தமிழ்த் திரையில் வெற்றித் தடங்கள் – 3
இந்த படத்துல ஹீரோ டபுள் ஆக்ட்ரா’ என்றவாறு திரையரங்கினுள் ரசிகர்கள் உற்சாகமாக நுழைவது இன்றளவிலும் தொடர்ந்து வருகிறது. இரட்டை வேடம் அல்லது அதற்கு மேற்பட்ட வேடங்களில் நடிப்பதென்பது சம்பந்தப்பட்ட நடிகரின் திறமை ஒருபடி மேலே என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.
இன்று பலரும் இதனை வெற்றிகரமான உத்தியாகப் பயன்படுத்துவதற்கு முதல்படியாக அமைந்தது மாடர்ன் தியேட்டர்ஸ் பிதாமகர் டி.ஆர்.சுந்தரத்தின் இயக்கத்தில் வெளியான ‘உத்தமபுத்திரன்’.
இரட்டை மகிழ்ச்சி!
குழந்தையொன்று பிறக்கும்போது மொத்தக் குடும்பமும் மகிழ்ச்சியில் திளைக்கும். அதே நேரத்தில், இரட்டைக்குழந்தைகள் பிறந்தால் அது பன்மடங்காகும். சுருக்கமாகச் சொன்னால், அந்த தந்தை பேராண்மைமிக்கவராகக் கருதப்படுவார்.
அது போலவே, திரையில் இரட்டை வேடத்தில் நடிக்கும் கலைஞரின் திறமை போற்றப்படுவதனைத் தொடங்கிவைத்த பெருமை மறைந்த நடிகர் பி.யு.சின்னப்பாவையே சாரும். 1940ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி வெளியான உத்தமபுத்திரன் தமிழில் வெளியான முதல் இரட்டைவேடப் படம் என்று தனது ‘சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு’ நூலில் குறிப்பிடுகிறார் பிலிம் நியூஸ் ஆனந்தன்.
சர்ச்சைகளை விடுத்துப் பார்த்தால், உத்தமபுத்திரன் திரைப்படம் பல விஷயங்களில் முன்னோடி.
தாங்கள் வியந்து பார்க்கும் நடிகர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட மனிதராய் தோன்றுவது அக்காலகட்டத்தில் ரசிகர்களுக்கு அலாதியான அனுபவத்தையே தந்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
பிறப்பில் பிரிவு!
கூடியிருக்கும் மக்களில் ஒரு தம்பதி அரசருக்குப் பிறக்கப்போவது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று விவாதிப்பதில் தொடங்குகிறது உத்தமபுத்திரன் திரைப்படம்.
பாண்டிய மன்னருக்குப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளில் ஒன்று மந்திரி நாகநாதனிடமும், மற்றொரு குழந்தை வைத்தியர் சூரசேனனிடமும் வளர்கிறது. இரண்டு குழந்தைகள் வளர்ந்தால் யாருக்கு ஆட்சி பொறுப்பு கிடைப்பது என்பதில் மோதல் வரும் என்று அந்தப் பிரிவை நியாயப்படுத்துகிறார் நாகநாதன்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு எனும் எழுத்துடன் மேற்கொண்டு திரைக்கதை விரிவுபெறும் நிலையில் பி.யு.சின்னப்பாவின் அறிமுகம் நிகழ்கிறது. இளவரசர் விக்கிரமன் எந்நேரமும் மாது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் தொடர்பு என்றிருக்கிறார்.
மன்னரின் மறைவுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்கும் விக்கிரமன் புதிதாகப் பல வரிகளை விதிக்கிறார். வாரிசுகளுக்குச் சொத்து, கால்நடை வளர்ப்பு, மேய்ச்சல் நிலத்தில் கிடைக்கும் தீவனம் போன்றவற்றுக்கெல்லாம் வரி விதிப்பதால் மக்கள் கொதிப்படைகின்றனர். இந்நேரத்தில் அரசை எதிர்க்கும் சொக்கநாதனும் அவரது தந்தையும் கைது செய்யப்படுகின்றனர். கொதிக்கும் மக்கள் மன்னரைக் கொல்லும் கோபத்துடன் இருக்க, தன்னைப் போலவே இருக்கும் சொக்கநாதனை அதற்குப் பலியிட நினைக்கிறார் விக்கிரமன். ஆனால் தனது பேச்சு சாதுர்யத்தால் அதிலிருந்து தப்பிக்கிறார் சொக்கநாதன்.
