ஜெய்பீம் – படத்தின் வெற்றி இன்னொரு விதத்தில் பழங்குடியினர் பக்கம் ஓரளவாவது பார்வையைத் திருப்பியிருக்கிறது.
உண்மையில் அவர்களை வினோதமானவர்களைப் போலத்தான் திரைப்படங்கள் சித்தரித்திருக்கின்றன. அவர்களுடைய அசலான வாழ்வைச் சித்தரித்த திரைப்படங்கள் மிகக் குறைவு.
ஊடகங்களில் கூட அவர்களுடைய வாழ்வியல் பெரிதாக வெளிப்படவில்லை.
காடுகளுக்குள் சென்று அவர்களைப் பற்றிய செய்திகளை வெளிக்கொண்டு வந்தவர்கள் சிலரே.
இந்தியா முழுக்க 427 இனங்களைச் சேர்ந்த மூன்று கோடிக்கும் அதிகமான பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று தனிச்சலுகைகள் அரசால் வழங்கப்பட்டாலும், அந்தச் சலுகைகள் எந்த அளவுக்கு அவர்களைச் சென்றடைந்திருக்கிறது என்பது கேள்விக்குறிதான்!
இந்தக் கேள்வியோடு தமிழகத்தின் பல பகுதிகளில் வாழும் பழங்குடியினரை இருபது ஆண்டுகளுக்கு முன்பு வார இதழ் ஒன்றிற்காகச் சென்ற அனுபவங்களை லேசில் மறுக்க முடியாது.
அப்போது தமிழகத்தில் பழங்குடிகளின் எண்ணிக்கை 5.20 லட்சம்.
பளியர், தோடர், இருளர், குறும்பர், தேன் குறும்பர், காணிக்காரர் என்று 36 இனத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டது.
இதற்காகப் பல இனக்குழுவைச் சேர்ந்தவர்களைச் சந்தித்தாலும், ஒவ்வொரு பிரிவினரையும் சந்திக்க காடுகளுக்குள் அதிக தூரம் நடந்துபோக வேண்டியிருந்தது. கூகுளில் தேடி மட்டுமே இந்த அனுபவங்களைப் பெற்றுவிட முடியாது.
கொடைக்கானலில் இருந்து பல கி.மீ தூரம் கடந்து சரிவான காடான மூங்கில் பள்ளம் என்கிற இடத்துக்குப் போனதும், கால்களில் கடுமையான அசதி. போனதும் அங்கிருந்த பளியர்கள் எங்களுக்குக் கொடுத்தது மூங்கிலில் நிறைவான தேனும், அருமையான மூங்கில் குருத்தும்.
எந்த வசதிகளும், கல்வியும் அவ்வளவு தூரத்திற்குப் போய்ச் சேரவில்லை.
சதுரகிரி மலையில் சந்தித்த பழங்குடி மக்கள் காட்டில் கிடைக்கும் வள்ளிக்கிழங்கு தான் முக்கிய உணவு. காடுகளில் அவர்கள் வேலை செய்தால் அவர்களுக்குக் கிடைத்து வந்த கூலி முக்கால் படி அரிசி மட்டுமே.
வத்திராயிருப்பு ஒட்டியிருந்த காடுகளில் வேலை செய்து வந்த பழங்குடியினர் காலையிலிருந்து இரவு வரை வேலை செய்தும் வாங்கிய கூலி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முக்கால் படி அரிசி மட்டும் தான்.
காடுகளில் தேனைச் சேகரிக்கப் போகிறபோது கரடியினால் தாக்கப்பட்டுக் கையை இழந்த தேன் குறும்பர்களைச் சாதாரணமாக முதுமலைக்காட்டில் சந்திக்க முடிந்தது.
இருந்தாலும் அந்த ஊனத்தை எல்லாம் தாண்டி அதே காடுகளுக்குள் தேன் எடுக்கப் போய்க் கொண்டிருந்தார்கள்.
இத்தனை சிரமங்களைச் சந்தித்து தேனை எடுத்து வருகிறவர்களுக்குக் கிடைக்கும் கூலி மிகக் குறைவு.
இது வாசிப்பவர்களுக்கு வியப்பாக இருக்கலாம்.
