சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுக்கு நிகரான வலிமையோடு இருந்தது.
காமராஜர் போன்ற தலைவர்களின் தலைமை, சென்னை போன்ற நகரங்கள் முதல் கிராமங்கள் வரையிலான கட்டமைப்பு, தொண்டர்கள் பலம் என காங்கிரஸ் கட்சி நிஜமான பேரியக்கயமாக விளங்கியது.
அது, கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் தி.மு.க.வில் இருந்த நேரம்.
1967 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தோற்ற போதிலும் காங்கிரசின் பலம் குன்றவில்லை.
1971 ஆம் ஆண்டு தேர்தலில் தான் தமிழகத்தில் காங்கிரசின் வீழ்ச்சி ஆரம்பமானது.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் பிளவு பட்டிருந்தது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தார்.
காமராஜர், மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தலைமையில் இயங்கிய கட்சி ஸ்தாபன காங்கிரஸ் என அழைக்கப்பட்டது.
(தமிழகத்தில் உள்ள சில பத்திரிகைகள் பழைய காங்கிரஸ் என பெயர் சூட்டி இருந்தன)
இந்திரா தலைமையிலான கட்சி – காங்கிரஸ் (ஆர்) என அழைக்கப்பட்டது. தமிழகம், குஜராத் போன்ற சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் ஸ்தாபன காங்கிரஸ் வலிமையாக இல்லை.
காங்கிரஸ் என்றால் அது, தனது தலைமையிலான காங்கிரஸ் தான் என்பதை நிரூபிக்க நாடாளுமன்றத்துக்கு 1971 ஆம் ஆண்டு திடீர் தேர்தலை அறிவித்தார் இந்திரா.
தமிழக சட்டசபைக்கும் தேர்தலை நடத்த விரும்பினார் முதலமைச்சர் கருணாநிதி.
தி.மு.க.வுக்கு எதிராக காமராஜரும், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜியும் மெகா கூட்டனியை அமைத்திருந்தனர்.
90 சதவீதம் பேர் இந்தக் கூட்டணியே வெல்லும் என கணித்தனர். நிஜமான கள நிலவரமும் அப்படித்தான் இருந்தது.
கலக்கத்தில் இருந்த கருணாநிதி பல சமரசங்களைச் செய்து கொண்டு அந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்தார். இந்திரா காங்கிரசுடன் உடன்பாடு கண்டார்.
காங்கிரஸ் எதிர்ப்பில் கருவாகி, உருவாகி, வளர்ந்து ஆட்சியைப் பிடித்த தி.மு.க., அதே காங்கிரசின் மற்றொரு பிரிவுடன் கூட்டணி அமைக்க வேண்டியது, கருணாநிதிக்கு காலத்தின் கட்டாயமாக இருந்தது.
சிபிஐ, பிரஜா சோசலிஸ்ட் கட்சி, தமிழரசு கழகம், முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்து கொண்டு சீட் கொடுத்தார் கருணாநிதி.
எல்லாவற்றுக்கும் மேலாக கருணாநிதிக்கு துணையாக எம்.ஜி.ஆர். இருந்தார். காமராஜர்- ராஜாஜி கூட்டணி தேர்தலில் மண்ணை கவ்வியது.
தி.மு.க.183 தொகுதிகளைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது. அதுவரை தி.மு.க,- காங்கிரஸ் என தமிழகத்தில் நிலவிய இருமுனைப் போட்டி 1972-ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியதும் மும்முனை போட்டியானது.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அது ஊர்ஜிதமானது. அந்தத் தேர்தலில் அதிமுக வென்றது. ஸ்தாபன காங்கிரஸ் 2 ஆம் இடம் பிடித்தது.
ஆளுங்கட்சியாக இருந்த திமுக 3 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
காமராஜர் கொஞ்சகாலம் உயிருடன் இருந்திருந்தால் அடுத்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கும், ஸ்தாபன காங்கிரசுக்கும் இடையே தான் போட்டி இருந்திருக்கும்.
காமராஜரின் திடீர் மரணம் தமிழக அரசியல் போக்கையே தலைகீழாக மாற்றியது.
ஸ்தாபன காங்கிரஸ் உடைந்தது.
கருப்பையா மூப்பனார் தலைமையில் மெஜாரிட்டி ஆட்கள் இந்திரா காங்கிரசில் சேர்ந்தனர்.
பா.ராமச்சந்திரன் தலைமையில் செயல்பட்ட ஸ்தாபன காங்கிரஸ், பின்னாட்களில் இந்திய அளவில் நிகழ்ந்த மாற்றம் காரணமாக ஜனதாவில் இணைந்து – கொஞ்ச காலத்தில் காணாமல் போனது.
1977 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் – தமிழகத்தில் இனி மீண்டும் இருமுனைப் போட்டி தான் என உணர்த்தியது.
அந்தத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார்.
48 இடங்களில் வென்ற தி.மு.க., எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. 27 இடங்களில் மட்டும் வென்ற மூப்பனாரின் காங்கிரஸ் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.
1967 மற்றும் 71-ல் எதிர்க்கட்சி என்ற நிலையில் இருந்த காங்கிரஸ், 77ல் மூன்றாம் இடத்துக்கு சரிந்தபோதே அதன் கட்டமைப்பு குலைந்து போனது. தொண்டர்கள் சோர்வடைந்தார்கள். மக்களும் விலகினார்கள்.
இந்திரா, ராஜீவ், மூப்பனார் காலத்தில் மூன்றாம் இடத்தைத் தக்கவைத்திருந்த காங்கிரஸ், அந்தத் தலைவர்கள் மறைவுக்கு பின் தமிழகத்தில் கரைந்தே போனது.
77 மற்றும் 89 இல் தனியே நின்று முறையே 27 மற்றும் 26 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி – இன்றைக்கு தனித்து நின்றால் ஒரு எம்.பி. தொகுதியிலும் வெல்ல முடியாது என்பதும், அதிக பட்சம் 2 அல்லது 3 எம்.எல்.ஏ இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் என்பதே புள்ளி விவரங்கள் சொல்லும் உண்மை.
– பி.எம்.எம்.