அதன்பின் சோழ இளவரசி மீனாட்சியைச் (எம்.வி.ராஜம்மா) சமாளிக்க சொக்கநாதனை அனுப்புகிறார் விக்கிரமன். அவர் தன் மனதை இளவரசியிடம் பறிகொடுக்கிறார். ஒருகட்டத்தில் சொக்கநாதனும் விக்கிரமனும் சகோதரர்கள் என்று தெரிய வருகிறது.
அதன்பின்னரும் தனது பகையில் உறுதியாக இருக்கிறார் விக்கிரமன். சொக்கநாதனின் முகத்தை இரும்பு முகமூடியால் மூடிச் சிறையில் அடைக்கிறார்.
இந்த உண்மை அறிந்ததும், விக்கிரமனின் மதுபானத்தில் மயக்கமருந்தைக் கலந்து அந்த முகமூடிக்கான சாவியைத் திருடுகிறார் மீனாட்சி. சாவியின் உதவியுடன் சொக்கநாதன் மீட்கப்பட.. அந்த இடத்தில் விக்கிரமன் அடைக்கப்படுகிறார்.
இந்த உண்மையை அறிந்த நாகநாதன் என்ன செய்தார்? மீனாட்சி சொக்கநாதன் இருவருக்கும் திருமணம் ஆனதா என்பதோடு படம் நிறைவடைகிறது.
இரட்டை வேடங்களின் மூலம்!
இரட்டை வேடம் என்றாலும், இந்தக் கதையில் என்ன புதுமை இருக்கிறது என்று தோன்றலாம். தமிழ் திரைப்படங்களில் இரட்டை வேடம் என்பதே சலிப்புறும் அளவுக்கு, க்ளிஷே என்று ஒதுக்கப்படும் நிலைமை தற்போது உள்ளது.
இதற்கெல்லாம் விதை போட்டது உத்தமபுத்திரன் என்பதை மறந்துவிடக் கூடாது. காரணம், இன்று வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படும் இரட்டை வேட பார்முலாவை முதலில் நம் கண்ணில் காட்டிய படம் இது.
இப்படத்தில் சொக்கநாதன், விக்கிரமன் என்று இரண்டு வேடங்களில் நடித்தார் பி.யு.சின்னப்பா. நல்லவர், தீயவர் என்று இரண்டு வேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்டும் வகையில் இப்படத்தில் அவர் உடல் மொழி அமைந்திருக்கும்.
குறிப்பாக, மது மயக்கத்தில் இருப்பதை உணர்த்த சொக்கும் விழிகளுடன் விக்கிரமன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் சின்னப்பா. சொக்கநாதன் திரையில் தோன்றுவதை அந்த கம்பீரமே காட்டிக்கொடுக்கிறது.
ரசிகர்களிடம் நட்சத்திர அந்தஸ்து!
வெறும் பாடல்களால் மட்டுமே தியாகராஜ பாகவதர் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தைப் பெற்ற காலத்தில், இந்த வித்தியாசம்தான் பி.யு.சின்னப்பாவை ‘நடிக மன்னன்’, ‘தவ நடிக பூபதி’ என்று கொண்டாட வைத்திருக்கிறது.
முதல்படமான சந்திரகாந்தா, ராஜமோகன் படங்களைத் தொடர்ந்து பி.யு.சின்னப்பா நடிப்பில் வெளியான பஞ்சாப் கேசரி, ராஜமோகன், அனாதைப்பெண், யயாதி, மாத்ருபூமி ஆகியன சுமாரான வெற்றியையே பெற்றன.
இதனால் வேறு வாய்ப்பு கிடைக்காமல், அவர் ஒரு மடத்தில் துறவியாகச் சேர்ந்தார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு மாறாக, சிலநாட்கள் சரியான உணவு உண்ணாமல் கடுமையான விரதம் மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
அந்த நேரத்தில், உத்தமபுத்திரன் வாய்ப்பை அவருக்குத் தந்திருக்கிறார் டி.ஆர்.சுந்தரம். இப்படத்தில் நாயகன், வில்லன் என்று இரண்டு பாத்திரங்களை ஏற்று நடித்து புதிய மாற்றத்துக்கு வழிவகுத்தார் பி.யு.சின்னப்பா.
