வீட்டில் வெற்றி பெறுவது எப்படி..?

1. யோசனைகள் வேறு. வேறு!

ஆணும் பெண்ணும் ஒரே மாதிரிதான் சிந்திப்பது போலத் தோன்றும். ஆனால், ஜான் கிரே என்ற எழுத்தாளர் ஒட்டுமொத்தமாக இதை மறுக்கிறார். ஆண், பெண் சிந்திக்கும் முறைகள் வேறு, வேறு என்கிறார் அவர். மகிழ்ச்சி பொதுவானதாகவே இருந்தாலும், ஆணின் வெளிப்பாடும், பெண்ணின் வெளிப்பாடும் 180 டிகிரி தலை கீழாக இருக்கும். ஒவ்வொரு உணர்விலுமே இப்படித்தான் இருந்திருக்கிறது என்கிறார் அவர்.

உதாரணத்திற்கு, ஆணுக்குக் கோபம் வந்தால், உடனே அந்த இடத்தை விட்டு எழுந்து போய்விடுவார். ஆனால் இது பெண்ணுக்குப் புரியாது. பெண் ‘தன்னை பிடிக்காமல்தான் எழுந்து போய்விட்டாரோ… செய்வதையும் செய்துவிட்டு தப்பிச் செல்கிறாரே!’ என்று உள்ளூரப் பொருமி, பொருமி இன்னும் பி.பி. எகிறும் அளவுக்குக் கவலைப்படுவார்.

விலகிச் சென்றாலும் விடமாட்டேன் என்கிறாளே! என்று நொந்து கொள்வார் ஆண். “இப்போ என்னான்ற..?” என்று ஆரம்பித்த வாதம், “இப்போ என்ன பண்ணனுங்கிறே.?” என்று மாறிவிடும். அவரது கோபக் கொடி இறங்கியே தீரும்.

பெண்ணுக்கு கோபம் வரும்போது, ‘முழுவதையும் பேசித் தீர்த்துவிட வேண்டும்’ என்பதாகவே இருக்கும். நிறையப் பேசுவார்கள். வார்த்தைகள் வந்து கொண்டேயிருக்கும். இந்தப் புரிதல்தான் முக்கியம். புரிதலில் சில தீர்வுகள் கிடைக்கும். இதை சரிவரப் புரிந்து கொண்டால், இல்லறத்தில் டி.வி சவுண்ட் தவிர வேறெதுவும் பெரிதாகக் கேட்காது.

கணவன் கோபப்படும்போது, “என்னங்க… ஏன் டென்ஷன் ஆகறீங்க..? ஒரு 5 நிமிஷம் வெளியே போயிட்டுதான் வாங்களேன்…” என்று சொல்லிவிட்டாலே போதும். பிரச்சினை வராது.

அதே மாதிரி மனைவிக்கு கோபம் வரும்போது, “என்னம்மா பிரச்சினை… வா பேசலாம்…! நீ சொல்லு! நான் கேட்கறேன்” என்று சேரைப் போட்டு அமர்ந்து கொண்டால், பத்தாயிரம் வார்த்தைகள் காத்திருந்தாலும் அவை பொசுக்கென்று காற்றிறங்கிய பலூனாகி விடும். அப்படியே பேசினாலும், அவரது கோபம் தீர்க்கும் நிவாரணியாக அதைப் பார்க்க வேண்டியதுதான்.

இப்படி இருவரும் அனுசரித்து நடந்தாலே குடும்பம் குதூகலமாக இருக்கும்.

காந்தப் புலனில் வட துருவமும், தென் துருவமும் இணைவதுபோல வாழ்க்கைச் சக்கரம் ஓடிக் கொண்டிருக்கவும் இந்த எதிரெதிர் நிலைகளே காரணம்.

2. தலைவி… தலைவலி… தீர்க்கும் வழி!

