அக்கரைப் பச்சைக் கனவு!

இந்திய ஐ.டி துறை இளைஞர்களையும் இளைஞிகளையும் ஒரு பெரும் பூதம் பிடித்து ஆட்டிக் கொண்டுள்ளது.

அக்கரைப் பச்சையாக Green card என்னும் அந்த பச்சைக்கனவு அவர்களை வாஸ்கோடகாமாவின் கனவு மண்டலத்துக்குள் வசீகரித்து உறங்க விடாமல் செய்கிறது.

கையில் தீப்பந்தத்துடன் லிபர்டி மங்கை (அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி) தங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவாள் என நம்புகிறார்கள்.

ஐ.டி துறையில் காலடி எடுத்து வைத்ததுமே இந்தக் கனவு பலருக்கு துவங்கத் தொடர்கிறது. சுந்தர் பிச்சை உலகநாயகனாகத் தோன்ற ஆரம்பிக்கின்றார்.

ஸ்டிவ் ஜாப்ஸின் புத்தகங்களைத் தேடித்தேடி படிக்கிறார்கள். Placement ஒரு பெரிய ஐ.டி நிறுவனத்தில் கிடைத்ததுமே ஒலிம்பிக் மெடல் வாங்கிய தோரணையில் தன் பிற துறை சார்ந்த நண்பர்களை ஓரக்கண்ணால் பார்க்கிறார்கள்.

டாலர் (Dollar) மதிப்பு இந்திய ரூபாயில் ஏறும்போது புளகாங்கிதம் அடைகிறார்கள்.

ஒருவழியாக ஆன்ஷேர் கிடைத்து, சிலிக்கான் வெளிக்குள் கால் வைக்கும் தருணத்தில் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்த Giant leapயை உணர்ந்தது போல மேனி சிலிர்க்கிறார்கள்.

சிலர் இந்த வாய்ப்புக்காக பட்ட மேல் படிப்பை லட்சங்களைக் கொட்டி அமெரிக்க பல்கலைக்கழகங்களைத் தேடி ஓடுகிறார்கள்.

L1B, H1B , 140  என பல விசா (visa) படிக்கட்டுகள் அங்கு அவர்கள் காலைத் தடுக்கும் போதுதான் சற்று கனவு தடுமாறத் தொடங்குகிறது.

அதற்குள் ‘அமெரிக்க மாப்பிள்ளை’ ஆகி அமெரிக்காவிலேயே குழந்தை பெற்று விடுகிறார்கள். எட்டு முழ வேட்டி கட்டும்  அப்பாவை baby sitter உத்யேகத்திற்கு தற்காலிகமாக அழைத்து வந்து காட்டன் டிரவுசர் மாட்டியும், அம்மாவுக்கு உல்லன் தொப்பியும் போட்டு அழகு பார்க்கிறார்கள்.

அதற்குள் 3 கம்பெனி மாறியும் மானேஜர் என மெடல் மாட்டிக்கொண்டு இந்தியாவிற்கு
மூன்று வார விடுமுறையில் சாக்லெட் டப்பாவுடன் சென்று பள்ளித் தோழனைப் பார்த்து, தங்கள் வீரதீரசாதனைகளை விரிவாகக் கதை அளக்கிறார்கள்.

டிவியில் பார்த்த அரைகுறை அரசியலை துவைத்து அலசி காயப்போட்டு, “நம்ம ஊரெல்லாம் உருப்படதப்பா” எனத் தீர்ப்பு வாசிக்கிறார்கள்.

கிரீன் கார்டு வரிசையில் நீண்டு கிடக்கும் எண்களில் தங்களைத் தேடுகிறார்கள். அது மாயமான் மாதிரி மறைந்து ஒளிந்து வேடிக்கை காட்டுகிறது.

சொட்டையாகிப் போனத் தன் தலையையும், பிட்ஸாவால் சரிந்த தொப்பையையும் தடவிக் கொண்டு, மூன்று வார விடுமுறையில் தன் மனைவி மக்களுடன், தன்னைப் போலவே வேட்டைக்கு வந்த தன் மாநில நண்பனின் குடும்பத்துடன், ஸ்டார் பாக்ஸ் காப்பிக் கோப்பையுடன் லாங் டிரைவ் போய் “மகிழ்ந்து” வாழ்கிறார்கள்.

அப்பாவையும் அம்மாவையும் உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கலவரத்துடன் I phone இல் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆறுதல் சொல்கிறார்கள்.

இப்படியாகத் தானே… நம் வாரிசுகள் சகல சவுக்கியமாக அமெரிக்க மண்ணில்  வாழ்கிறார்கள்.

அமெரிக்காவில் இருந்து  ட்ரவுசருடன்

-ஆதிரன்.

Comments (0)
Add Comment