இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, கான்பூரில் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில், புதிதாக உணவு சர்ச்சை ஒன்று இந்திய கிரிக்கெட் அணியைச் சூழ்ந்துள்ளது.
கான்பூர் டெஸ்ட் போட்டியின்போது, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவில் மாட்டுக்கறியும், பன்றிக்கறியும் இருக்கக் கூடாது என்று கிரிக்கெட் வாரியம் விதித்துள்ள உத்தரவுதான் சர்ச்சைக்கு காரணம்.
அத்துடன் ஹலால் செய்யப்பட்ட இறைச்சி வகைகளைத்தான் வீரர்களுக்கு பரிமாற வேண்டும் என்றும் பிசிசிஐ உத்தரவிட்டிருப்பது சர்ச்சையின் அளவை மேலும் அதிகரித்துள்ளது.
பிசிசிஐக்கு எதிராக இதற்காக போராட்டம் நடத்தக்கூட சிலர் தயாராகி வருகிறார்கள்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் உத்தரப் பிரதேச மாநில ஊடகத் தொடர்பாளரும், வழக்கறிஞருமான கவுரவ் கோயல், “ஹலால் செய்யப்பட்ட இறைச்சிகளைத்தான் வீரர்கள் உண்ண வேண்டும் என்று உத்தரவிட, பிசிசிஐ-க்கு அதிகாரம் இல்லை. உணவு என்பது வீரர்களின் தனிப்பட்ட விஷயம். இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்” என்கிறார்.
இந்துக்களும் சீக்கியர்களும் ‘ஹலால்’ இறைச்சிகளைவிட ’ஜக்டா’ (ஒரே வெட்டில் கோழி, ஆடு போன்றவற்றின் தலையை வெட்டி கொல்லும் முறை) முறையில் வெட்டப்படும் இறைச்சிகளைத்தான் உண்பார்கள்.
இந்தச் சூழலில் ஹலால் செய்யப்பட்ட கறியைத்தான் பரிமாற வேண்டும் என்பது சரியல்ல என்பது ஒரு தரப்பின் வாதமாக உள்ளது.
அதே நேரத்தில் பன்றி மற்றும் மாட்டு இறைச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர்கள் சிலர் கூறும்போது, “கொழுப்பு அதிகமாக இருக்கும் என்பதால், வழக்கமாகவே இந்த 2 இறைச்சிகளும் வீரர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
பொதுவாகவே இளம் ஆட்டுக்கறி அல்லது சிக்கன் ஆகிய உணவுகல்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அசைவப் பிரிவில் வழங்கப்படும். இப்போது இதுபற்றி ஒரு அதிகாரபூர்வ உத்தரவு வந்திருப்பதால் தேவையற்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது” என்றனர்.