சிவாஜி என் மீது வைத்திருந்த அன்பு!

நடிகை சௌகார் ஜானகியின் நெகிழ்ச்சியான அனுபவம்

என் பெண் சச்சி விரும்பியபடியே அவளுக்குத் திருமணம் செய்து வைத்தேன். எளிய முறையில் திருச்சானூரில் தான் திருமணம் நடந்தது.

சென்னையில் நடந்த ரிசப்ஷனுக்கு ஏராளமான பிரமுகர்கள் வந்திருந்து வாழ்த்தினார்கள்.

ரிசப்ஷனுக்கு வந்த சிவாஜி, என் மகளுக்குப் பரிசளித்து வாழ்த்திவிட்டு உடனே புறப்பட்டார்.

சாப்பிட்டு விட்டுப்போக வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டபோது, “இல்லை.. என் அம்மா உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. எனவே, உடனே நான் புறப்பட வேண்டும்’’ என்று கூறி விடை பெற்றார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் சிவாஜியின் தாயார் இறந்துவிட்ட செய்தி திருமண ரிசப்ஷன் நடந்த மண்டபத்திற்கு வந்தது.

வந்திருந்தவர்களை உபசரித்துவிட்டு, பெண், மாப்பிள்ளை இருவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மண்டபத்திலிருந்து நேராக சிவாஜி வீட்டுக்குப் போனேன்.

தாய் சீரியஸாக இருந்தபோதும், சிவாஜி சார் என் மகளின் திருமண ரிசப்ஷனுக்கு வந்தார் என்றால், அதற்குக் காரணம் அவர் என் பேரில் வைத்திருக்கிற அன்பு.

அதே போல், ரிசப்ஷன் முடிந்ததும், நான் அவர் வீட்டுக்குப் போனேன் என்றால், அவர் பேரில் எனக்கிருந்த மரியாதையே காரணம்.’’

‘நவரச நினைவுகள்’ – கல்கி இதழில் 1993 ல் வெளிவந்த தொடரில் சௌகார் ஜானகி.

Comments (0)
Add Comment