வ.உ.சி. 150 – ஆண்டு முழுவதும் விழா!

கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார்

நூற்றி ஐம்பதாவது ஆண்டு நிகழும் (1872-2021/ 2022) விழா

எண்பத்தைந்தாவது ஆண்டு நினைவு (18-11-2021) விழா

1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி திரு உலகநாத பிள்ளைக்கும் பரமாயி அம்மையாருக்கும் மகனாய், இன்றையத் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பிறந்த கப்பலோட்டியத் தமிழரும் தமிழறிஞருமான திரு வ.உ.சிதம்பரனார், ‘சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்து துஞ்சிடேன்’ என்பதைத் தன் இறுதி மூச்சுவரையும் எந்தச் சமரசமுமின்றிக் கடைப்பிடித்தவர்.

தன் 64 ஆம் வயதில், சொல்லொணாத் துயரத்தை எதிர்கொண்டு, 18-11-1936 நள்ளிரவில் தன் கண்களை இறுதியாக மூடினார்.

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில், பிரிட்டிஷாரின் ‘இந்தியன் ஸ்டீம் நேவி கேஷன் கம்பெனி’க்கு எதிராக,‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்கிற கப்பல் நிறுவனத்தை16-10-1906 இல் தூத்துக்குடியில் உருவாக்கி,

அதன்மூலம் ’எஸ்.எஸ்.காலியோ’, ’எஸ்.எஸ்.லாவோ’ (1907 மே) என்கிற இரண்டு கப்பல்கள் வாங்கி, பிரிட்டிஷாரின் பொருளாதாரத்திற்குப் பெரும் தடையை ஏற்படுத்தி, ‘கப்பலோட்டியத் தமிழ’னாய் உயர்ந்தவர் வ.உ.சி.!

தூத்துக்குடியில் அப்பொழுது இயங்கி வந்த ‘கோரல் மில்’ தொழிலாளர் வேலை நிறுத்தத்தை1908 பிப்ருவரி 27 இல் தலைமையேற்று நடத்தியவர் வ.உ.சி.அவர்களாகும்.

இது, இந்திய அளவிலேயே குறிப்பிட்டுச் சொல்லத்தகும், தொழி லாளர் வேலை நிறுத்தமாகும். இவரைப் பற்றிய பிரிட்டிஷாரின் அச்சத்திற்கு ஒரு சான்று, ‘பிள்ளையின் (வ.உ.சி.) பிரசங்கத்தையும்,

பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணமும் உயிர்த் தெழும்; அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்; புரட்சி ஓங்கி எழும்’ என்று, வ.உ.சி.யைத் தண்டித்த நீதிபதி பின்ஹே கூறினாரென்றால், வ.உ.சிதம்பரனாரின் /பாரதியாரின் வீரத்தையும், ஆதிக்க எதிர்ப்பையும் எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள இயலும்.

’கோயமுத்தூர் சிறைச்சாலையைப் பார்க்கப் போகிறவர்களில், யார்தான் நமது தக்ஷிண தேசாபிமானச் சிங்கமான ஸ்ரீலஸ்ரீ சிதம்பரம் பிள்ளையைப் பற்றிச் சிந்தியாமல் இருக்க முடியுமா…?’ என்பதாய்,

’பாரதநாட்டின் புதிய புண்ணியத் திருத்தலங்கள்’ கட்டுரையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வ.உ.சி.யைக் குறிப்பிடுகிறார்.

’திருநெல்வேலியில் உத்தம தேசாபிமானியாகிய வ.உ.சி., தூத்துக்குடிக்கும் சிலோனுக்கும் சுதேசிக் கப்பல் போக்குவரத்து ஸ்தாபித்திருப்பது, சுதேசியத்திற்கு அவர் செய்திருக் கும் பெரும் பணிவிடையாகும்’ என்பதாய்த் திலகரால் போற்றப்பட்டவர் (24-10-1908 சுதேசமித்ரன்) வ.உ.சி!

