‘சபாபதி‘ – சப்பையா? சூப்பரா?

நகைச்சுவை படமெடுப்பது எளிதான விஷயமல்ல. கொஞ்சம் பிசகினாலும், ‘சிரிப்பு வரலையே’ என்று ஆடியன்ஸ் ‘பெப்பே’ காட்டிவிடுவார்கள்.

அவர்களை ‘சூப்பர்’ என்று சொல்ல வைக்க, முதல் பிரேமில் இருந்து கடைசி பிரேம் வரை அபார உழைப்பைக் கொட்டினால் மட்டுமே அது சாத்தியமாகும்.

ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் ‘சபாபதி’ திரைப்படத்திலும் அப்படியொரு முயற்சி நிகழ்ந்திருக்கிறது.

ஆனால், ‘தில்லுக்கு துட்டு’, ‘ஏ1’, ’பாரிஸ் ஜெயராஜ்’ பாணியில் அதிரிபுதிரியான காமெடியால் அசத்தியிருப்பார்கள் என்று நினைத்தால், அதற்கெதிராக ‘பேண்டஸி’யில் திரைக்கதையைத் தோய்த்தெடுத்திருக்கிறார் இயக்குனர்.

திரைக்கதை தன் ஓட்டத்தை ஆரம்பித்தவுடன், நம் மனதில் ‘அறை எண் 305ல் கடவுள்’ நினைவுகள் தானாக மேலெழும்புகிறது. அந்தக் காலகட்டத்தில் இருந்து சந்தானம் பல படிகள் முன்னேறியிருந்தாலும், அவருக்குப் பொருத்தமற்றதாக அமைந்திருக்கிறது ‘சபாபதி’.

கொஞ்சம் பழசு, கொஞ்சம் புதுசு!

ஒரு பணப்பெட்டி காணாமல் போவதும், அது எங்கே போனது என்று வில்லன் கோஷ்டி தேடுவதும், நாயகன் அந்த பணத்தை வைத்துக்கொண்டு திணறுவதும் பலமுறை நாம் பார்த்த கதைதான்.

இப்படத்தில் அப்படித் தன் கைக்கு வரும் பணத்தை திருப்பி ஒப்படைக்க முடியாமல் திணறுகிறார் நாயகன் சபாபதி (சந்தானம்).

அதுவே முழுக்கதை என்றால் நாமும் வயிறு குலுங்கச் சிரித்திருப்போம். சபாபதியின் கையில் பெட்டி கிடைக்கும்போது இடைவேளை வந்துவிடுகிறது.

அதன் பின்னர்தான் கொஞ்சமாவது திரையைப் பார்த்து சிரிக்க முடிகிறது. அப்படியானால் முன்பாதியில் சிரிப்பே வராதா என்ற கேள்வி எழலாம். முடிந்தால் சிரித்துப் பாருங்கள் என்று சவால் விட்டிருக்கிறது படக்குழு.

இந்த பெட்டிக் கதைக்கு நடுவே, ஆங்காங்கே எதிர்வீட்டில் இருக்கும் சாவித்திரியிடம் (பிரீத்தி வர்மா) காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பார் சபாபதி.

அவருக்குத் தொடர்ச்சியாகப் பேசும் திறன் இல்லாததால், திக்கித் திக்கிப் பேசுவதும் வேலை கிடைக்காமல் திணறுவதும் நகைச்சுவைக்கான (அரதப்பழசான) இன்னொரு கிளைக்கதை.

பணத்தைப் பறிகொடுத்த வில்லன் லக்கி ராஜாவும் (சாயாஜி ஷிண்டே), அவர் தம்பியும் (வம்சி) பெட்டி யாரிடம் இருக்கிறது என்று தேடுவார்கள். சபாபதியிடம் இருப்பதை அறிந்ததும், அவரைச் சுற்றி வளைக்க முயற்சிப்பார்கள்.

தமிழ் வாத்தியாரான தந்தை கணபதி (எம்.எஸ்.பாஸ்கர்) தனக்கு எத்தகைய வாழ்க்கை பாடத்தை கற்றுத் தந்துள்ளார் என்பதை கிளைமேக்ஸில் தெரிந்துகொள்வார் சபாபதி.

