ஒவ்வொரு முறை கனமழை வரும் போதெல்லாம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் ஏன் விடுக்கிறது?
இந்த நிறங்கள் எதைக் குறிக்கின்றன என்பது பற்றிய தகவலை இங்கே தொகுத்துள்ளோம்.
வானிலையின் தீவிரத் தன்மை தொடர்பான முன் கணிப்புகளை அறிந்து அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் நோக்கத்துடனேயே வண்ணங்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இதுபோன்ற எச்சரிக்கை, பொதுவாக அரசு அதிகாரிகளின் தேவைக்காகவே விடுக்கப்படுகிறது. பேரிடர் ஆபத்து அளவை யூகித்து அதற்கேற்ப செயலாற்ற இந்த வண்ணங்கள் அதிகாரிகளுக்கு உதவும்.
சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் ஆகிய நிறங்களில்தான் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது
இதில் சிவப்பு நிறம் – உடனடியாக செயலாற்ற வேண்டிய நடவடிக்கையை உணர்த்துகிறது.
ஆரஞ்சு நிறம் – தயார் நிலையில் இருக்க வேண்டியதை உணர்த்துகிறது.
மஞ்சள் நிறம் – விழிப்புடன் நிலைமையை கவனித்துக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது.
இவை தவிர்த்து பச்சை நிற குறியீடு, எச்சரிக்கை ஏதுமில்லாததால் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்பது குறிக்கிறது.
இதில், தேசிய வானிலை எச்சரிக்கைகளில் ஒரு மாநிலத்துக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டால், அந்த மாநிலம் முழுவதும் பாதிக்கப்படுவதாக அர்த்தம் இல்லை.
அந்த மாநிலத்தில் குறிப்பாக எந்த இடங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்பதை அறிய வேண்டும். அந்த விவரம், மண்டல மற்றும் மாநில வானிலை ஆய்வக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த எச்சரிக்கை நிறம், மழை, புயல், பனிப்பொழிவு, புழுதிப்புயல் போன்றவற்றுக்கும் பொருந்தும்.
ஆனால், விடுக்கப்படும் எச்சரிக்கை, ஒவ்வொரு சீற்றத்தின் தன்மைக்கு ஏற்றவாறு இருக்கும்.
வண்ணங்கள் எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
ஒரு இடத்தின் வானிலையை கணிக்க ஐந்து நாள் முன்கணிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. அது நிகழ்வு நடக்கும் தன்மை மற்றும் அது ஏற்படுத்தவுள்ள தாக்கத்தின் கணிப்பு அடிப்படையில் இருக்கும்.
கன மழை ஏற்படும் நாட்களில் 24 மணி நேரத்தில் 204.5 மில்லி மீட்டருக்கோ அதற்கு அதிகமாகவோ மழை பொழிவு தொடர்ச்சியாக பதிவானால் அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும். இது ‘அசாதாரணமான மிக கன’ மழையாக வகைப்படுத்தப்படும்.
அதுவே 24 மணி நேரத்தில் 115.6 முதல் 204.4 மில்லி மீட்டருக்கும் இடையே தொடர்ச்சியாக மழை பதிவானால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படும். இது ‘மிக அதிக’ மழையாக வகைப்படுத்தப்படும்.
*இந்த மழை அளவு 64.5 முதல் 115.5 மில்லி மீட்டர் இடையே பதிவானால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படும்.
இந்த எச்சரிக்கை நிறம், மழை, புயல், பனிப்பொழிவு, புழுதிப்புயல் போன்றவற்றுக்கும் பொருந்தும்.