சென்னை பெரம்பூர் மற்றும் விருகம்பாக்கத்தில் மரம் சரிந்து விழுந்ததில் கடந்த 2013-ல் இருவர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் மாநகராட்சியின் அலட்சியத்தால் நேர்ந்ததாக, 31 லட்சம் ரூபாய், 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி உறவினர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “பொது இடங்களில் நடக்கும் விபத்துக்களுக்கு, பொது மக்களின் தவறு காரணம் அல்ல. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
அரசியல் மற்றும் இதர காரணங்களின் அடிப்படையில், வெவ்வேறு தொகை வழங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஒதுக்கி விட முடியாது.
மக்களின் பாதுகாவலனாக இருக்கும் அரசு, கருணைத் தொகை, இழப்பீடு தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இழப்பீடு வழங்குவதில் எந்த பாரபட்சமும் இருக்கக் கூடாது.
மோட்டார் வாகன விபத்து வழக்குகளில், இழப்பீடு தொகையை கணக்கிட வழிமுறைகள் உள்ளன. வாகன விபத்துக்களை, இயற்கை சீற்றங்களால் நடக்கும் விபத்துக்களுடன் ஒப்பிட முடியாது.
மரங்கள் சரிவது; மின்னல் என இயற்கை சீற்றங்களின் போது, பொது இடங்களில் நடக்கும் விபத்துக்களுக்கு, இழப்பீடு அல்லது கருணைத் தொகை வழங்க வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
அரசு வேலையுடன் 1 கோடி ரூபாய் இழப்பீடு; 50 லட்சம் இழப்பீடு; ஐந்து லட்சம் மற்றும் ஒரு லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. எந்த அடிப்படையில் இந்த இழப்பீடு நிர்ணயிக்கப்படுகிறது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.
பொது இடங்களில் நடக்கும் விபத்துக்களுக்கு, எவ்வளவு இழப்பீடு பெற முடியும் என்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தெரிய வேண்டும்.
அதிகாரிகளின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, இதர காரணங்களுக்காக நிர்ணயிப்பது போல் உள்ளது. இழப்பீட்டை நிர்ணயிக்க, அரசியல் உள்ளிட்ட காரணங்கள் இருக்கக்கூடாது.
கருணைத் தொகை, இழப்பீடு, பாரபட்சமின்றி ஒரே மாதிரியாக வழங்கப்பட வேண்டும். வழிமுறைகள் இல்லாமல் இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டால், பாரபட்சத்துக்கு வழிவகுக்கும்.
எனவே, பொது இடங்களில் நடக்கும் விபத்துக்களுக்கு இழப்பீடு, கருணைத்தொகை நிர்ணயிக்க எட்டு வாரங்களில் வழிமுறைகள் வகுக்க வேண்டும்.
மனுதாரர்கள், 12 வாரங்களில் அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும். புதிய வழிமுறைகளின்படி, விண்ணப்பங்களை அரசு பரிசீலிக்க வேண்டும்.
அரசு தரப்பில் இழப்பீடு வழங்குவதால், தகுதியுள்ளவர்கள் காப்பீட்டுத் தொகை பெறுவதற்கு தடையில்லை” என உத்தரவிட்டார்.