பல கிளைகளைக் கொண்ட மருத்துவமனை, குப்பை உணவுகளைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக சாப்பிட்டு வரும், 800 ஆண்கள் மற்றும் பெண்களைச் சந்தித்து ஒரு கணக்கெடுப்பு ஆய்வு நடத்தியது. இவர்கள் அனைவருமே 21 லிருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இதில் பெரும்பாலானவர்களுக்கு, பாலுறவில் குறைபாடுகள் இருப்பது தெரிய வந்தது. அதில் 18% பேர்களுக்கு அந்த ஆசையும், தூண்டுதல் உணர்வும் மிகவும் குறைந்து போய் விட்டது எனத் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கு மிக முக்கிய உடலியல் காரணமாக, தங்களது உடல் எடை ஏறுமாறாக ஆகிவிட்டதுதான் எனவும் கூறியிருக்கின்றனர். இந்தத் தகவலை மெயில் டுடே வெளியிட்டுள்ளது.
இவை தவிர, மன நலமும், தாம்பத்திய வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். இன்றைய விரைவான உலகில், அடுத்து என்ன என போய்க் கொண்டே இருக்க வேண்டியதிருக்கிறது என நினைப்பவர்கள் மிக ஏராளமானோர் இருக்கின்றனர்.
மனதில் அலுவலக அல்லது பணியிட டென்ஷன்களை வைத்துக் கொண்டு, ‘சந்தோஷமாக’ இருக்க மனம் ஒப்பாது. இதைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும்.
இதில் மிக முக்கியமான உண்மை என்னவென்றால், டென்ஷனை வைத்துக் கொண்டு, மற்றவர்களிடம், உரையாடலாம், பழகலாம், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.
ஆனால், மிகத் தனிமையான தருணமான தாம்பத்திய உறவு என வரும்போது, மனமும் உடலும் சம அளவில் ஒத்துழைத்தால்தான், வழக்கமான திருப்தி என்பது சாத்தியமாகும்.
மனம் ஒரு பக்கம் எதையோ நினைத்து இருக்கும்போது, எப்படி உடலோடு சேர்ந்து முழுமையாக ஒத்துழைக்கும்?
அதனால்தான் பெரியவர்கள், “எந்த விதமான சண்டை, பிரச்சினைகளைப் படுக்கையறைக்குக் கொண்டு போகக் கூடாது” என்று கூறியிருக்கிறார்கள். உறவில் இரு பாலருக்கும் சம அளவில் பங்கும் பொறுப்புகளும் இருக்கின்றன.
திருமணமான புதிதில் சம அளவில் காணப்படும் இந்த ஆர்வம், சிறிது காலம் ஆனதும், எதனாலேயோ, சந்தோஷப் படுத்த யத்தனிப்பு செய்ய வேண்டியது ஆண் மட்டும்தான் என்ற நிலை ஏற்படுகிறது.
இது மட்டுமின்றி, பெண், தனது கணவனின் மீது இருக்கும் குறைபாடுகளை, அதிருப்திகளை, பிற லௌகீக எதிர்பார்ப்புகள் நிறைவேறாததை, தாம்பத்தியம் உறவுக்கு முன்னாலோ, பின்னரோ வெளிப்படுத்தாமல் இருப்பது மிக முக்கியம்.
எந்த அளவுக்கு தாம்பத்தியத்தை வாழ்க்கையின் பிற அம்சங்களில் இருந்து விலக்கி தனியான விஷயமாக, வைக்கிறார்களோ, அந்த அளவுக்கு தம்பதியினருக்கு இடையில் விரிசல் விழாது.
இது இருவருக்கும் தேவையானது. இருவரின் ஒத்துழைப்பும், விருப்பமும், இல்லாமல் திருப்தி என்பது இருக்காது. இருவரது விருப்பங்களும், ஒன்று கூடும் இடமும் இதுதான்.
எப்படி உணவு உண்ணும்போது, எந்தப் பிரச்சினையும், வாக்குவாதமும், மனக் கசப்பும், இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொல்லப் பட்டிருகிறதோ, அதே போலத்தான் தாம்பத்திய உறவும் இருக்க வேண்டும். இரண்டுமே உடல் வேட்கையைத் தணிக்கும் பசிதான்.
சாப்பிடாமல், கோபித்துக் கொண்டு, வெறுத்துப் போய் இருந்தால், உடலுடன் மனதும் எந்த அளவுக்கு பாதிக்கப்படுமோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல், சொல்லப் போனால், அதற்கும் மேலாக பல மடங்குகள் பாதிப்புகள் உருவாகும்.
இதை நினைவில் வைத்து, தாம்பத்திய உறவில் விரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இருவரின் மிக முக்கியமான கடமையாகும்.
அப்படி இருந்தால்தான் குடும்பம் என்கிற அடுத்த கட்டத்திற்குப் போகும்போதும், போன பிறகும், வாழ்க்கை சமச் சீராக இருக்கும். அடுத்து, குடும்பம், அது சார்ந்த பொறுப்புகளைப் பற்றிப் பார்க்கலாம்.
– தனஞ்செயன், மனநல ஆலோசகர்.