வ.உ.சிதம்பரனாரின் நூற்றி ஐம்பதாவதாண்டு, தமிழக அரசால் சீரிய முறையில் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து,

கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், தென்னகப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம், கலைகளின்வழி அவரைத் தமிழ்ச் சமூகத்திடம் நம் காலத்தில் நினைவுபடுத்தி, அவரின் பெருமையை-சிறப்பை, அவர் வாழ்ந்த மண்ணின் மக்களிடம் கொண்டு செல்லுகிற முயற்சியேயாகும் இது!

இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில், நாட்டு விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்து, தமிழக மக்களின் உணர்வுகளில் சுதந்திர உரமேற்றிய ஆற்றல்மிகு தியாக சீலர்களைக் கலைகளின்வழி நினைவுகூர்ந்து,

மாணவர்களிடம்-பொதுமக்களிடம்-கலைஞர்களி டம்- அத்தியாக சீலர்களின் நாட்டுணர்வை, மொழியுணர்வை, தியாகத்தை அர்ப்பணிப்பு உணர்வுடன் கொண்டு செலுத்தும் முயற்சியின் தொடக்கமே, இந்நிகழ்வாகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள், ஆகஸ்ட்15, 2021அன்று, தலைமைச் செயலகத் தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து,

இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டைத் தமிழ் நாடு அரசு ஆண்டு முழுக்கக் கொண்டாடும் என்று அறிவித்ததன் தொடர்ச்சியாக, தமிழகத் தில் வாழ்ந்துவரும் கலைவடிவங்களின்வழி,

சுதந்திரக் கனல் மூட்டிய தியாக சீலர்களைக்  கொண்டாடுவதே, இந்நிகழ்வின் சாரமாகும். இந்தக் கொண்டாட்டத்தின் அடையாளமாகவே, சுதந்திரத் தாகத்தைத் தமிழ் மண்ணில் ஊட்டிய சான்றோர்களின் தியாகங்களைப் போற்றும் முகத்தான், செப்டம்பர் 5 ஆம் தேதியன்று,

’கப்பலோட்டியத் தமிழர்’ வ.உ.சி அவர்கள் பிறந்த150 ஆவது ஆண்டையும், செப்டம்பர் 11ஆம் தேதியன்று, ‘பாட்டுக்கொரு புலவர்’ பாரதியின் 100 ஆம் ஆண்டு நினைவையும், ஓராண்டு முழுக்கத் தமிழ்நாடு அரசு கொண்டாடும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பதையும் கருத்திற்கொண்டு,

மூன்று நிகழ்வுகளையும் இணைத்து, ஓவியக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், கிராமியக் கலைஞர்கள் மற்றும் திரைக் கலைஞர்கள் ஆகியோர் பங்கேற்பில், தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் கலைவடிவங்களின்வழி, திருவையாற்றில் நிகழும் இசையஞ்சலியைப்போல், எட்டு நிலைகளாக, ஓராண்டு முழுக்கக் கொண்டாடுவதே, இத்திட்டத்தின் செயல்பாடாகும்.

மூன்று நிகழ்வுகளிலும், மிக முக்கியப் பங்களிப்பாக, ஒவ்வொரு நிகழ்விலும் 25 ஓவியர் கள் எனும் கணக்கில் 75 எண்ணிக்கையிலான,தேர்வு செய்யப்பெற்ற, தமிழக மாணவ ஓவி யர்களின், சுய ஆற்றல்கொண்ட தனி ஓவியர்களின், ஓவியப் பங்கேற்பு இருக்கும்.

அவர்கள் ஓவியம் வரைவதற்கான உபகரணங்களையும் பயணச்செலவுகளையும், தென்னகப் பண்பாட்டு மையத்தின் உதவியுடன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், அவர்களுக்கு வழங்கும்.

