சிந்து சமவெளி மக்கள் என்ன மொழி பேசினார்கள்?

ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

வாசிப்பு உலகம் :

“சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கால கட்டத்திலிருந்தே அந்நாகரிகம் ஒரு திராவிட நாகரிகமாக இருந்திருக்கலாம் என்பது குறித்த விவாதங்களும் தொடங்கிவிட்டன.

சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்ட செய்தியை ஜான் மார்ஷல் 1924-ம் ஆண்டு அக்டோபரில் இல்லஸ்ட்ரேடட் லண்டன் நியூஸ் இதழில் வெளியான தனது விரிவான கட்டுரையின் மூலம் முதன்முதலாக உலகிற்கு அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியாகி ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே கல்கத்தாவிலிருந்து பதிப்பிக்கப்பட்ட ‘தி மாடர்ன் ரிவியூ’ என்ற இதழில் வங்காள மொழி அறிஞர் சுனிதி குமார் சட்டர்ஜி ‘திராவிடர்களின் தோற்றமும் இந்திய நாகரிகத்தின் தொடக்கமும்’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரையை எழுதினார்.

ராபர்ட் கால்டுவெல்லின் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய ஆய்வுகளையும், சிந்துவெளி அகழ்வாராய்ச்சித் தடயங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுச் செய்திகளையும் மேற்கோள் காட்டி எழுதப்பட்ட இந்தக் கட்டுரை தான் சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிடத் தொடர்பை வலியுறுத்தும் முதல் பதிவாகும்.

இவ்வாறு தொடங்கிய ‘திராவிடக் கருதுகோள்’ கடந்த 90 ஆண்டுகளாகப் பல்வேறு வெளிநாட்டு ஆய்வாளர்களும். இந்திய ஆய்வாளர்களும் செய்த விரிவான ஆய்வுகளின் விளைவாக மென்மேலும் வலுப்பட்டிருக்கிறது.

எனினும் ‘திராவிடக் கருதுகோள்’ இன்றுவரை, ஒப்பீட்டு அளவில், ஆகக் கூடுதலான சாத்தியக்கூறுகள் கொண்ட ஒரு கருத்தோட்டமாக இருக்கிறதேத் தவிர முடிந்த முடிவாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
பல்வேறு அறிஞர்கள், எவ்வளவோ முயன்றும் சிந்துவெளி வரிவடிவங்களை இன்னும் வாசித்தறிய முடியவில்லை. சிந்துவெளி மக்கள் என்ன மொழி பேசினார்கள் என்பது இன்று வரை தெளிவாகவில்லை என்பதே இதற்குக் காரணம்.

இந்நிலையில் சிந்துவெளி மக்களின் மொழி குறித்து ஒன்றுக்கொன்று மாறுபட்ட பல்வேறுக் கருத்துக்கள் நிலவுவதில் வியப்பொன்றும் இல்லை.

தொல் எலாமைட், சுமேரியன், தொல்எலாமைட் திராவிடம், ஹிட்டைட், திராவிடம் மற்றும் இந்தோ ஆரிய மொழிகள் போன்ற மொழிக் குடும்பங்களோடு சிந்துவெளி மொழியைத் தொடர்புபடுத்திப் பல்வேறு ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் வெளியாகியுள்ளன.

பசுபிக் பெருங்கடலிலுள்ள ஈஸ்டர் தீவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ரெங்கோரொங்கோ’ வரி வடிவத்தோடு சிந்துவெளி எழுத்துக்களைத் தொடர்புப்படுத்தியும் கூட ஆய்வுகள் நடந்துள்ளன.

இவை போதாதென்று சிந்துவெளி வரிவடிவம் உண்மையில் வாசிக்கப்படக்கூடிய ஒரு மொழியின் வரி வடிவமா அல்லது வெறும் குறியீடுகள் தானா என்ற ஐயத்தைக் கூடச் சில ஆய்வாளர்கள் எழுப்பிவிட்டார்கள்.

இத்தகைய தெளிவின்மையின் கூட்டு விளைவாக சிந்து வெளிப்புதிர் மிகப் பெரும் கேள்விக்குறியாக இன்றும் தொடர்கிறது”

ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் எழுதி வெளிவந்துள்ள “சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” என்கிற நூலுக்கு அவர் எழுதியுள்ள தன்னுரையிலிருந்து ஒரு பகுதி.

நூல் : சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்,
ஆசிரியர் : ஆர்.பால கிருஷ்ணன்,
பக்கங்கள் 170, விலை: ரூ 150.
வெளியீடு : பாரதி புத்தகாலயம், 7,
இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை -18.
தொ.பேசி : 044- 24332424

Comments (0)
Add Comment