சமூக ஆர்வலர் அனுன் தவான் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், “பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் தினமும் 5 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் இறக்கின்றனர். இது, குடிமக்கள் வாழவும், உணவு பெறுவதற்கும் உள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பட்டினிச் சாவை தடுக்க தேசிய உணவு மையம் ஏற்படுத்தப்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவில், “சமூக உணவுக் கூடம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் எந்த உறுதியும் தெரிவிக்கப்படாதது அதிருப்தி அளிக்கிறது. பட்டினிச் சாவை தடுப்பதுதான் ஒரு அரசின் முக்கிய கடமை.
எனவே, அடுத்த மூன்று வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளுடன் பேசி, சமூக உணவுக் கூடம் அமைப்பதற்கான தேசிய கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
சார்பு நிலைச் செயலர் வாயிலாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.