நூல் வாசிப்பு:
★ “நீங்க மதுரையா? நானும் மதுரதான்!
மதுரய்ல எங்க?
மதுரைக்குப் பக்கம்!
பக்கம்னா எங்க?
மதுரல நீங்க எந்த ஏரியா?
பூர்வீகமாவே மதுரயா? மதுரப் பக்கமா அல்லது மதுரைக்குப் பக்கமா?”
-இப்படி இரண்டு பேரின் வினா – விடை பேச்சுக்கிடையே, “அண்ணனும் மதுரதான் மாப்ளே!” என்று யாராவது சொன்னதுதான் தாமதம், “அண்ணே…!” என்ற பாசக்குரல் கேட்கும்…
★ நாங்கள் மதுரையின் பக்கம்! ஒரிஜினல் மதுரக்காரய்ங்க! பாசம், நேசம், ரோஷம் கலந்து மதுரையில் பிறந்தவன் தான் – மதுரைக்காரன்!
★ 3000 ஆண்டுகளின் வரலாற்றை கொண்ட இன்னும் உயிர் துடிப்போடுள்ள – அவ்வப்போது மாறியும் மாறாமலும், பெரிய கிராமமாகவும் பல சமயங்களில் நவீன நகரமாகவும், தெருக்களை நீட்டியும் கூட்டியும், அழகு படுத்தியும், ஆர்ப்பாட்டப் படுத்தியும், மன்றங்கள் அமைத்தும், மேடைகள் அமைத்தும், சிலைகள் வைத்தும், வால் போஸ்டர் ஒட்டியும், பேனர் வைத்தும், பேனரில் ஓனரின் பெயர் வைத்தும் கொண்டாடும் – எங்கள் மதுரை தெருக்கள்!
★ மதுரையின் ஒவ்வொரு தெருவும் கதை சொல்லும்!
மதுரைக்காரன் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்லி!!
★ தோழர் சுப்பாராவ் மதுரையில் பிறந்து, வளர்ந்து, படித்து, வேலையில் அமர்ந்து, மணமாகி, குடும்பம் கண்டு, மக்களைப் பெற்று, மக்களுக்கும் மணமுடித்து, மதுரையிலேயே ஐம்பது ஆண்டுகள் வீறுநடை போடும் நாயகனாக வாழ்கிறார்!
மதுரையின் மாற்றத்தையும் தோற்றத்தையும் கவனித்துக் கொண்டே வாழ்பவர்.
★ சுப்பாராவ், தான் பார்த்ததை, படித்ததை, அறிந்ததை, ஆய்ந்ததை, தேடிச் சென்றதை, தேர்வு செய்ததை, வியந்ததை, விசாரித்ததை – ஒரு மாலையாக, மதுரை மல்லி பூச்சரமாக தொடுத்து தந்தது தான் – மதுரை போற்றுதும்!
★ இந்த நூலில் தோழர் சுப்பாராவ் மதுரையைப்பற்றி எல்லோரும் அறிந்த செய்திகளையும், அறியாத செய்திகளையும், ஒரு பஃபே விருந்தைப் போல படைத்துள்ளார்.
மதுரைக்காரனான எனக்கே எத்தனையோ அறியப்படாத மதுரையின் பக்கத்தை அறிந்து வியந்தேன்.
எத்தனையோ தகவல்களை அறிந்து மகிழ்ந்தேன். அதில் ஒன்று நான் படித்த பள்ளியைப் பற்றியது!
★ நான் ஆறாம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி வரை (1966 – 72) படித்த பள்ளி, மதுரை ரயில் நிலையம் அருகேயுள்ள மெஜூரா காலேஜ் ஹைஸ்கூல் என்ற எம்.சி. ஸ்கூல்.
160 ஆண்டுகள் பழமையானது. அந்தப் பள்ளி ஒரு காலத்தில் ராணி மங்கம்மாளின் அரண்மனையாக இருந்த தகவலை படித்தறியும் போது, இத்தனை நாள் நமக்கு தெரியாமல் இருந்ததே என வியப்பாய் இருந்தது. அரிய தகவலுக்காக தோழருக்கு நன்றி!
★ நான் அறிந்த பல செய்திகளும் நூலில் உள்ளன. B4 போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் வெள்ளைச்சாமி, நாங்கள் வாழ்ந்த ரயில்வே காலனியில் ரவுடிகளையும், கஞ்சா விற்றவர்களையும் பிடித்து, அடித்து அவர்களது கைலியால் கைகளை பின்னால் கட்டி, ஜட்டியோடு ஸ்டேஷனுக்கு ஊர்வலமாக இழுத்து சென்ற காட்சியை சிறுவனாக இருக்கும் போது வேடிக்கை பார்த்திருக்கிறேன். நிஜ வாழ்க்கையில் பார்த்த நிஜ ஹீரோ!