ஆண் தன் தேவைகளை நேரடியாகக் கேட்டு விடுவார். பெண் மறைமுகமாகவே வெளிப்படுத்துவார். ஆண்கள் சினிமாவுக்கோ, ஒட்டலுக்கோ போக வேண்டும் என்றால் நேரடியாகச் சொல்லி விடுவார்கள்.

ஆனால், பெண்கள் எப்போதுமே, எதையுமே நேரடியாக பேசுவதே இல்லை. பெண் தலைவலிக்கிறது என்றால், நாம் தலைவலி மாத்திரை வாங்கித் தருவோம். தைலம் எடுத்து தருவோம். ஆனால் அது நிஜமான தலைவலி இல்லை. ‘ஒரே இடத்தில் இருந்து போரடிக்கிறது. என்னை வெளியே கூட்டிச் செல்!’ என்பதாக அர்த்தம்.

அந்த சமயம் கணவன் மனைவியிடம் சென்று, “என்னம்மா வெளியில் எங்காவது போகலாமா? கோவிலுக்குப் போகலாமா, சினிமாவுக்குப் போகலாமா இல்லை உங்க அம்மா வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்டாலே போதும். உடனே அவர்கள் “சரிங்க, உங்களுக்கு டயம் இருந்தால் நான் ரெடி” என்பார்கள்.

இதில் நடிப்பெல்லாம் இல்லை. அவர்கள் கேரக்டரே அப்படித்தான். தலைவலித்தால், தைலம் எடுத்து தடவ அவர்களுக்கு தெரியாதா என்ன? அதை என் நம்மிடம் சொல்ல வேண்டும் என்பதிலிருந்து அவர்களது உணர்வைப் புரிந்து நடக்க வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் மாற்றத்தை நம்மிடம் கொண்டு வருவதற்கே இந்தத் தலைவலி.

3. கேளுங்க, கேளுங்க… கேட்டுக்கிட்டே இருங்க..!

ஆண் எப்போது பேசினாலும் ஒரு இலக்கை நோக்கியே பேசிக் கொண்டிருப்பார். 2,3 ஆண்கள் பேசினால், ஒரு ஆணுக்கு பிரச்சினை என்றால் இன்னொரு ஆண் தீர்வு சொல்லிக்கொண்டே இருப்பார்.

பெண்கள் பேசுகிறபோது இலக்கு என்று எதுவும் இருப்பதில்லை. முழுக்க வர்ணணையாகவே இருக்கும். தங்கள் பிரதாபங்களை அடுக்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். நான் கிளம்பி போனேனா, அங்கே இது நடந்ததா, இவங்க இந்த கலர் டிரெஸ் போட்டிருந்தாங்களா…’ என்று நீளும்.

பெண்களுக்கு பேசிக் கொண்டே இருப்பது பிடிக்கும். விளக்கம் அளிப்பது பிடிக்கும். ஒரே கதையை சலிக்காமல் எத்தனை பேரிடமும் அதே ஏற்ற இறக்கத்துடன் சொல்லப் பிடிக்கும். இந்த உணர்வை புரிந்து கொண்டால் பிரச்சினைகள் வராது.

4. உங்களால் தான் முடியும்!

கணவரைப் பாராட்டிப் பேசினால், அவரிடம் சுலபமாக வேலை வாங்கிவிட முடியும்.

“பையன் படிக்க மாட்டேங்கிறான். நீங்க சொன்னாதான் கேட்பான். அதான் வெயிட் பண்றேன்…” என்று உசுப்பேற்றி விட்டால், ஆண் ரொம்ப உற்சாகமடைவார்.

இதில் மறைமுகமாக அம்மா கண்டிக்க மாட்டார். அப்பா ஒரு கெடுபிடி ஆசாமி என்ற விஷ(ய)த்தையும் பையனின் மனதில் பதிய வைத்த மாதிரி ஆயிற்று. ஆண் இந்த மாதிரி நேரங்களில் சுலபமாக பலிகடா ஆகி விடுவார்.