பார்வையாளர் கண்முன்பு, தங்கள் உள்ளெழும் படைப்பு அதிர்வுகளைத் தங்கள் கோடுகளின் மூலமும், வண்ணங்களின் மூலமும், ஓவியக் கலைஞர்கள், அப்போதைக்கு,

அந்தக் கணத்தில் உருவாக்குகிற அவர்களின் படைப்பின் நிகழ்வுப்போக்கைப் பார்வையாளர் எவரும் நேரில் கண்டு, ஓவியக் கலைஞர்களுடன் நேரிடையாக ’அளவலாவல்’ நிகழ்த்த வாய்ப்பளிக்கப்படும்.

அது, ஆவணமாகப் பதிவு செய்யப்படும். வல்லுநர் குழுவினர், மூன்று நிகழ்வுகளின் ஒவ்வொரு ஓவியப் போட்டியிலிருந்தும், சிறந்த ஓவியம் ஒன்றைத் தெரிவு செய்வர். தேர்வு செய்யப்பெற்ற மூன்று ஓவியங்களுக்கும், ஓவியம் ஒவ்வொன்றிற் கும் ரு.25000/- பணமுடிப்பு வழங்கப்படும்.

பங்குபெறும் அனைத்து ஓவியர்களுக்கும், கலைக் குழுக்களுக்கும் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், தென்னகப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கும். மூன்று ஓவியப் போட்டி நிகழ்வுகளிலும், இதே நடைமுறை பின்பற்றப்படும்.

’கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சி அவர்கள் பிறந்த 150 ஆவது ஆண்டு

1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி திரு உலகநாத பிள்ளைக்கும் பரமாயி அம்மையாருக்கும் மகனாய், இன்றையத் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பிறந்த கப்பலோட்டிய தமிழரும் தமிழறிஞருமான திரு வ.உ.சிதம்பரனார், ‘சொந்த நாட்டிற் பரர்க்க டிமை செய்து துஞ்சிடேன்’ என்பதைத் தன் இறுதி மூச்சுவரையும், எந்தச் சமரசமுமின்றிக் கடைப்பிடித்தவர்.

தன் 64 ஆம் வயதில், சொல்லொணாத் துயரத்தை எதிர்கொண்டு, தன் கண்களை இறுதியாக மூடினார். இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில், பிரிட்டிஷா ரின் ‘இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’க்கு எதிராக,

‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்கிற கப்பல் நிறுவனத்தை 16.10.1906 இல் தூத்துக்குடியில் உருவாக்கி, அதன்மூலம் ’எஸ். எஸ். காலியோ’, ’எஸ்.எஸ். லாவோ’ (1907 மே) என்கிற இரண்டு கப்பல்கள் வாங்கி, பிரி ட்டிஷாரின் பொருளாதாரத்திற்குப் பெரும் தடை ஏற்படுத்தி, ‘கப்பலோட்டிய தமிழ’ ராய் உயர்ந்தவர் வ.உ.சி.!

தூத்துக்குடியில் அப்பொழுது இயங்கிவந்த ‘கோரல் மில்’ தொழிலா ளர் வேலை நிறுத்தத்தை,1908 பிப்ருவரி 27 இல் தலைமையேற்று நடத்தியவர் வ.உ.சி. அவர்களாகும். இது, இந்திய அளவிலேயே குறிப்பிட்டுச் சொல்லத்தகும் தொழிலாளரின் வேலை நிறுத்தமாகும்.

இவர்மேலான பிரிட்டிஷாரின் அச்சத்திற்கு ஒரு சான்று, ‘பிள்ளை யின் (வ.உ.சி.) பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணமும் உயிர்த்தெழும்;

அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்; புரட்சி ஓங்கி எழும்’ என்று, வ.உ.சி.யைத் தண்டித்த நீதிபதி பின்ஹே கூறினாரென்றால், வ.உ. சிதம்பரனாரின் / பாரதியாரின் வீரத்தையும், காலனி ஆதிக்க எதிர்ப்பையும் எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள இயலும்.

