ஒரு நாள் ஒரு மரம் வெட்டி ஆற்றின் மேல் நீட்டிக் கொண்டிருந்த ஒரு மரத்தின் கிளையை வெட்டிக் கொண்டிருந்தான். கை தவறி அவனது கோடரி ஆற்றில் விழுந்துவிட்டது.
கோடரி போய்விட்டதே என்று அவன் அழுதபோது கடவுள் அவன் முன் தோன்றி, ”ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்.
“எனது கோடரி ஆற்றில் விழுந்துவிட்டது. மரம் வெட்டிப் பிழைக்கும் எனக்கு எனது கோடரிதான் முக்கியமான பொருள்” என்று அந்த மரம்வெட்டி கூறினான்.
தங்கம், வெள்ளிக் கோடரிகளைக் காட்டிய கடவுளிடம் நேர்மையாக நடந்து கொண்டதால், இரும்புக் கோடரி உள்ளிட்ட மூன்றையும் மரம் வெட்டிக்கு அன்புப் பரிசாக அளித்தார் கடவுள்.
சிறிது காலம் கழித்து அந்த மரம்வெட்டி தனது மனைவியுடன் ஆற்றங்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள்.
அதற்காக அவன் அழுதபோது, கடவுள் அவன் முன் தோன்றினார். “கடவுளே, என் மனைவி ஆற்றில் விழுந்து விட்டாள்” என்று அழுதுகொண்டே கூறினான் மரம்வெட்டி.
கடவுள் ஆற்றில் மூழ்கி ரம்பையைக் கொண்டு வந்து காட்டி “இதுதான் உன் மனைவியா?” என்று கேட்டார். அதற்கு அந்த மரம் வெட்டி, “ஆம் இவள்தான் என் மனைவி” என்று கூறினான். திகைத்துப் போன கடவுளுக்குக் கோபம் வந்துவிட்டது. ”நீ பொய் சொல்கிறாய். இவள் உன் மனைவியல்ல!” என்று கூறினார்.
அதற்கு மந்த மரம்வெட்டி, “என்னை மன்னியுங்கள் கடவுளே. தாங்கள் தவறாக நினைத்து விட்டீர்கள். பாருங்கள். இள் என் மனைவியல்ல என்று கூறினால், நீங்கள் ஊர்வசியைக் கொண்டு வந்து காட்டுவீர்கள்.
அப்போதும் ‘அவள் என் மனைவியல்ல’ என்று நான் கூறினால், கடைசியாக எனது மனைவியைக் கொண்டு வந்து காட்டுவீர்கள்.
‘அவள்தான் என் மனைவி’ என்று நான் கூறினால் தாராள மனதுடன் மூன்று பேரையும் என்னிடம் கொடுத்து விடுவீர்கள். கடவுளே நானோ ஏழை அந்த மூன்று பேரையும் வைத்துக் கொண்டு நான் எப்படி சமாளிப்பேன்?” என்று கடவுளைக் கேட்டான்.
எப்போதெல்லாம் பொய் கூறுகிறோமோ, அந்தப் பொய் கூறுவதற்கு ஒரு நல்ல காரணம் இருக்க வேண்டும்; மற்றவர்களின் நன்மைக்காகவே அந்தப் பொய்யைக் கூறுகிறோம் என்பதும்தான்.
வெண்ணையை உருக்கும் சூரியன்தான் களிமண்ணைக் கடினமாக்குகிறது என்பதைப் புரிந்து கொண்டால், வாழ்க்கை அழகு நிறைந்ததாக அமையும்.
– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘ஒரு கதை… ஒரு விதை…’ என்ற நூலிலிருந்து…