★ மீனாட்சி புத்தக நிலையம், ரீகல் தியேட்டர் எதிரேயுள்ள பிரேமா விலாஸ் அல்வா கடை, அல்வா வாங்கியவர்க்கு கொசுறாக மிக்சர், ஜம் ஜம் டீக்கடையின் சமோசா டீ, என்ஸிபிஹெச்சில் வாங்கிய கம்யூனிச புத்தகங்கள், பக்கத்திலிருந்த பாப்லி பிரதர்ஸ், அதற்கும் அடுத்ததாக இருந்த, தோழர் எழுத மறந்த, ஆனந்த பவான் பிரியாணி ஹோட்டல் (எங்கள் மாமாவுக்கு சொந்தமானது. எங்கள் அப்பா மேனேஜராக இருந்தது) இப்படி டவுன் ஹால் ரோட்டை, நம் கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் !
★ மதுரையில் எதுவும் லேசில் மாறிவிடாது. பாரம்பரியத்தை போற்றுவதில் மதுரைக்காரனுக்கு இணை எவரும் கிடையாது என்ற உண்மையை, தமிழ்நாடு நாடக நடிகர் சங்க தலைவர் டி.வி.ஜெயத்தை சந்தித்த பின்பு குறிப்பிடுகிறார். அவர் மூலம் ராஜபார்ட் நடிகர்களின் பெரிய லிஸ்ட்டை பட்டியலிடுகிறார்.
★ மதுரை இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி உலகளாவில் பிரபலமான அதே வேளையில், அவரது சகோதரர் எம்.எஸ். சக்திவேலும் அவரது துணைவி பி.எஸ்.எஸ். காந்திமதியும் நாடக மேடைகளில் தான் இயங்கினார்களாம்.
எத்தனையோ சோக கதைகளை கொண்டதுதான் நாடக வாழ்க்கை. ‘குறையொன்றுமில்லை’ என பாடியவரின் வாழ்விலும் குறையுண்டு !
★ சௌராஷ்ட்டிரா மக்களின் முக்கிய நகரம் – மதுரை. அவர்கள் வந்து பல நூற்றாண்டுகள் ஆனாலும், தங்கள் தனித்துவத்தை காப்பாற்றி வருபவர்கள். வியப்பூட்டும் வகையில் சௌராஷ்ட்டிரர்கள் எல்லோரும் ஐயர், ஐயங்கார் தான்.
எல்லோரும் நெசவுத் தொழில் செய்வதால், தொழில் அடிப்படையிலான சாதிப் பிரிவினைகள் கிடையாது. பூசை செய்வோர், சடங்கு வைக்கும் ஐயர் மட்டுமே சைவம். மற்றவர்கள் அசைவத்தை வெளுத்து கட்டுவார்கள் (எனக்கு நிறைய சௌராஷ்ட்டிரா நண்பர்கள் உண்டு).
★ அதெப்படி நீங்கள் அசைவம் சாப்பிட்டுக் கொண்டு ஐயர் என்கிறீர்கள் என்றால் – நாங்களெல்லாம் ஐயர்கள் என ராணி மங்கம்மாளே ஆணை பிறப்பித்துள்ளார்கள் என்றும், அதை ‘அபய பிரதான சாசனம்’ என்றும், அந்த சாசனம் தெற்கு கிருஷ்ணன் கோவிலில் இன்றும் கல்வெட்டாக இருக்கிறதென்றும் பதிலளிப்பார்களாம்!
இது அறியப்படாத மதுரையின் மற்றுமொரு தகவல்!
★ மதிய உணவு திட்டத்திற்கு மதுரைதான் முன்னோடி என்றால் வியப்பாக இருக்கிறதா?
சௌராஷ்ட்டிரா இன மக்களுக்காகவே பள்ளியொன்று 1886ல் மதுரையில் ஆரம்பிக்கப்பட்டது. அது 1911ல் வேறு இடத்திற்கு புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படுகிறது.
அங்குள்ள ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவு தர, ஒர அறக்கட்டளை நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் சிறப்பாக சேவை செய்யப்பட்டு வந்தது.
★ 1954ம் ஆண்டு சௌராஷ்ட்டிரா பள்ளியின் பொன்விழாவில் அன்றைய முதல்வர் காமராஜர் கலந்து கொள்கிறார். அப்போது மதிய உணவு திட்டத்தை அறிந்து வியந்து போகிறார்.
அவருடன் வந்த அன்றைய தமிழக கல்வி அதிகாரி, பெரியார் தொண்டர், முனைவர் நெ.து.சுந்தர வடிவேலுவிடம் ஆலோசனை செய்து – மதிய உணவு திட்டத்தை தமிழக பள்ளிகளில் அறிமுகம் செய்து வரலாறு படைத்தார், காமராஜர்!
★ இந்த பள்ளியில் 2013ம் ஆண்டு முதல், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் அளிக்கப்படுகின்றதாம்! வியப்பாக இருக்கிறது!
இந்தியாவிலேயே பள்ளி குழந்தைகளுக்கு காலை டிபனையும் தரும் ஒரே பள்ளி – மதுரை சௌராஷ்ட்டிரா பள்ளியாம்! மதுரைக்காரர்களுக்கு பெருமையாக இருக்காதா?