இத்தனைக்கும் இடையே, சம்பந்தமே இல்லாமல் குடிபோதையில் சபாபதி திக்காமல் பேசுவார் என்பதை அவரது நண்பர் (புகழ்) கண்டறிவது நேர்த்தியான திரைக்கதைக்குத் தேவையற்ற இன்னொரு ஆணி.

மேற்கண்ட பத்திகள் எப்படித் தொடர்பற்று இருக்கிறதோ, கிட்டத்தட்ட அதே பாணியில் அமைந்திருக்கிறது ‘சபாபதி’ திரைக்கதை.

நாயகன் விரும்பும் அனைத்தும் அவருக்குக் கிடைப்பதுடன் படம் நிறைவடைகிறது.

எல்லா கிளைக்கதைகளும் முழுமை பெறாததே திரைக்கதையின் இறுக்கத்தை ஒட்டுமொத்தமாகக் குலைத்திருக்கிறது.

இது போதாதென்று, இப்படத்தின் மொத்த திரைக்கதையும் விதியின் பார்வையில் நிகழ்கிறது. இக்கதையில் எதெல்லாம் புதுசு, எது பழசு என்பதை நீங்களே திறனாய்வு செய்து கொள்ள வேண்டும்.

பழம் நீயப்பா!

‘நானெல்லாம் ஆல்ரெடி ரவுடியா பார்ம் ஆயிட்டேன்’ என்பது போலவே, தொடர்ச்சியாகப் பல படங்களில் ‘கலாய் ராஜா’வாக நடித்த சந்தானம், அவரே பல படங்களில் கிண்டலடித்தது போல இதில் ‘பழம்’ ஆக நடித்திருக்கிறார்.

அப்பாவி வேடத்தில் நகைச்சுவையை எளிதாக கைக்கொண்டாலும், தாழ்வு மனப்பான்மையில் சிக்கும் ‘எமோஷன்’ காட்சிகளில் திணறியிருக்கிறார்.

நாயகி ப்ரீத்தி வர்மாவுக்கு நன்றாக மேக்கப் செய்திருக்கின்றனர். வேறென்ன சொல்வது?

நாயகனின் தந்தையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், தாயாக வரும் உமா பத்மநாபன், லொள்ளுசபா சாமிநாதன், மாறன், நாயகியின் தாயாக நடித்த ரமா என்று பலரும் திரையில் வந்து போகின்றனர். ஆனால், யாருக்கும் முக்கியத்துவம் தரும் காட்சிகள் அமையவில்லை என்பது பெரிய மைனஸ்.

சேஸிங் காட்சிகளில் கதாபாத்திரங்களுக்கு முன்னுரிமை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம். லியோ ஜான்பாலின் படத்தொகுப்பு, முடிந்தவரை திரைக்கதையைக் குழப்பமில்லாமல் காட்ட முயற்சித்திருக்கிறது. சாம் சி.எஸ். இசையில் ‘மயக்காதே மாயக் கண்ணா’ ரசிக்க வைக்கிறது.

ஏன் இந்த சிக்கனம்!?

திரையில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஓடுகிறது ‘சபாபதி’. இடைப்பட்ட காலத்தில் எத்தனை காட்சிகள் நறுக்கப்பட்டதென்று தெரியவில்லை.

நாயகனின் மனப்போராட்ட காட்சிகளைக் குறைத்திருந்தால், நாயகன் தவிர்த்த இதர பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

நாயகனிடம் இருக்கும் பணப்பெட்டியைத் தேடும் கதையைக் கொண்டிருந்த ‘லூட்கேஸ்’ என்ற இந்திப்படம், இதற்கொரு முன்மாதிரி.

நாயகனின் வாழ்வில் விதி விளையாடுவதாகச் சொல்லிவிட்டு, வெறுமனே பணத்தை தேடி வில்லன்கள் துரத்துவதாகக் காட்டுவதும் ஏமாற்றம் அளிக்கிறது.

திரையில் காமெடி சீரியல் பார்க்கும் உணர்வு, மிகச்சிக்கனமாக இப்படம் எடுக்கப்பட்டதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

இதையெல்லாம் தவிர்த்திருந்தால் ‘சபாபதி’ சூப்பரா, சப்பையா என்ற கேள்விக்கு எளிதாகப் பதில் சொல்லிவிடலாம்!

– பா.உதய்

Comments (0)
Add Comment