– ஐ.நா.-வில் இந்தியா வலியுறுத்தல்
பயங்கரவாத அமைப்புகள் நிதியுதவி பெறுவதைத் தடுப்பது தொடர்பான சிறப்பு கூட்டம், ஐ.நா.,வில் நடந்தது.
இதில் பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய தூதரக குழுவின் முதன்மை செயலர் ராஜேஷ் பரிஹர், “பயங்கரவாத அமைப்புகள் நிதியுதவி பெறுவதை தடுத்தால்தான் பயங்கரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் முழு வெற்றி கிடைக்கும்.
சில நாடுகளில் பயங்கரவாத அமைப்புகள் நிதியுதவி பெறுவதைத் தடுக்கும் சட்ட திட்டங்கள் போதிய அளவிற்கு இல்லை. அது தொடர்பான உதவிகளை உலக நாடுகள் வழங்க வேண்டும்.
அதே நேரத்தில் சில நாடுகள் பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிப்பது குற்றம் என தெரிந்தே, அந்த தவறை செய்கின்றன.
பயங்கரவாத அமைப்பினர் சுதந்திரமாக நடமாடவும், தாராளமாக நிதியுதவி பெறவும் உதவுகின்றன.
பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிக்கின்றன. அத்தகைய நாடுகளை பயங்கரவாத செயல்களுக்கு பொறுப்பேற்கச் செய்ய உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
ஐ.நா., தடை செய்த பயங்கரவாத குழுக்களின் தலைவர்கள் மீது தெற்கு ஆசியாவைச் சேர்ந்த சில நாடுகள் நடவடிக்கை எடுக்காமலும், நிதியுதவி பெறுவதைத் தடுக்காமலும் உள்ளதாக, சர்வதேச செயலாக்க ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, பயங்கரவாத நிதியுதவி தடுப்பு அமைப்பின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை அச்செயலுக்கு பொறுப்பேற்கச் செய்ய உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; இதுவே, அதற்கான நேரம்” எனக் கூறினார்.