வ.உ.சிதம்பரனாரின் நூற்றி ஐம்பதாவதாண்டு, தமிழக அரசால் சீரிய முறையில் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்திருப்பதை மனதில் நிறுத்தி, கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், தென்னகப் பண்பாட்டு மையத்தின் உதவியுடன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,

அவருடைய 85ஆவது ஆண்டு நினைவு நாளில், கலைகளின்வழி அவரைத் தமிழ்ச் சமூகத்திடம் நினைவுபடுத்தி, அவரின் சிறப்பை-பெருமையை, அவர் வாழ்ந்த, ஒட்டப்பிடாரம் மண்ணின் மக்களிடம், கொண்டு செல்லுகிற முயற்சியேயாகும் இது!

முதலாவதாக, தமிழ்நாட்டின் தென் பகுதியிலிருந்து தேர்வு செய்யப்பெற்ற, தனித்த அடையாளங்கொண்ட, சுயமாகச் செயல்பட்டு வரும், ஓவியப் போட்டியில் பங்கேற்கும் ஆர்வமுடைய 25 ஓவியர்கள், வ.உ. சிதம்பரனார் பற்றிய தங்கள் மனச் சித்திரத்தை ’செயல்பாடு களினூடே வ.உ.சி.’ எனும் பொதுத் தலைப்பில், தங்கள் கற்பனைக்கேற்ப, தங்கள் ஓவிய  பாணியில், ஓவியமாய் வரைவர்.

வ.உ.சி. எனும் சுதந்திரப் போராட்ட ஆளுமைக்கு உயிரூ ட்டக்கூடியதாய் அவ் ஓவியங்கள் இருக்க வேண்டும். கலை வல்லுநர்களால் ஒரு ஓவியம் சிறந்ததாகத்தேர்வு செய்யப்பெறும்.

இதுபோக, இன்னொரு சிறப்பு நிகழ்வாக, ஈரோடு விதை பதிப்பகத்தின் சார்பில், 1908 இல் வெளிவந்த, தமிழக முதல்வர் அவர்கள் வாழ்த்துரை வழங்கியிருக்கிற ‘ஸ்ரீமான் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் ஜீவிய சரித்திரம்’ எனும் நூல்,113ஆண்டுகளுக்குப் பின், மறுபதிப்பாக, வ.உ.சி. பிறந்த ஒட்டப்பிடார மண்ணில், நிகழ்வின் தொடக்கவிழாவின்போது வெளியிடப்பெறும்.

ஒட்டப்பிடாரம் மக்களிடம், இந்தநிகழ்ச்சியை வீர்யமுடன் கொண்டு செல்லும் தன்மையில், 17-11-2021 அன்று காலை, மாலையில், ஒட்டப்பிடாரத்தின் பல்வேறு தெருக்களில்,

பறையாட்டத்துடன் மரக்காலாட்டம் நிகழ்த்தி – அன்று இரவு மெக்கவாய் கிராமிய மேனிலைப் பள்ளியில் நிகழும் வ.உ.சி. வில்லிசையையும்,

மறுநாள்(18-11-2021) வ.உ.சி. அரசு மேனிலைப் பள்ளியில், காலையில் நிகழயிருக்கும் ஓவியப் போட்டி நிகழ்ச்சியையும், அதைத் தொடர்ந்து, மாலையில் மெக்கவாய் மேனிலைப் பள்ளியில் நிகழும் ’வ.உ.சி. சரித்திரம்’ எனும் புதிய பொம்மலாட்ட நிகழ்ச்சியையும், நிகழ்த்த இருப்பதாக – விளம்பரப்படுத்தப்படும்.

ஒட்டப்பிடாரம் நிகழ்ச்சிகள், கலை பண்பாட்டுத் துறையின் நெல்லை மண்டலத்தின் ஒத்துழைப்புடன் நிகழும்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு நூற்றாண்டு

இரண்டாவதாக, இத் திட்டத்தின் தொடர்ச்சி, மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளான 11-12-2021 அன்று சென்னையில் தொடங்கும்.