ஆனாலும் பழங்குடிகளின் வாழ்வைப் பார்த்தால் இது தான் நிஜம்.
குற்றாலம், முண்டந்துறை பகுதிகளில் இருந்த பளியர்களும், காணிகளும் அப்படித்தான் இருந்தார்கள்.
காட்டிலிருந்து தேன், கடுக்காய், குங்கிலியம் என்று பலவற்றைச் சேகரித்து வந்து கொடுத்தால் அவர்களுக்குக் கிடைப்பது அரைப்படி அரிசிக் குருணை.
இவர்களை வைத்து வேலை வாங்குகிறவர்கள் காடுகளில் இருக்கிற எஸ்டேட் உரிமையாளர்கள்.
முந்நூறிலிருந்து ஐநூறு ரூபாய் வரை பழங்குடித் தொழிலாளர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து, வெற்றிலையைக் கையில் கொடுத்து வேறு எங்கும் போக மாட்டோம் என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார்கள்.
அதோடு காடுகளில் இருந்த மக்களிடம் சில புகையிலைப் பழக்கத்தையும், மூக்குப் பொடியையும் கொடுத்து அவர்களை அதற்கு அடிமைப்படுத்திய மாதிரி வைத்திருந்தார்கள்.
மூலிகை மருந்துகளுக்குப் பேர்போன ஒரு மலைக்குப் போய் மூன்று நாட்கள் அங்கே தங்கியிருந்த போது, அங்கிருந்த பழங்குடி மக்கள் மத்தியில் வினோதமான பாலியல் நோய் சகஜமாகப் பரவி இருந்தது மனதை அதிர வைத்தது.
பல பெண்களும் கால்கள் முழுக்கப் பலாப்பழ மேல்தோலைப் போலப் புண்கள் அடர்ந்த கால்களோடு இருந்தார்கள்.
தரைப்பகுதியிலிருந்து காடுகளுக்குச் செல்கிறவர்கள் சில மூக்குப்பொடி டப்பாக்களைக் கொடுத்து அங்குள்ள பெண்களைத் தங்கள் பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்தியதுடன், வியாதிகளையும் தொற்ற வைத்திருந்திருந்தார்கள்.
காட்டில் இருந்த பெண்களின் வெகுளித்தனத்தைப் பலர் பயன்படுத்திக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
இந்தப் பிரச்சினையை வார இதழ் மூலம் வெளிக்கொண்டு வந்தபோது, அரசு தரப்பில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அதன்பிறகே நிறைய மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு காட்டில் உள்ள மக்களுக்கான சிகிச்சைகள் தொடங்கின.
கொடைக்கானலில் இருந்து பழனிக்குச் செல்லும் வழியில் பிரதான சாலையில் இருந்து சுமார் இருபது கி.மீ தூரம் காட்டுப் பகுதிக்குள் நடந்தால், அங்கிருந்த காடுகளில் இருந்த பழங்குடி மக்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்தார்கள்.
மதுரையில் உள்ள சோகோ அறக்கட்டளைக் குழுவினருடன் அங்கே போய் அவர்களுடன் போனபோது தங்கள் வாழ்வின் அவலத்தை வெளிப்படுத்தத் தெரியாத அறியாமையுடன் இருந்தார்கள். எந்தக் கல்வியும் அவர்களைத் தீண்டவில்லை.
அவர்களுக்குத் தினக்கூலி ஐந்து ரூபாய் அல்லது முக்கால்படி அரிசிக் குருணை. வேலைக்குப் போகவில்லை என்றால் தாக்குதல்கள்.
ஆறு வயசுக் குழந்தைகள் கூடக் கால் கிலோ குருணைக்காக காட்டுக்குள் சேகரிக்கப் போய்க் கொண்டிருந்திருப்பதெல்லாம் மனம் கனக்க வைத்தது.
இன்னொரு வார இதழில் இந்தக் கொடுமையைப் பற்றி எழுதி அந்தக் கட்டுரை வெளிவந்தது.
சோகோ அறக்கட்டளை அந்தக் கட்டுரையையே ‘ரிட்டாக’ உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது.
உச்சநீதிமன்றம் வரை சென்றும் என்ன நடந்தது?
*
(தொடரும்…)
- மணா