விடைபெற்றார் ரவி சாஸ்திரி!

இந்திய கிரிக்கெட்டில் மேலும் ஒரு அத்தியாயம் நேற்று முடிவுக்கு வந்திருக்கிறது. அணியின் பயிற்சியாளராக சுமார் 5 ஆண்டுகள் பதவியில் இருந்த ரவி சாஸ்திரி விடைபெற்றுள்ளார்.

ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த 42 டெஸ்ட் போட்டிகளில் 24 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 79 ஒருநாள் போட்டிகளில் 53-லும், 67 டி20 போட்டிகளில் 43-லும் இந்தியா வாகை சூடியுள்ளது.

SENA என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் இந்திய அணி பெரிய அளவில் வெற்றிகளைக் குவித்ததும் இவரது காலத்தில்தான்.

இத்தனைக்கும் காரி கிர்ஸ்டன், பாப் உல்மர் ஆகியோரைப் போன்று ரவி சாஸ்திரி துடிப்பான பயிற்சியாளர் இல்லை. அணியின் வீரர்கள் பயிற்சி பெறும்போது அவர்களோடு இணைந்து தானும் பயிற்சிகளில் ஈடுபட்டதில்லை.

ஒரு ஓரத்தில் நின்று, சற்று மேடிட்ட தன் தொப்பையை தடவிக்கொண்டு வேடிக்கை மட்டும்தான் பார்த்துக்கொண்டு இருப்பார். இருந்தாலும் அவர் இத்தனை வெற்றிகளைக் குவித்ததற்கு முக்கிய காரணம், வீரர்களுக்கு அவர் கொடுத்த சுதந்திரம்.

எத்தனை இக்கட்டான நிலையிலும் அவர் வீரர்களை நம்பினார். அவர் வீரர்களைக் கட்டுப்படுத்தாமல், அவர்களின் வழியிலேயே ஆடவிட்டார். அது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தி வெற்றிகளைக் குவிக்க காரணமானது.

இந்திய அணியின் பயிற்சியாளர் மட்டுமின்றி, முன்னாள் ஆல்ரவுண்டராகவும் இருந்த ரவி சாஸ்திரி 1962-ம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.

14 வயது முதல் கிரிக்கெட் போட்டிகளில் தீவிரமாக பங்கேற்கத் தொடங்கினார்.

ஆரம்ப கட்டத்தில் தான் படித்த டான் பாஸ்கோ பள்ளிக்காக ரவி சாஸ்திரி கிரிக்கெட் போட்டிகளில் ஆடினார்.

அவரது தலைமையில் டான் பாஸ்கோ பள்ளி, 1976-ம் ஆண்டில் மும்பையில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றை எட்டியது.

1981-ம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, கல்லூரி மாணவரான ரவி சாஸ்திரியை மாற்று வீரராக அழைத்துச் சென்றனர்.

இத்தொடரில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான திலிப் ஜோஷிக்கு காயம் ஏற்பட, ரவி சாஸ்திரிக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது.

சுழற்பந்து வீச்சாளரான ரவி சாஸ்திரிக்கு முதலில் பேட்டிங் வராது. 10-வது பேட்ஸ்மேனாகத்தான் அவர் களம் இறங்குவார்.

ஆனால் அதன்பிறகு பேட்டிங்கில் தீவிர கவனம் செலுத்திய ரவி சாஸ்திரி, ஒரு கட்டத்தில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக மாறினார்.

80 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ரவி சாஸ்திரி, 3,830 ரன்களைக் குவித்துள்ளார். அதே நேரத்தில் 150 ஒருநாள் போட்டிகளில் 4 சதங்கள் உட்பட 3,108 ரன்களைக் குவித்துள்ளார்.

அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 151 விக்கெட்களையும், ஒருநாள் போட்டிகளில் 129 விக்கெட்களையும் வீழ்த்தி கபில்தேவுக்கு அடுத்து இந்தியாவின் சிறந்த ஆல் ரவுண்டராக தன்னை நிரூபித்துள்ளார்.

பயிற்சியாளராக இவர் இருந்த காலக்கட்டத்தில் இந்திய அணிக்குள் விராட் கோலி கோஷ்டி – ரோஹித் சர்மா கோஷ்டி என 2 கோஷ்டிகள் இருந்ததாக கூறப்பட்டது.

இருப்பினும் தன் சாதுர்யத்தால் அவர்களை இணைத்துவைத்து பல போட்டிகளில் இந்தியா வெல்வதற்கு காரணமாக இருந்தார்.

ரவி சாஸ்திரிக்கு அடுத்ததாக ராகுல் திராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார்.

ரவி சாஸ்திரியைவிட அவர் அதிக திறன் வாய்ந்தவராக கூறப்படுகிறது. இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளில் ரவி சாஸ்திரி போட்ட வெற்றிப் பாதையை தொடர அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

  • பிரணதி
Comments (0)
Add Comment