‘அக்கினிக் குஞ்சொன்று கண் டேன்’ என்று பாடிய பாரதியின் கவி ஆளுமையையும், ‘ஆடுவோமே, பள்ளு பாடுவோமே’ என்று பாடிய, பாரதியின் காலனிய ஆதிக்க எதிர்ப்பையும் விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பாரதியின் நினைவு நூற்றா ண்டில் அறிவித்துள்ள, ‘பாரெங்கும் பாரதி-பாரதி குறித்த நிகழ்வுகள்’ எனும் ’போற்றுதல்’ பிரிவில்,

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம், ‘நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா’ என்ற பொருளில், கலைஞர்களும், மக்களும் அவருக்கு மனமுவந்து நினைவேந்தல் செய்யும் பொருட்டு,

அவர் நினைவை ‘உச்சி முகர்ந்து’, அவரின் கவிதை வரியின் வழி ஓவியமாய், பாரதியின் படைப்பாளுமையை-தமிழுணர்வை-விடுதலை வேட்கையை-மக்களிடம் கொண்டு செல்கிற முயற்சியாக இது அமையும்.

தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியிலிருந்து, தனித்த அடையாளங்கொண்டுச் சுயமாகச் செய ல்பட்டுவரும், போட்டியில் பங்கேற்கும் ஆர்வமுடைய, தேர்வு செய்யப்பெற்ற 25 ஓவியர்கள், சென்னை, வாணி மகாலுக்கு ஓவியம் வரைய அன்று அழைக்கப்படுவர்.

அவர்களுக்குப் பிடித்த, பாரதியின் கவிதை வரி ஒன்றை அவர்கள் உள்வாங்கி, அவரவர்களுக்கு உண்டான ஓவிய பாணியில், அவர்கள், அதை ஓவியமாக்கி, பாரதியின் கவி யாத்திரையைத் தங்கள் தூரிகையால் வண்ணக் களஞ்சியமாக்கித் தருவர்.

மாலையில், எஸ். பி. கிரியேஷன்ஸ் குழுவினர் வழங்கும் ’பாரதி யார்?’ எனும் நாடகம் நிகழ்த்தப்படும்.

75 ஆவது இந்திய சுதந்திர தின ஆண்டு

மூன்றாவதாக, 12-12-2021 அன்று ஞாயிற்றுக்கிழமை, சென்னை வாணி மகாலில் ’இந்தியச் சுதந்திர தினத்தின் 75 ஆவது ஆண்டுக் கொண்டாட்டம்-விடுதலை வேள்வியில் ஆகுதி யான தமிழகச் சுதந்திரப் போராட்ட வீரர்கள்-தமிழகக் கலைகளின்வழி அச்சீலர்களை நினைவு கூர்தல் ’ எனும் நிகழ்வு நிகழும்.

அதில், சென்னை அரசு ஓவியக் கல்லூரி மற்றும் கும்பகோணம் அரசு ஓவியக் கல்லூரியில், இளநிலையில் இறுதியாண்டு பயிலும் மாணவ ர்கள் மற்றும் முதுநிலை பயிலும் ஓவிய மாணவர்களில்,

கல்லூரிகளிலிருந்து தேர்வு செய்யப் பெற்ற, 25 ஓவிய மாணவர்கள், தமிழ்நாட்டின் விடுதலை வேள்வியில் தங்கள் ஆகுதியைக் கரைத்த, வீரர்களின் ஓவியத்தை, அவ்வீரர்கள் ஈடுபட்ட வரலாற்றுச் சம்பவங்களினூடே, அவர்கள், தங்கள் கற்பனைக்கேற்ப தங்களின் ஓவிய பாணியில் வரைவர்.

அவர்களை உந்தித் தள்ளிய அவ்விடுதலை வீரருக்குத் தங்கள் ஓவியப் படைப்பின்மூலம், ஓவியக் கலைஞர்கள் உயிரூட்டுவர். சென்னை-அரசு கவின் கலைக் கல்லூரியின் ஒத்துழைப்புடன் இது நிகழும்.

