சென்ற சட்டமன்றத் தேர்தலின் போது, தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் சிலவற்றில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் சாயல் தெரிந்தது.
பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் போன்று டெல்லியில் கெஜ்ரிவாலுக்குப் பெயர் கிடைத்த விஷயத்தை வாக்குறுதியாக வைத்து, ஆட்சிக்கு வந்ததும் நடைமுறைப்படுத்தி, பெண்கள் மத்தியில் நல்ல பெயரைச் சம்பாதித்தது தி.மு.க.
தி.மு.க அறிவித்த பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் என்கிற சிறப்புத் திட்டத்தை இன்னும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. எதிர்க்கட்சிகள் இது குறித்து விமர்சித்தாலும், போதுமான நிதி ஆதாரம் இல்லை என்றும், போதுமான நிதி ஆதாரம் கிடைத்ததும், பயனாளிகளைத் தேர்வு செய்து அந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது தி.மு.க அரசு.
இப்படி ‘பெண்டிங்’ கில் இருக்கிற – இதே மாதம் தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பஞ்சாப்பில் வழங்கப்போவதாக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருக்கிறார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.
அவர் அரசுப்பணியில் அதிகாரியாக இருந்தவர் என்பதால், இத்திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நிதி சார்ந்த நடைமுறைச் சிக்கல்கள் அவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
இருந்தபோதும், பெண் வாக்காளர்களைச் சுலபமாக ஈர்க்கக் கூடிய இத்திட்டத்தை அறிவித்திருக்கிறார் கெஜ்ரிவால்.
வாக்குறுதிகளில் டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையில் கொடுக்கல் – வாங்கல் நடக்கிறது!