தமிழ்த் திரையுலகில் எம்.கே.டிக்கு அடுத்தபடியாக வெற்றிகரமான நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பெறும் வகையில் மாபெரும் வெற்றியைப் பெற்றது உத்தமபுத்திரன்.
நடிகைகளுக்கு முதலிடம்!
அலெக்சாண்டர் துமா எழுதிய ‘தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்’ கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை இயக்கினார் டி.ஆர்.சுந்தரம். இதன் டைட்டில் கிரெடிட்டில் இயக்குனர் பெயருக்குப் பின்னால் அவருக்கு உதவியவர் எஸ்.வேலுச்சாமி என்பவரின் பெயர் இடம்பெறுகிறது. இவர், இப்படத்தில் பாடல்களையும் எழுதியுள்ளார்.
இதற்கடுத்து ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர் மற்றும் நடிப்புக் கலைஞர்களின் பெயர்கள் டைட்டிலில் இடம்பெற்றுள்ளன. எம்.வி.ராஜம்மா, டி.எஸ்.கிருஷ்ணவேணி ஆகிய நடிகைகளுக்கு அடுத்தபடியாகவே டைட்டிலில் பி.யு.சின்னப்பாவின் பெயர் மூன்றாமிடத்தில்தான் வருகிறது.
நடிகர், நடிகைகளின் பெயர்களுக்குப் பிறகு நேரடியாகத் திரைக்கதை விரிகிறது. இப்போதைய படங்களில் டைட்டில் கிரெடிட் இதற்கு நேரெதிராக உள்ளது கவனிக்கத்தக்கது.
அதேபோல படத்திற்கு இசையமைத்தது யார் என்ற தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
என்.எஸ்.கே.யின் ‘தனி’ டிராக்!
இப்படத்தின் இறுதியில் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடித்த காமெடி டிராக் தனியாக இடம்பெற்றுள்ளது. காளி என்.ரத்தினம் நடித்த காட்சிகள் தனி டிராக் போன்றிருந்தாலும், திரைக்கதையின் நடுநடுவே வரும். அப்பாத்திரம் நாகநாதனைச் சந்திப்பது போல லிங்க் உண்டு.
ஆனால், என்.எஸ்.கே., மதுரம் பாத்திரங்களுக்குப் படத்தின் கதையுடன் நேரடித் தொடர்பு ஏதும் கிடையாது. இதுவே இவர்களது நகைச்சுவைக்கு அக்காலத்தில் மக்களிடம் கிடைத்த வரவேற்பைப் பறைசாற்றுகிறது.
பிராமணீயத்தைக் கடுமையாக விமர்சிக்கும் வகையில், இப்படத்தின் என்.எஸ்.கே. குழுவினரின் காட்சிகள் அமைந்திருந்தன.
‘ஸ்லிம்’ பாலையா!
பி.யு.சின்னப்பாவைப் போலவே, இப்படத்தில் மந்திரி நாகநாதனாக நடித்த டி.எஸ்.பாலையாவையும் இன்றைய ரசிகர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. 1960களில் உடல் பருத்து குணசித்திர வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற டி.எஸ்.பாலையா, இப்படத்தில் ரொம்பவும் ஸ்லிம்மாக வருகிறார்.
அவரது பாத்திரத்துக்கு இத்தோற்றம் பொருத்தமற்றிருப்பதாகத் தோன்றினாலும், தனது வசனம் பேசும் திறன் மூலமாக அதனைச் சரி செய்திருக்கிறார் பாலையா.
சின்னப்பாவின் பன்முகம்
உத்தமபுத்திரன் படத்துக்குப் பிறகு ‘மங்கையர்க்கரசி’ படத்தில் மூன்று வேடங்களில் நடித்தார் சின்னப்பா. இடையே அவர் நடிப்பில் வெளியான ஆரியமாலா, மனோன்மணி, கண்ணகி, குபேர குசேலா ஆகிய படங்கள் பெருவெற்றியைப் பெற்றன.
ஜெகதாலப் பிரதாபன் படத்தில் 5 வேடம், ஆரியமாலாவில் 10 வேடம் என்று ஒரே காட்சியில் பலவிதமாகத் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்தார் பி.யு.சின்னப்பா.
