ஆரஞ்சு பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது!

விளையாட்டு வீரர்கள், இசை மற்றும் நடனக் கலைஞர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்குத்தான் பெரும்பாலும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் இதற்கு நேர்மாறாக இந்த ஆண்டு மங்களூரு பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக ஆரஞ்சுப் பழங்களை  விற்றுவரும் ஹரேகாலா ஹாஜப்பா என்பவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

66 வயதான ஹாஜப்பா, இந்த விருதைப் பெறக் காரணம், அவரது சேவை மனப்பான்மை.

கடும் வெயிலிலும், மழையிலும் பேருந்து நிலையத்துக்கு வரும் மக்களிடம் ஆரஞ்சு பழங்களை விற்கப் போராடும் ஹாஜப்பா, இதன்மூலம் கிடைக்கும் பணத்தை தனக்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

மாறாக அதை வைத்து, மங்களூருவில் உள்ள ஹரேகாலா-நியூபாடு கிராமத்தில் பொருளாதார ரீதியாக நலிந்த 175 குழந்தைகள் படிப்பதற்கான ஒரு பள்ளியைக் கட்டியுள்ளார்.

1977-ம் ஆண்டுமுதல் மங்களூரு பேருந்து நிலையத்தில் ஆரஞ்சுப் பழங்களை விற்றுவரும் ஹாஜப்பா, படிப்பறிவு இல்லாதவர். சிறுவயதில் படிப்பதற்காக அவர் ஆசைப்பட்டாலும், அதற்கு அவருக்கு வசதி இல்லை.

இதனால் வளர்ந்த பிறகு, தன்னைப்போல் மற்ற ஏழைக் குழந்தைகள் படிக்க முடியாமல் கஷ்டப்படக் கூடாது என்று நினைத்துள்ளார்.

அதனால் அவ்வப்போது படிக்கும் குழந்தைகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவந்துள்ளார்.

இந்தச் சூழலில் 1978-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஒருவர் பழம் வாங்குவதற்காக இவரிடம் வந்துள்ளார்.

ஆனால் அவரிடம் சகஜமாக ஆங்கிலத்தில் பேசி, ஹாஜப்பாவால் ஆரஞ்சுப் பழத்தை விற்க முடியவில்லை.

அப்போதுதான் அவரது மனதில், தன் ஊரில் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்டவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அடுத்த 20 ஆண்டுகள் கடுமையாகப் போராடினார்.

தான் ஆரஞ்சு பழத்தை விற்று கிடைக்கும் பணத்தைச் சேமித்தார். அத்துடன் உள்ளூர் மக்கள் சிலரிடமும் நன்கொடைகளைப் பெற்று, சிறிது சிறிதாக பணம் சேர்த்து பள்ளியை எழுப்பினார்.

அவரது கனவுப் பள்ளி 2000-ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் 28 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட ஹாஜப்பாவின் பள்ளி, இன்று 175 மாணவர்களுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது.

பள்ளி வளர்ந்தாலும், ஹாஜப்பா இன்னும் ஆரஞ்சுப் பழத்தை விற்பதை விடவில்லை. அதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து இன்னும் பள்ளியை மேம்படுத்தி வருகிறார்.

இதுபற்றி ஹாஜப்பாவிடம் கேட்டால், “பள்ளியைக் கட்டி முடித்ததுடன் என் வேலை முடியவில்லை.

என் கிராமத்தில் மேலும் பல பள்ளிகளையும், கல்லூரிகளையும் கட்டி முடிக்கும்வரை நான் ஓயமாட்டேன்.

பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேரு விருதுகள் மூலம் எனக்குக் கிடைக்கும் பணத்தையும் இதற்காக செலவழிப்பேன்.

மேலும் எங்கள் ஊரில் ஒரு கல்லூரியைக் கட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கும் கோரிக்கை விடுத்துள்ளேன்” என்கிறார்.

இவருக்கு எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

-பிரணதி

Comments (0)
Add Comment