ஆனால், ஒரு பெண்ணிடம் இப்படிப் பாராட்டி வேலை வாங்கிவிட முடியாது. பெண்ணிடம் வேலை வாங்க, அவர்களை மிகவும் உயர்வாகக் கொண்டாட வேண்டும். நேரடியான பாராட்டைவிட, மறைமுகப் பாராட்டு அவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். “என் ஒய்ஃப் சமையல், எங்கம்மாவை விட சூப்பர். அவ கொடுக்கிற ஒவ்வொரு ஐடியாவும் ஜெம். சும்மாவா சொன்னான், ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் அப்படின்னு. என் குடும்பத்திலே அது நிஜம்..” என்றெல்லாம் பிறரிடம் போட்டுத் தாக்கலாம்.

பெண்களை ஏன் பாராட்ட வேண்டும்..? அதில் ஒரு சைக்காலஜி பின்னணி இருக்கிறது. 25 வருடம் ஒரு குடும்பத்தில் இருந்து விட்டு இன்னொரு குடும்பத்திற்கு வரும் அவர்கள், முற்றிலும் புதிய சூழலுக்குத் தயாராகிறார்கள். ஒரு மரத்தை ஆணிவேரோடு ஒரு இடத்திலிருந்து பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவது போன்றது அது. புது சொந்தங்கள், புது இடம், மாமியார், நாத்தனார் என்று எல்லாமே புதிதாக மாறுகிறது. இவை அனைத்திற்கும் ஆணிவேராக அமைவது கணவன். அவருக்காகத்தான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறார்கள்.

அந்நோம் கணவர் அம்மாவுக்கும் சகோதரிகளுக்கும் ஆதரவாக இருந்தால் பெண் உடைந்து போகிறார். பெண் எப்போதும் கணவனைச் சார்ந்தே இருக்கிறார். கணவரும் தன்னைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். தினம் தினம் பாராட்டுக் கிடைத்தால்தான், கணவரின் மனதில் தாம் இருப்பதாக நம்புகிறார்.

5. வெட்டிப் பேச்சு.. வீணாப் போச்சு!

ஆண்களைப் பற்றி பெண்களின் பொதுவான குற்றச்சாட்டு என்னவாக இருக்கும்..? ஆண்கள் யதார்த்தவாதிகள் அல்ல என்பதே அது. மனைவிக்கு உடம்பு சரியில்லை என்றாலும், நாட்டின் அரசியல் பற்றி அக்கறை காட்டிக் கொண்டிருப்பார்கள் என்பதாக அவர்களின் குற்றச்சாட்டு இருக்கும். மனைவி பேச்சுக் கொடுக்கும்போது, சின்சியராக ஆஃபீஸ் வேலையை கணவர் வாட்ஸ் அப்பில் டைப் செய்து கொண்டிருந்தாலும், பெண்ணின் பார்வையில் போனை நோண்டுவதாகத் தான் அர்த்தம்.

வேலை டென்ஷனுடன் வெளியூர் சென்று அலைந்து திரிந்து கொண்டிருந்தாலும் பொறுப்பற்று ஜாலியாக ஊர் சுற்றுவதாகவே பெண்கள் நினைப்பார்கள். எப்போதுமே என் மேல் அக்கறை இல்லை என்பதும் அவர்களின் வாதம். “ஒரு நாளும் சாப்பிட்டியா?”ன்னு கேட்டதே இல்லை என்று அம்மாவிடம் பற்ற வைப்பார்கள்.

மனைவியின் நலனுக்காக மருத்துவமனை செல்வதற்கு, பணம் கொடுத்து. ஆட்டோ பிடித்து கொடுத்து, அப்பாயின்மென்ட் வாங்கி வைத்து என்று எல்லாவற்றையும் கணவர் செய்துவிடுவார்.

