நிலக்கோட்டை ஜமீன்: தலைகீழாக மாறிப்போன நிலைமை!

மதுரை மாவட்டம், நிலக்கோட்டை மெயின் ரோட்டில் இருந்து பார்க்கும்போதே விஸ்தாரமாகத் தெரிகிறது. ஏறத்தாழ 300 வயதான அந்த அரண்மனை. பெயர்: கூளப்ப நாயக்கர் அரண்மனை.

17-ம் நூற்றாண்டின் கடைசியில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த அரண்மனையின் சரித்திரம். நிலக்கோட்டை ஜமீனை ஆண்டவர் கூளப்ப நாயக்கர்.

மதுரை திருமலை நாயக்கரின் வம்சாவழியைச் சார்ந்தவர்களில் ஒருவர். வடக்கில் திண்டுக்கல்லில் இருந்து மேற்கில் சித்தையன்கோட்டை வரை 108 கிராமங்கள் இவர் வசம் இருந்தன.

கூளப்ப நாயக்கர், பரிவாரங்கள் சகிதமாகப் பன்றிமலைக்கு வேட்டைக்குப் போயிருக்கிறார். அங்கே நவரத்தின மாலை என்ற மலை சாதிப் பெண்ணுடன் காதல் ஏற்பட, இருவரும் வெகு அந்நியோன்யமாக வாழ்ந்திருக்கிறார்கள்.

அந்தச் சமயத்தில் அரண்மனையில் இருந்து அவசர அழைப்பு வந்திருக்கிறது. உடனே, கிளம்பி விட்டார் கூளப்ப நாயக்கர்.

பிரிவினால் அழுது மெலிந்த கூளப்ப நாயக்கர், பரிவாரங்களுடன் சென்று நவரத்தின மாலையை அழைத்து வந்து திருமணம் புரிந்து கொண்டதாகக் கதை.

சுப்ரதீபக் கவிராயருக்கு இந்தக் கதையைக் கேட்டதும் குறுகுறுத்ததோ என்னவோ, இலக்கியக் காவியமாக எழுதித் தள்ளிவிட்டார் ‘கூளப்ப நாயக்கன் காதல்’ என்று. இதைவிடச் சுவாரஸ்யமானது கூளப்ப நாயக்கரின் பிற்கால வாழ்க்கை.

அப்போது ஜமீன்தார்கள் தாங்கள் வசூலித்த வரியில் மூன்றில் ஒரு பாகத்தைக் கிஸ்தியாக ஆங்கிலேயருக்குக் கட்டியாக வேண்டும். மூன்று வருடக் கடுமையான வறட்சியால் மக்களிடம் நாயக்கரால் வரி வசூல் பண்ண முடியவில்லை.

கிஸ்தியும் அரசாங்கத்துக்குக் கட்டின பாடாயில்லை பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஆங்கிலேயர்கள் ஜமீனைக் கைப்பற்றிக்கொண்டார்கள். திரும்பவும் கிஸ்தியைக் கட்டி ஜமீனை மீட்டிருக்கிறார் கூளப்ப நாயக்கர்.

திரும்பவும் வறட்சி. கிஸ்தி கட்ட முடியவில்லை. ஆங்கிலேயர் கூளப்ப நாயக்கரைப் பிடித்து வர உத்தரவிட்டார்கள். 1798-ல் வீராவேசமான சண்டையே நடந்து இருக்கிறது. நாயக்கர் தப்பிவிட்டார்.

ஆங்கிலேயருக்கு ஏகமாய்க் கோபம். ‘நாயக்கர் தலையைக் கொண்டுவருபவர்களுக்குப் பரிசு’ என்று ஊர் ஊராகத் தண்டோரா போடச் செய்தார்கள்.

பிறகு, தற்செயலாகப் பிடிபட்ட கூளப்ப நாயக்கரைக் கைதியாகக் கூட்டிப் போய், குதிரைக்குக் கொள்ளு வைக்கும் வேலையில் அமர்த்தியிருக்கிறார்கள்.