மாலையில், ஸ்ரீகலா பரத் குழுவினரின் ‘வீரம் விளைந்த பூமி’ எனும் நாட்டிய நாடகம், நிக ழும். ’சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர்தல்’ எனும் ஒரு குடையின்கீழ்,

தமிழகச்  சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெரும்பான்மையினரை, மக்கள் நினைவின் மேல் தளத்திற்குக் கலைகளின்வழி நகர்த்துகிற நோக்கத்தைத் தன் வரைமுறையாய்க் கொண்டு இது நிகழும்.

சுதந்திரப் போராட்டத்தில் களம் கண்ட தமிழக வீரர்கள்- கண்காட்சி

நான்காவது நிலையாக, 25-12-2021 அன்று, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற வளாகத்தில் அல்லது லலித் கலா அகாடமியில், போட்டியில் கலந்துகொண்ட 75 ஓவியங்களையும்,

’சுதந்திர வேள்வியில் களம் கண்ட தமிழக வீரர்கள்’ எனும் தலைப்பில், கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தி, அது தொடர்பான கலந்துரையாடலை, தக்க ஓவியக் கலை விமரி சகர்களைக் கொண்டு, விவாதிக்கும் அரங்கொன்று நிகழ்த்தப்படும்.

அதையொட்டி நடை பெறும் நிகழ்வில், 18-11-2021/ 11-12-2021/ 12-12-2021 ஆகிய நாட்களில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு, தேர்வான சிறந்த ஓவியங்களை வரைந்த ஓவியர்கள் கௌரவிக்கப்படுவர்.

கண்காட்சியில் வைக்கப்படும் ஓவியங்கள், கலை விற்பன்னர்களால், கலாரசிகர்களால் விலைக்கு வாங்கப்படுகையில், அதில் கிடைக்கும் வருமானத்தில், குறிப்பிட்ட அப்படைப்பை உருவாக்கிய படைப்பாளிக்கு 70% மும், மற்றையச் செலவுகளுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் 30% மும் எனும் கணக்கில் பிரித்துக் கொள்ளும்.

ஓவியக் கண்காட்சியும் கலை நிகழ்ச்சியும் – சுதந்திர தின 75 ஆம் ஆண்டு நிறைவு

ஐந்தாவது நிலையாக, சுதந்திர தினத்தின் 75 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியாக ஆகஸ்ட் 15, 2022 இல், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நிகழ்த்தியிருந்த மூன்று ஓவியப் போட்டி நிகழ்ச்சிகளின்மூலம் பெறப்பட்ட 75 ஓவியங்களின் கண்காட்சி, மக்களின் பார் வைக்காகத் தஞ்சாவூரில் வைக்கப்படும்.

மாலையில், ’சுதந்திர வேள்வியில் தங்களை அர்ப் பணித்த ஈகியர்கள்’ எனும் கருத்தில், ஆறு மாத கால அவகாசத்தில் புதிய பொருண்மையில் எழுதி உருவாக்கிய ’நாட்டிய நாடகம்’ ஒன்று நிகழ்த்தப்படும்.

விற்கப்பட்ட ஓவியங்களின் இடத்தில், அவ்வவற்றின் ஒளிப்படம் வைக்கப்படும். தஞ்சையின் மண்டலக் கலை, பண்பாட்டுத் துறையின் ஒத்துழைப்புடனும், கும்பகோணம் அரசு ஓவியக் கல்லூரியின் உதவியுடன் இது நிகழும்.

ஓவியக் கண்காட்சியும் கலை நிகழ்ச்சியும்- திரு வ.உ.சி.யின் 150 ஆவது ஆண்டு நிறைவு

ஆறாவது நிலையில், செக்கிழுத்த சிதம்பனார்-கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சி.யின் 150 ஆவது பிறந்த தின ஆண்டின் நிறைவு விழா, 05-09-2022 இல் கோவையில் நிகழும்.

