பெண்கள் கல்லூரி ஒன்றில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டபோது மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் சொன்னார். அவற்றிலிருந்து சில :
கேள்வி: முதலில் நீங்கள் இசையமைத்த படத்திற்கு வாங்கிய சம்பளம் என்ன?
இளைய ராஜா: முதல் படத்திற்கு நான் வாங்கிய சம்பளம் ஐயாயிரம் ரூபாய். சொல்லப்போனால் அப்போது தான் நான் வங்கிக் கணக்கே ஆரம்பித்தேன்.
கேள்வி: பல காதல் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிற நீங்கள் இளம் வயதில் காதலித்திருக்கிறீர்களா?
இளைய ராஜா: நான் அப்படிக் காதலித்ததில்லை. லைலா மஜ்னு படத்தை எங்கள் ஊர் டூரிங் டாக்கிஸில் பார்த்த போது, கற்பனையாக லைலாவை மஜ்னுவை விடக் காதலித்திருக்கிறேன். மறுநாள் வகுப்பில் சிலேட்டில் லைலா லைலா என்று எழுதியதற்காக வகுப்பு ஆசிரியரிடம் பிரம்பால் அடி வாங்கியிருக்கிறேன்.
கேள்வி : ஒரு பாடலை இசையமைப்பதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வீர்கள்?
இளைய ராஜா: பெரும்பாலும் மிகக் குறைந்த நேரம் தான். ‘கரகாட்டக்காரன்’ படத்தில் இடம் பெற்ற ‘மாங்குயிலே’ பாடல் இரண்டு நிமிடங்களுக்குள் முடிவாகி இசையமைக்கப்பட்ட பாடல் தான்.
கேள்வி : நீங்கள் இசையமைத்த பாடல்களை உங்கள் குடும்பத்தினருக்கு அர்ப்பணித்திருக்கிறீர்களா?
இளையராஜா : திரையிசைக்கு வருவதற்கு முன் பல பாடல்களுக்கு இசையமைத்து எனது தாயார் கேட்டிருக்கிறார்கள். என் மனைவி பல பாடல்களைக் கேட்டிருக்கிறார். அவர்கள் தன்னை என்னிடம் அர்ப்பணித்திருக்கிறார்கள். நான் என்னை அவர்களிடம் அர்ப்பணித்திருக்கிறேன்.