கவிக்கோ அப்துல் ரகுமானின் பிறந்தநாளையொட்டி கவிஞர் பழநிபாரதியின் முகநூல் பதிவு
என் தந்தை எனக்குக் காட்டிய அப்துல் ரகுமான் என்கிற நிலவை நான் என் மகளுக்குக் காட்டிய பௌர்ணமிப்பொழுது ஒன்று உண்டு…
அன்று ஓவியர் வீர.சந்தானம் மகளின் திருமண வரவேற்பு. அங்கே கவிக்கோவும் வந்திருந்தார். நான் என் மகள் லாவண்யாவை அறிமுகம் செய்தேன். அப்போது அவள் ஆறாம் வகுப்புச் சிறுமி.
“நீ கவிதை எழுதிவியா?” என்றார்.
“நிலா – ஒரு கரண்டி மாவில் ஊருக்கெல்லாம் தோசை” என்று அவள் எழுதி வைத்திருந்த வரிகளைச் சொன்னாள்:
“அடடே… பிரமாதமா எழுதி இருக்கியே”
“போங்க தாத்தா… நீங்க எவ்ளோ பெரிய கவிஞர்… என் கவிதை நல்லாருக்குனு பொய்தானே சொல்றீங்க?”
“இல்லம்மா… இந்த வயசுல நீ இப்படி எழுதுனா என் வயசுல எவ்ளோ அழகா எழுதுவ?”
குழந்தைகளின் மொழியில் கண்ணாமூச்சி ஆடும் கவிதையின் அழகைக் கண்டுபிடிப்பதில் அவர் இன்னொரு குழந்தையாக இருந்தார்.
“குழந்தைகளே
உங்கள் விரல்களை
நாங்கள் பிடித்துக்கொள்கிறோம்
எங்களை
உங்கள் தேவ தேசத்திற்கு
அழைத்துச் செல்லுங்கள்”
என்று காலக்குழந்தையின் விரல் பிடித்துச் சென்றிருக்கிற கவிக்கோவுக்கு இன்று தாலாட்டுநாள்.
நன்றி: பழநிபாரதி முகநூல் பதிவு