ஆனால், கூட செல்ல முடியாதபடி வேலை இருந்திருக்கும். இது மனைவிக்குப் புரியாது. தன்னை தனியாக அனுப்பிய அக்கறையற்ற நபர் என்பதாகவே அவர் பார்ப்பார். குடும்பத்திற்காகத் தான் அவர் வேலைக்குச் செல்கிறார் என்று யோசிப்பதே இல்லை.

ஆண்களும் பெண்களைப் பற்றி சில குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். முதல் குற்றச்சாட்டு அவர்கள் ரகசியங்களைப் பாதுகாப்பதில்லை. எல்லா விஷயத்தையும் வெளியில் சொல்லி விடுகின்றனர்’ என்பதாகவே உள்ளது.

உதாரணத்திற்கு கணவன் தலைவலி என்று சொல்லிவிட்டால் மனைவி கணவனின் அம்மாவிடம் ஆரம்பித்து, அக்காவிடம் கூறி, தன்னுடைய அம்மாவிடம் சொல்லி என்று அரை மணி நேரத்தில் ஊருக்கே கணவரின் தலைவலி தகவல் தெரிந்து விடும். (ஆனால் மிகச் சில விஷயங்கள் எப்போதுமே வெளியில் வராது).

அடுத்து, மனைவிகள் தங்களை வளைக்கப் பார்க்கிறார்கள் என்ற நினைப்பு ஆண்களுக்கு எப்போதுமே உண்டு. “எங்க அம்மா வீட்டுக்கு கிட்ட போயிடலாம். என் அண்ணா பையன் படிக்கிற பள்ளியிலேயே நம் பையனையும் சேர்த்திடலாம்!” என்று தங்களை வளைக்கப் பார்ப்பதாக சந்தேகப்படுவர்.

3-வது, பெண்கள் நிதி விஷயங்கள், வெளி வேலைகள் எதிலுமே அக்கறை காட்டுவதில்லை. அவர்களுக்கு வங்கி கணக்கு நம்பர் தெரியாது. வண்டி நம்பர் தெரியாது. ஆதார் நம்பர் தெரியாது, ‘நம்ம சொத்து, பத்து கணக்கெல்லாம் சொன்னா அவர்களுக்கு தெரியாது” என்பது ஆண்களின் குற்றச்சாட்டு.

எதை எப்படித் தீர்க்க வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

6. மரியாதை முக்கியம் பாஸ்!

இறுதியாக வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமானால், சந்தோஷமாக இருக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட விஷயங்கள் முக்கியம்.

பெண்களே, ஆணுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடுங்கள். ஃப்ரீயாக விடுங்கள். என் பக்கம் வாங்க… என் பக்கம் வாங்க! என்று கூடவே இருக்கச் சொல்லாதீர்கள். உற்சாகப்படுத்துங்கள். டென்ஷன் படுத்தாதீர்கள். விட்டுக் கொடுங்கள். அவரது அம்மாவுக்கு, அக்காவுக்கு சப்போர்ட்டாகப் பேசினாலும் பரவாயில்லை என்று அவரை ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஆண்களே, பெண்கள் பேசுவதைக் காது கொடுத்து கேளுங்கள். அவர்களுக்காக நேரம் செலவிடுங்கள். அவர்களின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். மனைவிக்கான மரியாதையை ஒருபோதும் குறைக்காதீர்கள். மரியாதை குறையும்போது, அவர்கள் உடைந்து போகிறார்கள். அவர்கள் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் நிறையவே கஷ்டப்படுகிறார்கள். அவர்களை எப்போதும் விட்டுக் கொடுக்காதீர்கள்.

“சரிம்மா… சாரிம்மா!” என்ற தத்துவத்தைக் கடைபிடியுங்கள், வாழ்க்கை எப்போதுமே இனிமையாக இருக்கும். ஒரு ஆண் வர்த்தகக் களத்தில் வெற்றி பெற, இனிமையான இல்லறம் முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ நூலிலிருந்து…

http://ramkumarsingaram.com

Comments (0)
Add Comment