– தமிழக நீர்வளத்துறை எச்சரிக்கை
ஏரிகளின் கரைகளை உடைத்து, நீரை வெளியேற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளன. இதில், 170 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 147 ஏரிகள் நிரம்பும் கட்டத்தில் உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 315 ஏரிகள் முழுதும் நிரம்பியுள்ளன; 158 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன.
சென்னை விரிவாக்கப் பகுதிகளில், 16 ஏரிகள் நிரம்பும் கட்டத்தை நெருங்கி வருகின்றன.
இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஏரிகளில் நீர் தேங்கி வருவதால், ஆக்கிரமிப்புப் பகுதிகள் வேகமாக மூழ்கி வருகின்றன.
இதனால், ஆக்கிரமிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் இதுபோன்று ஏரிகளில் அதிகளவு நீர் தேங்கும்போது, அவற்றின் கரைகளை உடைத்து, நீரை வெளியேற்றும் வேலைகளில் ஆக்கிரமிப்பாளர்கள் ஈடுபடுவர்.
இதனால், ஏரிகளில் நீரை தேக்க முடியாத நிலைமை ஏற்படும்.
தற்போது ஏரிகள் வேகமாக நிரம்பும் நிலையில், அவற்றை நீர்வளத் துறையினர் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளின் அனுமதியின்றி, ஏரிகளின் கரைகளை உடைக்கும் ஆக்கிரமிப்பாளர்கள், சமூக விரோதிகள், அரசியல் கட்சியினர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.