விபத்துகளில் உயிரிழந்தோரின் உடல்களுக்கு பகல் நேரங்களில் மட்டுமே பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன. சில அறிவியல்பூர்வ மற்றும் தொழில்நுட்ப வசதிகள் காரணமாக, இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்த நடைமுறையை மாற்றி சூரிய அஸ்தமனத்திற்கு பின்னும் பிரேத பரிசோதனைகளை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவலில், “தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்பட்டுள்ளன. எனவே, இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை நடைமுறைகள் மேற்கொள்வது சாத்தியமான ஒன்று தான்.
எனினும் கொலை, தற்கொலை, பாலியல் வன்கொடுமை, சிதைந்த உடல்கள், சந்தேக மரணங்கள் ஆகியவை தொடர்பான உடல்களுக்கு, இரவு நேரங்களில் பிரேத பரிசோதனைகள் செய்யக்கூடாது. சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் மட்டும் அதை மேற்கொள்ளலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.