அஞ்சலிதேவி தயாரித்து நடித்த காமெடி படம்!

படங்களைத் தயாரித்து நடிப்பதில் அந்த காலத்திலேயே நடிகர், நடிகைகள் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். அதில் சில நடிகைகள் வெற்றிபெற்றனர். சிலர் தோல்வியடைந்தனர்.

அப்படி நடிகை அஞ்சலிதேவியும் தனது கணவருடன் இணைந்து சில படங்களை தயாரித்து நடித்திருக்கிறார். அதில் அவருக்கு புகழைப் பெற்று தந்தது ‘அடுத்த வீட்டுப் பெண்’ என்ற காமெடி படம்.

சுதிர் முகர்ஜி இயக்கத்தில் மேற்கு வங்கத்தில் வெளியாகி ஹிட்டான படம் ’பஷேர் பாரி’ (Pasher Bari). இதற்கு அடுத்த வீடு என்று அர்த்தம்.

காமெடி, காதல் கதையை கொண்ட இந்தப் படத்தில் சபிர்தி சட்டர்ஜி, பானு பானர்ஜி நடித்திருந்தனர்.

புகழ்பெற்ற சலீல் சவுத்ரி இசை அமைத்திருந்தார். (இவர், தமிழில் தூரத்து இடிமுழக்கம், அழியாத கோலங்கள் உட்பட சில படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்).

இந்தப் படத்தை அப்படியே இறக்குமதி செய்து தெலுங்கில் ‘பக்க இண்டி அம்மாயி’ என உருவாக்கினார்கள்.

அஞ்சலி தேவி ஹீரோயின். ரெலாங்கி, ஏ.எம்.ராஜா உட்பட பலர் நடித்திருந்தனர். சி. புல்லையா இயக்கிய இந்தப் படம் 1953 ஆம் ஆண்டு வெளியாகி தெலுங்கில் வசூலை வாரிக் குவித்தது.

இந்தப் படத்தை சில வருடங்களுக்குப் பிறகு தனது கணவரும் இசை அமைப்பாளருமான ஆதிநாராயண ராவுடன் இணைந்து தமிழில் ‘அடுத்த வீட்டுப் பெண்’ என்ற பெயரில் தயாரித்தார் அஞ்சலி தேவி.

படத்துக்கு ராவ்தான் இசை அமைப்பாளர். அஞ்சலி தேவி ஹீரோயின். அந்தக் காலகட்டத்தில் காமெடி படங்களில் அதிகமாக நடித்து வந்த டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோவாக நடித்தார். தங்கவேலு பாடகராக நடித்தார்.

பக்கத்து வீட்டில் இருக்கும் பணக்காரப் பெண்ணுக்கு இசை, நடனம் மீது தீராத காதல். நன்றாக பாடத் தெரிந்தால், அவள் மனதில் இடம் பிடிக்கலாம் என நினைக்கிறான் நாயகன். அதற்காக பாடகரும் தன் நண்பருமான தங்கவேலு உதவியை நாடுகிறான்.

ஹீரோவுக்காக அவர் குரல் கொடுக்க, இவர் வாயசைப்பார். இதை உண்மை என நம்பும் அடுத்த வீட்டுப் பெண், காதலில் விழ, ஒரு கட்டத்தில் உண்மை தெரிகிறது. காதல், டமார். பிறகு எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை.

ஆதிநாராயண ராவ் இசையில் அனைத்துப் பாடல்களையும் தஞ்சை ராமையா தாஸ் எழுதியிருந்தார்.

பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய ’கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே’அந்த காலத்தில் செம ஹிட். இப்போது கேட்டாலும் அந்த வரிகள் ரசிக்க வைக்கிறது.

‘மாலையில் மலர் சோலையில்…’, ’கண்களும் கவி பாடுதே’ உட்பட அனைத்துப் பாடல்களுமே அப்போது வரவேற்பைப் பெற்றன.

1960ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் காமெடியும் நடனமும் அந்தக் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டன.

இந்தப் படத்தை அப்படியே ’படோசான்’ என்ற பெயரில் இந்தியில் எடுத்தார்கள். பிரபல இந்தி காமெடி நடிகர் மெஹமூத் தயாரித்து, இசை ஆசிரியராக, தமிழராக நடித்திருப்பார்.

படத்தில் அவர் பேசும் சில தமிழ் வார்த்தைகளும் இந்தியை தடுமாறி பேசும் தமிழர்களை கிண்டலடிப்பது போன்று அமைக்கப்பட்டது.

ஒரு பாடலில் அவர் சில தமிழ் வார்த்தைகளையும் பாடியிருக்கிறார். படம் ஹிட்.

எந்த காலத்துக்கும் ஏற்றக் கதையான இது கன்னடத்தில் எடுக்கப்பட்டு வெற்றிபெற்றது.

தெலுங்கில் இதே கதையை 1981 ஆம் ஆண்டிலும் எடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-அலாவுதீன்

Comments (0)
Add Comment