அந்நிகழ்வில், போட்டியில் கலந்துகொண்ட 75 ஓவியர்களின் ஓவியக் கண்காட்சியும் (விற்கப் பட்டவைபோக, மீதமுள்ள ஓவியங்கள்), வ.உ.சி.யின் கதையைப் பொம்மைகளின் வழியே கூறும் கையுறை பொம்மலாட்ட நிகழ்ச்சியும், வ.உ.சி. பற்றிய புதிய நாட்டிய நாடகம் ஒன்றும் நிகழ்த்தப்படும். கோவை மண்டலக் கலை பண்பாட்டுத் துறையின் ஒத்துழைப்புடன், இந் நிகழ்ச்சி நிகழ்ந்தேறும்.

ஓவியக் கண்காட்சியும் கலை நிகழ்ச்சியும்- பாரதியின் நினைவு நூற்றாண்டு நிறைவு

ஏழாவது நிலையாக, இங்கிருக்கிற நாடக / கூத்துக் குழுவைக் கொண்டு, பாரதி எழுதியிரு க்கிற ’பாஞ்சாலி சபதம்’  காப்பியத்தை நாடகமாக்கும் / கூத்தாக்கும் முயற்சி நிகழும்.

இந்தக் காலத்திற்கேற்ப, பாரதியின் பாஞ்சாலி சபதத்தைப் புதிய வாசிப்பிற்கு உட்படுத்தி, புதிய படைப்பாக்கிப் பாரதிக்குப் புதிய பெருமையை அதன்மூலம் சூட்டவேண்டும்.

அதற் கேற்ப, பாரதியின் பாஞ்சாலி சபதத்தைக் கொண்டு, பாரதியை உள்வாங்கிய புதிய கூத்துப் பிரதி / புதிய நவீன நாடகப் பிரதி ஒன்றை, தேர்வு செய்யப் பெற்ற, ஒரு கூத்துக் குழுவை/ ஒரு நவீன நாடகக் குழுவை வேண்டி, அவர்களைக் கொண்டு அதை நவீனக் கூத்தாக்கி / நாடகமாக்கி, அவற்றை, பாரதியின் 100 ஆவது நினைவு ஆண்டின் நிறைவான 11, செப்ட ம்பர் 2022 இல், காஞ்சிபுரத்தில் நிகழ்த்தலாம்.

ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்ட 75 ஓவியங்களின் கண்காட்சியும் அங்கு நிகழும். காஞ்சிபுரம், மண்டலக் கலை பண்பாட்டுத் துறையின் ஒத்துழைப்புடன் இது நிகழும்.

நூற்பதிவு

இவற்றின்வழி, 75 ஆவது சுதந்திர தின ஆண்டையும், திரு வ.உ.சி.யின் 150 ஆண்டையும், பாரதியின் 100 ஆவது நினைவு ஆண்டையும், தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கிணங்க, கலைகளின்வழி, தமிழகம் முழுக்கப் பரவலாகக் கொண்டு சேர்க்க, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் இத் திட்டம் உதவும்.

இதன்மூலம், மொழி உணர்வு, நாட்டு உணர்வு, சமுதாய உணர்வு ஆகியவை மாணவர்கள் மத்தியில், கலைஞர்கள் மத்தியில், பொதுமக் கள் மத்தியில் இயல்பாகக் கொண்டு சேர்க்கப்படும்.

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட் டுத் துறையின் சார்பில், தென்னகப் பண்பாட்டு மையத்தின் உதவியுடன், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் நவம்பர் -18, 2021 முதல் செப்டம்பர் – 11, 2022 வரை நிகழ்த்திய அனைத்து நிகழ்ச்சிகளும் தொகுக்கப்பட்டு என்றும் நினைவில் நிற்கும்படி, வண்ண அச்சு நூலாக, டிசம்பர் -11, 2022 இல், அது முறையாக வெளியிடப்படும்.

இது, இந்நிகழ்வின் எட்டாவது நிலையாக அமையும்.

மு.இராமசுவாமி,

உறுப்பினர் செயலாளர்,

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்.

Comments (0)
Add Comment