இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி!

பறவைகள் வாழ்வு, இயற்கைப் பாதுகாப்புக்காக வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்ட ஆராய்ச்சியாளர் சலீம் மொய்சுதீன் அப்துல் அலி பிறந்தநாள் இன்று. (நவம்பர்-12)

மும்பையில் பிறந்த சலீம் அலி, சிறு வயதில் பெற்றோரை இழந்ததால் மாமாவிடம் வளர்ந்தார். இளம் வயதில் விளையாட்டுத் துப்பாக்கியால் ஒரு சிட்டுக் குருவியை சுட்டுவிட்டார். இறந்து விழுந்த குருவியை அவரால் மறக்கவே முடிய வில்லை.

பிறகு, சித்தப்பாவை நச்சரித்து மும்பை இயற்கை வரலாற்றுக் கழக நிர்வாகி மில்லர்ட் என்பவரை சந்தித்தார். அவரிடம் இருந்துதான் பறவைகளைப் பற்றிய பல விஷயங்களை அறிந்துகொண்டார்.

கல்லூரியில் படிக்கும்போது, தொழிலில் அண்ணனுக்கு உதவ பர்மா சென்றவரின் மனம் பறவைகளைச் சுற்றியே சிறகடித்தது. புதுப்புது பறவை மாதிரிகள், இறகுகளை சேகரித்தார்.

மீண்டும் மும்பை திரும்பி விலங்கியல் படித்தார். பின்னர், தேசிய வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில் ‘கைடு’ (வழிகாட்டி) வேலை கிடைத்தது.

சிறிது காலத்துக்குப் பிறகு, அந்த வேலையை விட்டுவிட்டார். பறவையியலில் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஜெர்மனி சென்று டாக்டர் இர்வின் ஸ்ட்ராஸ்மனிடம் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.

தூக்கணாங் குருவியின் வாழ்க்கை முறை பற்றி 1930-ல் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு புகழ் பெற்றார்.

1932-ல் ‘கேரளப் பறவைகள்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார் சலீம் அலி. பறவையியல் தொடர்பான பத்திரிகை ஒன்றை நடத்தினார்.

தேசிய அளவில் பறவைகள் சரணாலயம் அமைப்பதில் இவரது தொண்டு மகத்தானது. பறவைகளின் நண்பனாக, பாதுகாவலராக விளங்கியதோடு, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டிருந்தார்.

பறவைகளின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள், இனப்பெருக்கம், வலசைபோதல் குறித்து ஏராளமான கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார் சலீம் அலி. ‘இந்திய, பாகிஸ்தான் பறவைகளின் கையேடு’, சுயசரிதை நூலான ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ ஆகியவை உலகப் புகழ் பெற்றவை.

நாடு முழுவதும் சுற்றி, பறவைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட சலீம் அலியின் ‘இந்தியப் பறவைகள் பற்றிய கையேடு’ என்ற புத்தகம் மொத்தம் 13 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தகவல்களை திரட்டத் தொடங்கியது இவர்தான்.

மும்பை இயற்கை வரலாற்றுக் கழக புரவலராக இருந்தார். பத்மபூஷண், பத்மவிபூஷண் மட்டுமின்றி, பல நாடுகளில் இருந்தும் பல்வேறு விருதுகள், சிறப்பு பட்டங்கள், பரிசுகள் பெற்றுள்ளார்.

பறவைகளைப் பற்றி அறிந்துகொள்வதை பொழுதுபோக்காக இல்லாமல், வாழ்க்கைப் பணியாகவே மேற்கொண்டிருந்தார்.

மக்கள் இவரை ‘பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக் களஞ்சியம்’ என்றே அழைத்தனர்.

பறவை ஆராய்ச்சி, இயற்கைப் பாதுகாப்பு ஆகிய பணிகளில் சுமார் 65 ஆண்டுகாலம் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட சலீம் அலி 92-வது வயதில் காலமானார்.

சலீம் அலியின் சுயசரிதையான ‘ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ என்ற நூலிலிருந்து அவரது கூற்று:

“நான் ஒரு சாமானியன். மர்மங்கள், உணரமுடியாதவை போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை கிடையாது. எனவே நான், மனிதன் பிற உயிர்களில் இருந்து எவ்வகையிலும் மாறுபட்டவனல்ல என்று உறுதியாகவே நம்புகிறேன்.

பிற விலங்குகளுக்குள்ள அடிப்படை உந்துதல்கள், இயல்புகள், பழகுமுறைகள்தான் அவனிடமும் காணப்படுகின்றன.

ஆனால் ஒன்று, அவனது மூளை அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. அதைக்கொண்டு அவன் செயலையும், சிந்தனையையும், பகுத்தறிவுக்கேற்ப அமைத்துக் கொள்ள முடிகிறது.

அதேசமயம் தேவன் விதித்த விதி என்று கூறி பிற உயிர்களிலிருந்து தான் உயர்ந்தவன் என்ற பொய்யான ஒரு முடிவை தானே கற்பித்துக் கொள்கிறான்.

மனிதனின் உணர்சிகள், இயல்புகள், பழகுமுறை ஆகியவை பிற விலங்குகளிலிருந்து வேறுபட்டதல்ல; யோசித்து பார்த்தால் கொஞ்சம் மெருகூட்டபட்டவை என்று சொல்லலாம்; அவ்வளவுதான்”

நவம்பர் – 12 பறவையியல் அறிஞர் சாலிம் அலியின் பிறந்தநாளான இந்தநாளில் தங்களைச் சுற்றி இருக்கும் பறவை இனங்களை காக்க, உலகெங்கும் தங்களால் இயன்ற அளவு உழைத்துக் கொண்டிருக்கும் பறவை மனிதர்களுடன் கரம் கோர்ப்போம்.!

நன்றி: தோழர் கணேசன்

Comments (0)
Add Comment