‘இடியட் பாக்ஸ்’ வழங்கும் கொண்டாட்ட மனோபாவம்!

நவம்பர் 21- உலக தொலைக்காட்சி தினம்

எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்பானாலும், அதில் நன்மையும் தீமையும் சரிவிகிதத்திலேயே இருக்கும். நாம் அதனை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து நன்மைகளின் பலனை அறுவடை செய்ய முடியும்.

இதற்குச் சரியான உதாரணம் டிவி என்றழைக்கப்படும் தொலைக்காட்சி.

தொலைக்காட்சியைச் செயல்படவைக்கும் மெக்கானிசம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்களை எதிர்கொண்டிருக்கிறது.

தொலைக்காட்சித் திரையின் அளவு, அதில் இடம்பெறும் பிம்பங்களின் தரம், ஒளிபரப்பாகும் விதம், அதில் இடம்பெறும் கருத்துகள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

அத்தனையையும் தாண்டி, ‘உங்க வீட்ல டிவி இல்லையா’ என்ற கேள்வி வறுமைக்கோட்டின் உயரத்தையே மாற்றி அமைத்திருக்கிறது.

சின்னத்திரையின் தொடக்கம்!

எந்த பாரபட்சமும் இல்லாமல், உலகம் முழுக்கப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதொரு கண்டுபிடிப்பு தொலைக்காட்சி.

1920களில் ஜான் லோஹி பேர்டு, போரிஸ் ரோஸிங், சார்லஸ் பிரான்சிஸ் ஜென்கின்ஸ் உட்படப் பலரும் அடுத்தடுத்து தொலைக்காட்சி நுட்பத்தை மேம்படுத்துவதற்கான கண்டுபிடிப்புகளை மேற்கொண்டனர்.

இவர்களை மீறி, எலக்ட்ரான் கற்றைகளால் திரையில் பிம்பங்களை நடமாடச் செய்த பிலோ டெய்லர் பேர்ன்ஸ்வொர்த்தின் கண்டுபிடிப்பே இன்றைய தொலைக்காட்சி வடிவத்தின் முன்மாதிரியாகக் கருதப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இதர வளர்ந்த நாடுகளில், 1950களிலேயே தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒரு வர்த்தகமாக மாறிவிட்டது. அதே காலகட்டத்தில், இந்தியாவில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் தொடங்கிவிட்டன.

1959இல் டெல்லியில் முதன்முறையாக தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அமிர்தசரஸ், பம்பாய் நகரங்களில் தொலைக்காட்சி சேவை விரிந்தது.

1975 வரை இந்தியாவில் 7 நகரங்களில் மட்டுமே இச்சேவை செயல்பட்டது.

தரைவழியில் நிகழ்ந்த இந்த ஒளிபரப்பு, வானொலி நிலையங்களின் ஒரு பகுதியாகவே இயங்கி வந்தது.

செயற்கைக்கோள் வழி தொலைக்காட்சி பரிசோதனை, இம்முயற்சியில் பெருமாற்றத்தை ஏற்படுத்தியது. 1982 முதல் தேசிய அளவிலான ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.

’தொலைக்காட்சி’ எனப் பொருள்படும் ‘தூர்தர்ஷன்’ தான், நமக்கு சின்னத்திரையின் பரிமாணத்தை உணர்த்தியது.

அதுவரை கர்ண பரம்பரைக் கதைகளாக அறியப்பட்ட, கலை நிகழ்வுகளின் வழியாகவும் ஒரு சில திரைப்படங்களின் வழியாகவும் நமக்கு தெரிந்த ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் வாராவாரம் கண்டுகளிக்கச் செய்தது.

திரைப்படங்களில் நாம் காண முடியாத யதார்த்தத்தை புனைவுகளில் காண வைத்தது. தினசரிச் செய்திகளும், வாரம் ஒருமுறை இடம்பெற்ற செய்தித் தொகுப்புகளும் உலக நடப்புகளை தெரியச் செய்தது.

’தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்ற எழுத்துக்களை பார்த்தவாறே ஒரு தலைமுறையைக் காத்திருக்கச் செய்த பெருமையும் இந்த டிவிக்கு உண்டு.

கருப்பு வெள்ளையில் தெரிந்த பிம்பங்களுக்கு பல வண்ணங்களில் கண்ணாடி அணிந்து அழகு பார்த்த தலைமுறையும் கூட அதுதான். அதன்பிறகு, வண்ணத் தொலைக்காட்சி வாங்குவது சாதாரண விஷயமாகிப் போனது.

1991இல் அமைந்த பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசு, ‘உலகமயமாக்கலை’ திறந்துவிட்டதன் மூலமாக சிஎன்என், ஸ்டார் டிவி ஒளிபரப்புகள் இந்தியாவில் தன் குடையை விரித்தது.