அதிலும் ‘தண்ணி காட்டிவிட்டு’த் தப்பி ஓடியிருக்கிறார். பின்னாலேயே விரட்டியிருக்கிறார்கள். தலைதெறிக்க ஓடியவர், வழியில் பார்த்த கழைக்கூத்தாடிகளோடு கூத்தாடியாக வேஷம் போட்டுக்கொண்டு ஆடியிருக்கிறார்.

ஆட்டம் முடிந்ததும் ஜனங்களிடம் தட்டேந்திப் போயிருக்கிறார்கள்; நாயக்கரும் தட்டேந்தி இருக்கிறார். அப்படி வரும்போது மற்றவர்களுக்கு வராத சந்தேகம் பார்த்துக்கொண்டு நின்ற சிலுக்குவார் பட்டி கணக்குப்பிள்ளைக்கு வந்துவிட்டது.

‘ஜமீன்தார் வெள்ளைக்காரர்களுக்குப் பயந்துகொண்டு இப்படித் தட்டேந்தித் திரிவதா?’ என்று ஆங்கிலேயரிடம் ஓடிப் போய் அழாத குறையாக,

”என் தலையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்; எங்கள் ஜமீன்தாரை இப்படி அலைய விடாதீர்கள்” என்று கேட்டுக்கொள்ள… ஆங்கிலேயர்கள் நாயக்கரது செல்வாக்கைப் பார்த்து அசந்துபோய் அவரிடம் மீண்டும் ஜமீனை ஒப்படைத்தார்கள்.

ஜமீனுக்காக நாயக்கர் இவ்வளவு சிரமப்பட்டும் பின்னால் வந்த வாரிசுகள் கிஸ்தியைக் கட்ட முடியாமல், ஜமீனை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்துவிட்டார்கள் பென்ஷனாக 246 ரூபாயும் 96 காசுகளும் பெற்றிருக்கிறார்கள்.

முந்தைய ஜமீன்தாரான காமைய சிந்தம கூளப்ப நாயக்கர் காலத்தில்கூட ஏகப்பட்ட விளை நிலங்கள் இருந்திருக்கின்றன. சுற்றியுள்ளவர்கள் கேஸ் போட்டு நிலங்கள் எல்லாம் பறிபோயின.

நாங்கள் சென்ற சமயம், அரண்மனைத் திண்ணையில் அமர்ந்திருந்தார் ஒரு மூதாட்டி. முந்தைய ஜமீன்தார், மறைந்த காமைய சிந்தம கூளப்ப நாயக்கரின் மனைவி.

பெயர் திருப்பதிமுத்து வேலாண்டி அம்மாள். 61 வயதாகிறது. அந்த ஜமீன் களை இன்னும் முகத்தில் நிழலாடுகிறது. கூடவே, அவரது ஒரே மகன் 33 வயதான சுந்தர ராஜ கூளப்ப நாயக்கர். கூளப்ப நாயக்கர் என்கிற பெயர் பரம்பரையாகத் தொடரும் பெயராம்.

”அந்தக் காலத்துல கழுத்து முழுக்க நகையோட ஜமீன் பெண்ணாக இந்த வீட்டுக்குள் நுழைஞ்சேன்” என்று கூறிய முந்தைய ஜமீன்தாரின் மனைவியான முத்து வேலாண்டி அம்மாள், திண்டுக்கல் தாலுகாவில் உள்ள சுக்காம்பட்டி ஜமீனில் இருந்து, சீர்செனத்தியுடன் இந்த அரண்மனைக்குள் நுழைந்தபோது நிறைய நிலங்கள், வெளியே எங்கு கிளம்பினாலும் பல்லக்கில்தான் போய் வந்திருக்கிறார்கள்.

பல்லக்கு போகும்போது முன்னாலும் பின்னாலும் 10 பேர். இவரது கணவரான காமைய சிந்தம கூளப்ப நாயக்கருக்கு சினிமாக்காரர்களின் சகவாசம், ரேஸ் ஆசை எல்லாம் சேர்த்து ஜமீனின் சொத்தையும் அற்புதமான பரம்பரைப் பொக்கிஷங்களையும் முத்துவேலாண்டி அம்மாளின் கழுத்தையும்கூடத் துடைத்துப்போட்ட மாதிரி கபளீகரம் செய்துவிட்டு இருக்கிறது.

கணவர் இறந்ததும் மிஞ்சியது இந்த அரண்மனையும் சுற்றியுள்ள வறட்சியான 13 ஏக்கர் 72 சென்ட் நிலமும்தான். இப்போதும் இவர்களுக்கு வருகிற பென்ஷன் முன்பிருந்த அதே 246 ரூபாயும் 96 காசும்தான்.

”அவருக்கு மட்டும் அந்த மாதிரிப் பழக்கம் இல்லைன்னா, நாங்க இந்தக் கதியிலா கிடப்போம்” என்று கண்கலங்கிப் போகிறார் மறைந்த ஜமீன்தாரின் மனைவி முத்துவேலாண்டி அம்மாள்.

வறட்சியான நிலத்தில் விவசாயமும் செய்ய முடியாமல் வருகிற பென்ஷன் தொகையும் பற்றாக்குறையாக இருக்க… தங்களிடம் இருந்த பல அற்புதமான பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக விற்க ஆரம்பித்துவிட்டார்கள்.

பெரிய யானைத் தந்தம் எல்லாம் விற்கப்பட்டு இருக்கின்றன, ஒரு சில 100 ரூபாய்களுக்காக. அரண்மனையின் பின்னால் கிடந்த பல்லக்குகள்கூட விற்கப்பட்டுவிட்டன.

உட்புறத்தில் கதவுகளுக்கும் ஜன்னல்களுக்கும் மேல் இருந்த அழகான, வேலைப்பாடான பலகைகள் எல்லாம் விற்கப்பட்டன. கதவுகளுக்குப் பதில் தற்போது கோணியால் மூடப்பட்ட நிலை.

பழம்பெருமை எல்லாம் இருந்தாலும் நடப்பில் உள்ள கஷ்டங்களை மெதுவான குரலில் சொன்னார் முத்துவேலாண்டி அம்மாள்.

”இப்ப எந்த வருமானமும் இல்லை. வாழ்க்கையை நடத்தறதே பெரிய கஷ்டமாப் போயிட்டுது. சில ஜமீன்காரங்க ஜமீனை அரசாங்கத்துக்கிட்டே ஒப்படைக்கிறப்ப மொத்தத் தொகையா வாங்கியிருக்காங்க.

ஆனா, நாங்க அப்படி வாங்காம பென்ஷன் மட்டுமே வாங்கிட்டு வர்றோம். அப்ப நிர்ணயம் பண்ணின பென்ஷனுக்கு இப்ப என்ன மதிப்பிருக்கு?

இப்ப இருக்கிற விலைவாசிக்கு இது எப்படிங்க பத்தும்? இந்த பென்ஷனையாவது கொஞ்சம் கூட்டிக் கொடுத்தாங்கன்னா புண்ணியமா இருக்கும்” – கை கூப்பி அழாத குறையாகச் சொன்னார்.

மகனும் ஜமீன்தாரின் வாரிசுமான சுந்தர ராஜ கூளப்ப நாயக்கரை ”ஏதாவது வேலைக்குப் போகக் கூடாதா?” என்று கேட்டபோது சொன்னார்:

”நான் படிச்சது எட்டாவது வரைக்கும்தாங்க. ஏதாச்சும் ஒரு இடத்தில் வேலை கேட்டாக்கூட ‘ஜமீன் வாரிசா’னு கேட்டுத் திருப்பி அனுப்பிடுறாங்க. லோன் மாதிரி ஓரளவு பணம் கிடைச்சா, சின்னக் கடைகூட வெச்சு வாழ்க்கையை ஓட்டிருவேன்.

இருக்கிற அரண்மனையும் எப்ப இடிஞ்சு விழுமோனு இருக்கிறப்ப எதை நம்பி எங்களுக்கு லோன் கொடுப்பாங்க? சொல்லுங்க” என்கிறார் இளைய ஜமீனான இந்த 33 வயசுக்காரர்.

எங்களைக் கூட்டிக்கொண்டு போய் அரண்மனையின் உட் புறத்தைக் காட்டினார். பல பகுதிகள் இடிந்துபோய், சில இன்னும் இடியும் நிலையில் இருக்கின்றன.

ஓர் அறையில் கத்தி, குத்தீட்டி போன்ற பழங்காலச் சமாசாரங்கள் துருப்பிடித்த நிலையில் இருக்கின்றன.

மற்றோர் அறையில் கிடந்த பழைய காலச் சுவடிகளை எல்லாம் சமீபத்தில் தொல்பொருள் இலாகா வாங்கிச் சென்றிருக்கிறதாம்.

அரண்மனையின் முன்புறம் ஒரு புராதனக் கோயில். மச்சுப் பெருமாள் கோயிலாம்… பழங்கால நுணுக்க வேலைப்பாட்டைச் சொல்லிக்கொண்டு அநாதையாய்க் கிடக்கிறது கட்டடம்.

கோயிலின் நடுவே வெகு அழகான மேற்கூரை. மேற்புறத்தில் மிகுந்த நுட்பத்துடன் செதுக்கப்பட்ட மர வேலைப்பாடுகள்.

அற்புதமான மரக் கடைசலில் உருவான இந்த இடம் சரியான பராமரிப்பு இல்லாமல் அழுக்கும் தூசியுமாகக் கிடக்கிறது.

இதேபோல, அரண்மனை முகப்பில் மழை, வெயிலை எல்லாம் மீறி நுணுக்கமான கம்பீரத்துடன் நிற்கிறன நான்கு யாளிகள். அவ்வளவு பெரிய அரண்மனையில் மருந்துக்குக்கூட மின்சார வயரையோ, பல்பையோ பார்க்க முடியவில்லை.

சொல்லிக்கொண்டு கிளம்பியபோது, சற்றுத் தொலைவு கூடவே வந்தார் இளைய ஜமீன்தார் சுந்தர ராஜ கூளப்ப நாயக்கர்.

சிறிது தூரம் கடந்ததும் மிகுந்த கஷ்டப்பட்ட நிலையிலும் பதவிசாக மூன்று இரண்டு ரூபாய் நோட்டுகளை எடுத்து, ‘உங்களுக்கு என்ன செய்யறதுனு தெரியலைங்க… தயவுபண்ணி வழிச் செலவுக்காவது இதை வெச்சுக்கணும்… புடிங்க” என்று சொன்னபோது, நாம் மறுத்ததும் கொஞ்சம் தடுமாற்றத்துடன் திரும்பவும் அரண்மனைக்குக் கிளம்பிப் போனார்.

‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!’ என்று சின்ன வயசில் படித்தது அப்போது நினைவுக்கு வந்தது.

-மணா

*****

செப்டம்பர் 5, 2012 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் 1984 ம் ஆண்டு வந்த கட்டுரை.

அதே கட்டுரை மறுபடியும் விகடன் பொக்கிஷம் – தொகுப்பில் வெளியானது.

என்னுடைய ‘தமிழர்கள் மறுத்தும், மறக்காததும்’ நூலிலும் இதே கட்டுரை வெளியாகி இருக்கிறது. அஸைட் ஆங்கிலப் பத்திரிகை மற்றும் குமுதம் பத்திரிகையிலும் இதே அரண்மனையைப் பற்றி எழுதியிருக்கிறேன்.

மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்த அரண்மனை ஒரு சமயம் பெய்த பெரு மழையின் போது சரிந்து விழுந்து போனது. அதில் குடியிருந்த ஜமீன் வாரிசுகளில் சிலர் பரிதாபமாக உயிரிழந்து போனார்கள்.

அப்போதும் அந்த அரண்மனைக்குப் போய் எழுதியிருக்கிறேன். வரலாறு எவ்வளவு பாரமாகிப் போனது இவர்களுக்கு!

Comments (0)
Add Comment