– தந்தை பெரியார் மறைந்தபோது எம்.ஜி.ஆர். வெளியிட்ட இரங்கல்!
தந்தை பெரியார் அவர்கள் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் தமிழ் இனத்தோடு வாழ்ந்து இன்று காலை நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள்.
நேற்று இரவு வேலூர் மருத்துவமனையில் நானும் நண்பர்களும் சென்று அவரைப் பார்த்தபோது மரணத்தோடு நடைபெறும் இந்தப் போராட்டத்தினையும் வென்று விடுவார் என்று நம்பிக்கை கொண்டுதான் திரும்பினோம்.
ஆனால், காலையில் உதித்த கதிரவன் நமது உள்ளங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் கொடுமையான இச்செய்தியினை அறிவித்து விட்டான்.
தமிழ்ச் சமுதாயம் தனது பாதுகாவலனை – இன, மொழி உயர்வுகளுக்காக அரசியல், பொருளாதார விடுதலைகளுக்காகப் போராடி, போராட்டத்திலேயே தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்த விடுதலை வீரனை இன்றைக்கு இழந்து விட்டது.
இந்தியத் துணைக் கண்டம் ஒரு நூற்றாண்டு வரலாறு படைத்த பேராண்மையும், பேராற்றலும் மிக்க மாவீரர்களின் வரிசையிலே கடைசிச் சின்னத்தை இழந்து விட்டது.
திராவிடர் இயக்கத்திலே தங்களை ஒப்படைத்துக் கொண்ட இலட்சோப இலட்சம் குடும்பங்கள் தங்களது தந்தையை இழந்து தவித்து நிற்கின்றன.
உலகம் ஓர் ஆற்றல் மிக்க சிந்தனையாளரை, மக்கள் சமுதாய வழிகாட்டிகளில் ஒருவரை இழந்து விட்டது.
“பெரியார் வாழ்கிறார், பெரியார் காலத்தில் நாம் வாழ்கிறோம்” என்ற எண்ணமே தமிழ் இனத்திற்குப் பாதுகாப்பான அரணாக அமைந்தது.
பேரறிஞர் அண்ணாவை இழந்து தவித்தபோது பெரியாரின் வீர உருவம்தான் நமக்கு ஆற்றல் அளிப்பதாக அமைந்தது. அந்த ஆற்றலாளரைத்தான் இன்று பிரிந்து தவிக்கிறோம்.
பெரியார் வாழ்நாள் பூராவும் போராடிக் கொண்டிருந்தவர். கடைசி மூச்சு காற்றிலே கலக்கின்ற வரை தமிழ்ச் சமுதாயத்தைக் காப்பாற்றுவதற்காகவே உழைத்துக் கொண்டு இருந்தவர்.
60 ஆண்டுகளுக்கு முன்பு மாவீரராக விடுதலை இயக்கத்தில் குதித்தவர். இன்றுவரை விடுதலைப் போராட்ட வீரராகப் போராடிக் கொண்டே நம்மை விட்டுப் பிரிந்து இருக்கிறார்.
இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு தலைவர்கள் தந்தை பெரியாரோடு விடுதலைப் போராட்டக் காலத்திலே இருந்து பாடுபட்ட தலைவர்கள், தங்களது தியாகங்களின் பலனை அனுபவித்தபோது கூட அந்தப் பலன்களில் பங்கு பெற எண்ணாமல் கடைசி வரை மக்களுக்காகவே உழைத்த உத்தமத் தியாகி அவர்.
பெரியார் இல்லை என்றால் நமக்கு ஒரு பேரறிஞர் அண்ணா கிடைத்திருக்க மாட்டார். பெரியாரின் பரம்பரை தோன்றவில்லை என்றால் தமிழ் இனத்தின் சிறப்புகள், பெருமைகள் இலக்கியங்களில் படித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகத்தான் இருந்து இருக்கும்.
பல்வேறு பிரச்சினைகளிலே இந்தச் சமுதாயத்தைக் கண்டு அவர் கோபப்பட்டதுண்டு. ஆனால், அந்தக் கோபம் ‘மகன் திருந்தி நல்வழி அடைய மாட்டேன் என்கிறானே’ என்று தந்தை கொள்ளும் கோபத்தைப் போன்றதுதான்.
அவருக்கு அரசியலில், சமுதாயத்தில் பொருளாதாரத்தில் தெளிவான இலட்சியங்களும், கொள்கைகளும் இருந்தன. சில நேரங்களில் பலரின் கருத்துக்களுக்கு அவை மாறுபட்டதாகக் கூடத் தோன்றும்.
ஆனால், அவருடைய சிந்தனை, செயல் அத்தனையும் மனித சமுதாயத்திற்காகக் – குறிப்பாக தமிழ்ச் சமுதாயம் மேம்பாடு அடைவதற்காகத்தான் இருந்தது.
அவருடைய ஆற்றல்மிக்க தூய தொண்டுள்ளத்தை அவருடைய எதிரிகள் கூடக் குறைத்து மதிப்பிட்டது கிடையாது.
உத்தமர் காந்தியடிகளின் உள்ளத்தில் தனக்கு என இடம் பெற்றுக் கொண்ட தோழர் அவர், தொண்டர் அவர்.
தந்தை பெரியார் அவர்கள் தத்துவங்களின் சின்னமாக விளங்கினார். அவருடைய வாழ்நாளிலேயே அவருடைய தத்துவங்கள் அவருடைய அருமைச் சீடர் பேரறிஞர் அண்ணா அவர்களாலேயே நிறைவேற்றப்படுகிற சிறப்புக்களை நேரில் பார்த்து மகிழும் பேறு பெற்றவர்.
பெரியார் அவர்கள் இராஜ தந்திர சூதாட்டத்தில் ஈடுபட்ட அரசியல்வாதியாக இருக்க விரும்பியது இல்லை.
மக்கள் சமுதாயத்திற்காக, தன் மனதில் நேர்மை என்று பட்டதை, சரி என்று தான் நினைத்ததைச் செயல்படுத்த எதிர்ப்புகளுக்கும், ஏளனங்களுக்கும் அஞ்சாமல், துணை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கவலைப்படாமல் அஞ்சா நெஞ்சுடன் போராடிய இலட்சிய வீரர். கடமை ஒளி விளக்கு.
ஒரு காந்தி அடிகள் தோன்றியிராவிட்டால்… என்பது போல ஒரு பெரியார் தோன்றியிராவிட்டால்… என்ற கேள்வியை எழுப்பினால்தான் இந்த நாடு தந்தை பெரியாரால் பெற்றிருக்கும் பேற்றினைப் புரிந்து கொள்ள முடியும்.
இப்படிச் சிங்கம் போல் வாழ்ந்து, இலட்சியங்களுக்காகவே வாழ்ந்து, இலட்சிய வெற்றிக்காகக் கடைசி வரை போராடிய மாவீரனாக வாழ்ந்து நம்மை விட்டு மறைந்து விட்டார்.
95 ஆண்டுகள் வாழ்ந்தார், வாழ்ந்த காலம் பூராவும் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தார்.
தந்தையை இழந்து தவிக்கும் குடும்பமாக இன்று தமிழகம் தேம்புகிறது. ஈடுகட்ட முடியாத இழப்பு என்பதில் சிறிதும் அய்யமில்லை. இயற்கை சில பணிகளுக்காகச் சிறப்புமிகு சிலரை உருவாக்குகிறது.
அது சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழ்கிறது. அப்படிப்பட்ட அற்புத நிகழ்ச்சிதான் பெரியாரின் தோற்றம். அவர் ஒரு நூற்றாண்டு கால வரலாற்றை உருவாக்கி விட்டு மறைந்து விட்டார்.
அந்த வரலாற்று நாயகனின் நினைவாக அண்ணா தி.மு. கழகக் கொடிகள் இன்று முதல் பத்து நாள்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும். அண்ணா தி.மு. கழகத்தின் சார்பில் எந்தவிதமான விழாக்களும் இந்தப் பத்து நாள்களில் கொண்டாடப்படக் கூடாது.
தந்தை பெரியாரின் திருமுகத்தைக் கண்டு வணங்கி, நமக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அந்த வரலாற்று நாயகனின் திருவடிகளில் நம்முடைய சிரம் தாழ்த்திட இலட்சோப இலட்சமாக அண்ணா தி.மு.கழகத் தொண்டர்கள் கறுப்புப் பட்டை அணிந்து, கறுப்புக் கொடி ஏந்தி அணிவகுத்து வந்திட வேண்டுகிறேன்.
கழகத் தோழர்கள், குறிப்பாக மாணவ மணிகள் பத்து நாள்களுக்கு எந்தவிதமான எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.
தந்தை பெரியார் அவர்களை இயற்கை நம்மிடம் இருந்து பிரித்தாலும் அவர் உருவாக்கிய இலட்சியங்கள் அணையா ஜோதியாக நம்மிடையே ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. அந்த இலட்சியங்களை ஈடேற்ற, பாதுகாக்க இன்று சபதம் ஏற்போம்.
பெரியார் அவர்கள் என்றும் மறைய மாட்டார், என்றும் அழிய மாட்டார்; அவர் உருவாக்கிய உணர்வுகள், அவர் கட்டிக் காத்த தமிழ்ச் சமுதாயத்தின் மேன்மை என்றைக்கும் அவருடைய வெற்றிச் சின்னமாக விளங்கும்!
இவ்வாறு எம்.ஜி.ஆர். தனது அனுதாபச் செய்தியில் கூறியிருக்கிறார்.
– கி.வீரமணியின் ‘தந்தை பெரியாரும் டாக்டர் எம்.ஜி.ஆரும்’ என்ற நூலிலிருந்து…