இதன் தொடர்ச்சியாக ஜீ குழுமம் இந்தியில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கிய முதல் தனியார் நிறுவனமானது.

இதன் தொடர்ச்சியாக ஈநாடு, சன், ஏசியாநெட் உட்படப் பல்வேறு தொலைக்காட்சிகள் தங்கள் பரப்பை விரிவுபடுத்தின.

தொலைக்காட்சியின் ஆட்சி!

ஸ்டேடிஸ்டா இணையதளத்தின் கருத்துக்கணிப்பு படி, 2019ஆம் ஆண்டுவரை 1.7 பில்லியன் தொலைக்காட்சிகள் உலகம் முழுக்க இயங்கிக் கொண்டிருந்தன.

கண்டிப்பாக, கொரோனா கட்டுப்பாடுகளால் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த ஊரடங்கு காலத்தில் இந்த எண்ணிக்கை கட்டாயம் அதிகமாகியிருக்கும்.

தொலைக்காட்சி பரப்பு குறைந்துகொண்டே வந்து, இன்று சுவரோடு ஒட்டினாற்போன்ற ‘ப்ளாட்’ டிவிக்கள் பெருகிவிட்டன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உள்ளடக்கமும் முற்றிலுமாக மாறிவிட்டது.

ஒரு நாளைக்கு 4 அல்லது 6 மணி நேரமாக இருந்த ஒளிபரப்பு, 2000களிலேயே 24 மணி நேரமும் ஒளிபரப்பு என்றாகிவிட்டது.

தொலைக்காட்சிகள் வழங்கும் தகவல் பொழுதுபோக்கு சார்ந்தே நமது பொழுதுகள் கழிகின்றன. மக்களின் மனதை மாற்றும் கருவிகளில் தொலைக்காட்சியும் ஒன்று என்றாகி பல ஆண்டுகளாகிவிட்டது.

அரசியல் கட்சிகளும் ஆன்மிக அமைப்புகளும் தொலைக்காட்சிகள் தொடங்கியதும், அவற்றின் செயல்பாடுகளால் விளையும் எதிர்வினைகளும் இதற்குச் சான்று.

காணொலியின் எதிர்காலம்!

இன்றைய வேகயுகத்தில் உலகின் எந்த மூலையில் எந்தவொரு நிகழ்வு நடந்தாலும், அவற்றை நேரலையில் கண்டுகளித்திட முடியும். காணொலியில் உரையாட முடியும்.

தரைவழியாகத் தொடங்கிய தொலைக்காட்சி ஒளிபரப்பு செயற்கைக்கோள் வழியே விஸ்வரூபம் எடுத்து, இன்று இணையம் வழியே வேறொரு பரிமாணத்தை அடைந்திருக்கிறது.

இணையம் புத்துலகத்தைக் காட்டினாலும் கூட, தொலைக்காட்சியின் நீட்சியாகவே அது பார்க்கப்படுகிறது.

தற்போது, மொபைல்களின் வழியே காட்சியுலகம் விரிவது நம் கைக்குள் உலகம் வந்துவிட்டாற்போன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

உலகமயமாக்கல் மற்றும் தகவல்தொடர்புக்கான சிறந்த கருவியாகக் கருதப்படுகிறது தொலைக்காட்சி.

ஒரு கண்டுபிடிப்பு உடனடியாக வளர்ந்துவரும் நாடுகளை அடையமுடியா விட்டாலும் கூட, அது தொடர்பான தகவல்களை ‘இஞ்ச் பை இஞ்ச்’ அறிந்துவிட முடிகிறது.

இந்த வளர்ச்சிதான், கடந்த நூற்றாண்டின் மாபெரும் கண்டுபிடிப்பாக தொலைக்காட்சியை மாற்றியிருக்கிறது.

இதனை அங்கீகரிக்கும் வகையில், 1996 முதல் நவம்பர் 21ஆம் தேதியன்று ‘உலக தொலைக்காட்சி தினம்’ கொண்டாடப்படுகிறது.

தொலைக்காட்சியைத் தங்களது தினசரி வாழ்வின் இடையூறாக, வளர்ச்சிக்கான தடங்கலாக நோக்குபவர்களுக்கு, அது ஒரு ‘இடியட் பாக்ஸ்’.

ஆனால், 21ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தலைமுறைக்கு தன் வழியே வேறொரு உலகத்தைக் காட்டிய பெருமையும் இதற்கு உண்டு.

ஏற்கனவே சொன்னதுபோல, எல்லா கண்டுபிடிப்பிலும் நன்மையும் தீமையும் சரிவிகிதத்திலேயே இருக்கின்றன. தொலைக்காட்சியும் கூட அப்படியொன்றுதான்.

நன்மைகளை மட்டுமே கையிலெடுத்து, இன்று ‘உலக தொலைக்காட்சி தின’த்தைக் கொண்டாடுவோம்!

-உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment