கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘வனவாசம்’ நூலில் இருந்து ஒரு பகுதி.
“கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் திரு.வெங்கடசாமிக்கு ஒரு சீட்டுக் கொடுத்து அனுப்பினான்.
வரச்சொன்னார். போய்ப் பார்த்தான்.”
“எந்த மாதிரி வேலையை எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.
“அருமையாக கதை எழுதுவேன். அற்புதமான வசனம் எழுதுவேன்” என்றான்.
“அதற்கெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள்” என்றார்.
அவர் கொஞ்சம் வேடிக்கையாகப் பேசுவார்.
“பாட்டு எழுதத் தெரியுமா?” என்றார்.
“ஓ.. எழுதுவேன்” என்றான்.
எது அவனுக்குத் தெரியாது?
“அவனைப் பற்றிய அபிப்பிராயமே அவனுக்கு நிறைய இருந்தது..” என்று தன்னைப் பற்றியே படர்க்கையில் எழுதியிருக்கிற கண்ணதாசன், இயக்குநர் ராம்னாத்திடம் அறிமுகப்படுத்தப் பட்டதுமே, படத்திற்குப் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது.
படம் ‘கன்னியின் காதலி‘.
அதில் எழுதிய கவிஞரின் முதல் பாடல்,
“கலங்காதிரு மனமே –
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே”
முதல் பாடலிலேயே முளைத்துவிட்டது நம்பிக்கை.