ஆட்டுவிக்கப் போகிறவர்கள் நீங்கள்; நான் தயார்!

அன்றைய நிழல்:

‘அன்பே வா’ – எம்.ஜி.ஆரின் திரை வாழ்வில் வித்தியாசமான படம். அதோடு ஏ.வி.எம்.மின் முதல் கலர்ப் படம். பெரிய பட்ஜெட் படமும் கூட. படத்தை இயக்கியவர் ஏ.சி.திருலோகச்சந்தர்.

வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லாமல், அருமையான பாடல்களுடன் நகர்ந்த உற்சாகமான படம்.

அந்தப் படம் பெரு வெற்றி.

‘அன்பே வா’ – நூறாவது நாள் விழா சென்னை காசினோ தியேட்டரில் நடந்தபோது எம்.ஜி.ஆரே சொன்னார்.

“அன்பே வா – கதையைக் கேட்டதும் சிரித்தபடியே “திருலோக், இது முழுக்க முழுக்க உங்கள் பொறுப்பு. இதைப் படமாக்கும் விதத்தில் தான் எல்லாமே இருக்கிறது. நாங்கள் எல்லாம் பொம்மைகளாக இருக்கப் போகிறோம். ஆட்டுவிக்கப் போகிறவர் நீங்கள். இதோ நான் தயார்” என்று சொன்னேன்.

அதைக் கேட்டு அதிர்ந்து போனதாகத் தன்னுடைய “நெஞ்சம் நிறைந்த நினைவுகள்” நூலில் பதிவு செய்திருக்கிறார் பல வெற்றிப் படங்களை இயக்கியவரான ஏ.சி.திருலோகசந்தர்.

‘அன்பே வா’ தியேட்டரில் ரிலீஸ் ஆனபோது, அந்தப் பக்கம் போய்க்கொண்டிருந்த அண்ணாவுக்குப் படத்தின் பாடல் கேட்டிருக்கிறது.

உடனே காரை நிறுத்தச் சொல்லிவிட்டு, முண்டாசு கட்டித் தன்னை மறைத்துக் கொண்டு தியேட்டருக்குள் போய்ப் படம் பார்த்திருக்கிறார். இதை அவரே தெரிவித்திருக்கிறார்.

இப்படிப் பல ஆச்சர்யங்களைத் தந்திருக்கிறது ‘அன்பே வா’.

Comments (0)
Add Comment