திரையில் நாயகன் தலைகாட்டுவதோடு பாடினால் போதும் என்றிருந்த காலத்தில் வாள் சண்டை, சிலம்பம், சுருள்பட்டா வீசுதல் போன்றவற்றைத் தெரிந்து வைத்திருந்தவர். உத்தமபுத்திரன் படத்திலும் அவரது சண்டைக்காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன.
1951ஆம் ஆண்டு தனது 35ஆவது வயதில் பி.யு.சின்னப்பா திடீரென்று மரணமடைந்தார். அதிகமாக அசைவம் சாப்பிட்டதும், மது அருந்தியதும் அதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டது.
பி.யு.சின்னப்பா மறைந்தபிறகே அவரது 26ஆவது படமான சுதர்சன் வெளியானது. யாருடைய கவனத்திற்கும் ஆட்படாமல் அப்படம் காணாமல்போனது.
பாரதி காதல்!
மகாகவி பாரதியாரின் பாடல்கள் மீது காதல் கொண்ட பி.யு.சின்னப்பா அவரது பல பாடல்களைத் திரையில் வெளிப்படுத்தியிருந்தார். இந்த வரிசையில் முதலாவதாக, உத்தமபுத்திரனில் அவர் பாடிய ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ பாடல் அப்போதைய ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகே அப்பாடல் மீண்டும் படத்தில் இணைக்கப்பட்டது.
தியாகராஜ பாகவதரும் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்தான் புகழ்பெற்றார். 1945களில் இருவரது ரசிகர்களும் எதிரிகளாக நினைத்து மோதிக்கொண்ட சம்பவங்கள் பல. அந்த அளவுக்கு இருவரும் புகழின் உச்சத்தைத் தொட்டிருந்தனர். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இருவரும் திரையுலகில் இருந்து காணாமல்போனது காலம் செய்த மாயம்தான்.
1958ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் மீண்டும் வீனஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது. இதேகாலகட்டத்தில் ‘உத்தமபுத்திரன்’ என்ற பெயரில் பூஜை போடப்பட்ட திரைப்படம்தான், பின்னாளில் எம்ஜிஆர் இயக்கத்தில் ‘நாடோடி மன்னன்’ என்ற பெயரில் பெருவெற்றியைப் பதிவு செய்தது.
ஒரு நடிகர் அல்லது நடிகை இரட்டை அல்லது அதற்கு மேற்பட்ட வேடங்களில் நடிக்கிறார் என்றால், வேறுபட்ட பாத்திரங்கள் ஒரே காட்சியில் தோன்றுவதை ஆவலுடன் எதிர்பார்ப்பது ரசிகர்களான நமது வழக்கம். இதனைத் தொடங்கி வைத்தது ‘உத்தமபுத்திரன்’ என்பது தமிழ்த் திரையுலகம் இயங்கும்வரை மாறாது.
‘இரட்டைக் குழந்தைகள் பிறந்துவிட்டால் திரைக்கதையில் வேறு என்னதான் செய்வது’ என்று இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் வி.எஸ்.ராகவன் வசனம் பேசுவார். அதுபோல, உத்தமபுத்திரன் திரைப்படத்தைப் பாராட்டுவதைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்களான நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?
படத்தின் பெயர்: உத்தமபுத்திரன், தயாரிப்பு: தி மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட் சேலம், இயக்கம்: டி.ஆர்.சுந்தரம், கதை: என்.மியான், வசனம்: டி.வி.சாரி, உதவி இயக்கம், பாடல்கள்: வேலுச்சாமி, ஒளிப்பதிவு: பி.வி.கிருஷ்ணய்யர், டபிள்யூ.ஆர்.சுப்பாராவ், ஏ.சண்முகம், ஆடியோகிராபி: சர்தாரிஷ்வர் சிங், பி.சீதாராமன், செட்டிங்ஸ்: ஏ.ஜே.டொமினிக், படத்தொகுப்பு: பி.பி.வர்கீஸ்
நடிப்பு: பி.யு.சின்னப்பா, எம்.வி.ராஜம்மா, டி.எஸ்.பாலையா, காளி, என்.ரத்தினம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் மற்றும் பலர்
- உதய் பாடகலிங்கம்