★ மதுரை மெல்லிசை குழுக்கள் பற்றியும், மெல்லிசை பாடகர்கள் பற்றியும் சரியான தகவல்களை பெற, டிஎம்எஸ் மற்றும் சிஎஸ் ஜெயராமன் குரலில் பாடிய, டிவிஎஸ் மெல்லிசை குழுவை உருவாக்க காரணகர்த்தாவாக இருந்த, மெல்லிசை பாடகர் டிவிஎஸ் கதிரேசனை சந்தித்து உரையாடி, கிடைத்த அறிய தகவல்களை சுவையாக தருகிறார் சுப்பாராவ். அவற்றில் சில:
★ மதுரையில் முறைப்படுத்தப்பட்ட இன்னிசை குழு என்று முதன்முதலாக உருவானது டிவிஎஸ் நிறுவனத்தின் இசைக்குழு. அதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் பாடகர் கதிரேசன். மதுரை ஐடிஐயில் படித்தவர். டிஎம்எஸ் குரலிலும் சிஎஸ் ஜெயராமன் குரலிலும் அச்சு அசலாக பாடக்கூடிவர்.
★ கம்யூனிச பிரச்சார பாடல்களை பாடிய பாவலர் வரதராஜன் குழுவில் பாவலரோடு இணைந்து பாடியவர். அப்போது இளையராஜா ஹார்மோனியம், பாஸ்கர் தபேலா, கங்கை அமரன் பெண் குரலில் பாடுவாராம். பாடகர் கதிரேசனுக்கு அன்றே நிறைய ரசிகர்கள் இருந்தார்கள் !
★ டிவிஎஸ் கம்பெனியில் அப்ரெண்டிஸாக சேருகிறார். இவர் மேடையில் பாடியதை, ஒருமுறை டிவிஎஸ் முதலாளி ரசித்து கேட்டாராம். டிவிஎஸ் முதலாளி மகனுக்கு திருமண வரவேற்புக்கு எம்எஸ்வி இசைக்குழுவை ஏற்பாடு செய்ய இயலவில்லை. எம்எஸ்விக்கு வரமுடியாத சூழல்.
★ டிவிஎஸ் நிறுவனமே ஒரு இன்னிசைக் குழுவை உருவாக்க முடிவு செய்தார்களாம். அந்த குழுவில் பாடகர் கதிரேசன் கட்டாயம் இருக்க வேண்டும் என்றாராம் டிவிஎஸ் முதலாளி. அப்படி உருவானதுதான் டிவிஎஸ் இசைக்குழு. இந்த குழுவில் இருந்த போது 4500 மேடைகளிலும், மொத்தம் பத்தாயிரம் நிகழ்ச்சிகளில் பாடியவர்தான் – பாடகர் கதிரேசன் !
★ ஒருமுறை சின்னாளப்பட்டியில், அண்ணாவின் முன்னிலையில் பாடகர் கதிரேசன் பாடும் போது கரண்ட் கட்டாகியதாம். பின்பு அண்ணா தனது கைப்பையிலிருந்து டார்ச்சை கதிரேசனிடம் கொடுத்து, “தொடர்ந்து பாடுங்க” என கூறியதையும், அந்த டார்ச்சை அண்ணாவின் நினைவாக தானே வைத்துக் கொண்டதையும் நினைவில் கொண்டு வந்தார்.
★ தோழர் சுப்பாராவின் திருமண வரவேற்பில் 1993ல் நடந்த மெல்லிசை குழுவில் பாடகர் கதிரேசன் பாடியதையும், அவரது கம்பீரமான குரலில், “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ” என பாடியதையும் நினைவு கூறுகிறார். பாடகர் கதிரேசனே தனது இல்லம் வந்து இந்த அறிய தகவல்களை எல்லாம் தந்தார் என்று மேலும் சந்தோஷமடைகிறார்..
★ எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல, மெல்லிசைப் பாடகர், டிவிஎஸ் கதிரேசனென்ற – பொ. கதிரேசன் எனது சொந்த அண்ணன் என்ற செய்தி, தோழர் சுப்பாராவுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை தந்தது!
★ அறியப்படாத மதுரை பற்றியும், அறிந்து வைத்த மதுரை பற்றியும், அவைகளை படம் பிடித்து காட்டிய அழகும், தகவல்களை கதையோடு விளக்கிய விதமும் தோழரை வெகுவாக பாராட்ட தோன்றுகிறது. இந்த நூலை நான் பரிந்துரைக்க மூன்று முக்கிய காரணங்கள்.
★ எங்கள் மதுரை பற்றிய – அரிய செய்திகளை தருகிறது!
★ எங்கள் தோழர் படைத்த – அரிய படைப்பாக இருக்கிறது!!
★ எங்கள் அண்ணன் பற்றி அறிய – நிறைய தகவல்களை தருகிறது!!!
நூல் : மதுரை போற்றுதும்
ஆசிரியர் : ச. சுப்பாராவ்
சந்தியா பதிப்பகம் – பக்கங்கள் 200
விலை ரூ. 200/
– பொ.நாகராஜன்