தமிழகம் இந்தியாவின் முன்னணித் தொழில் மாநிலமாகும்!

– முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

கோவை வ.உ.சி. மைதானத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகள் துவங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கோவையில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.587.91கோடி மதிப்பிலான 70 திட்டப்பணிகளைத் துவங்கி வைத்தும், ரூ.89.73 கோடி மதிப்பிலான 128 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும், 25 ஆயிரத்து 123 பயனாளிகளுக்கு ரூ.646.61கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது பேசிய முதல்வர், “இந்த அரசிடம் ஒரு மனு கொடுத்தால் அதன் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம். நீதிமன்றம் போன்ற தலையீடு இருந்தால் மட்டும் காலதாமதம் ஏற்படும். மக்களுக்கு உறுதியளிக்க எனக்கு முழு தகுதி உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1,132 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன்.

கோவை மாநகராட்சி பகுதியில் 2 நாட்களுக்கு ஒரு முறை சீராக குடிநீர் வழங்க தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும். 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி காலத்தின்தான் சாலைகள் ஏற்படுத்தப்பட்டன.

கடந்த ஆட்சிக் காலத்தில் எந்தவிதமான திட்ட சாலையும் ஏற்படுத்தவில்லை. தற்போது, 5 திட்ட சாலைகள் செயல்படுத்தவும், கோவையில் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்கவும் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.300 கோடி செலவிடப்படும்.

கோவை மாநகராட்சியின் மத்திய பகுதியில் உள்ள சிறைச்சாலை நகரின் வெளியே கொண்டு செல்லப்படும். காந்திபுரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடைபாதை, உள் கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் இரண்டு கட்டங்களாக ரூ.200 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

திடக்கழிவு மேலாண்மை மேம்படுத்த ரூ.11 கோடி செலவில் கூடுதல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

மருத்துவ வசதி மேம்படுத்தும் வகையில் ரூ.16 கோடி மதிப்பில் நலவாழ்வு மையங்கள், 3 மருத்துவ ஆய்வு கூடங்கள் கட்டப்படும். இந்த திட்டங்களுக்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை மாநகரம் போல் கோவை மாநகரத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. கோவையின் வளர்ச்சிக்காக கோவை நகர்ப்புற வளர்ச்சிக்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. கோவையை சிறந்த மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் வளர்ந்த தொழில் மாவட்டம். சிறு, குறு தொழில்களும் அதிகமாக உள்ளது. கோவை தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வு அளிக்கும் மாவட்டமாகவும் உள்ளது.

இது போன்ற தொழில் வளர்ச்சியை அனைத்து மாவட்டங்களில் கொண்டு வருவதுதான் எங்களின் ஆசை.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்தந்த மாவட்டத்திற்கு என சிறப்பான தொழில் இருக்கும். அதனை மேம்படுத்தி, சீர்படுத்தப்படும். நாளை கோவையில் தொழில்முனைவர்கள் மாநாட்டில் ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளது.

இதனால், பலர் வேலைவாய்ப்பு பெற உள்ளனர். தொழில் அமைப்பு மாநாடு தொடர்ந்து நடக்க வேண்டும்.

தொழில்துறையை வளர்ப்பதன் மூலமாக மக்கள் வளர முடியும். மக்களின் வளர்ச்சியில் தான் நாட்டின் வளர்ச்சி உள்ளது. இந்தியாவின் முன்னணி தொழில் மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம். இதற்கு முதலிடம் கோவைக்குதான் உள்ளது. நான் எப்போதும் அதிகம் பேச மாட்டேன். செயலில்தான் இருப்பேன்” என்று பேசினார்.

Comments (0)
Add Comment