அச்சுறுத்தும் சென்னைப் பெரு நகரம்!

ஊர்சுற்றிக் குறிப்புகள் :

இரு நாட்களாக சென்னையில் பெய்து வருகிற அதி கனமழை பெரு நகர வாழ்வை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது.

சென்னையின் பல பகுதிகள் வெள்ளமயமாயின. பலருடைய வீடுகளுக்குள் மழை நீர் நுழைந்து கலவரப்படுத்தியிருந்தது. பல மரங்களும், மின்கம்பங்களும் விழுந்து பல பகுதிகள் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்ட படி இருந்தன.

உணவுக்குச் சில பகுதிகளில் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். அரசு இயந்திரம் முடிந்தவரைக்கும் இயங்கிக் கொண்டிருந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளும் வெள்ளம் சூழ்ந்திருந்த பல பகுதிகளைப் பார்வையிட்டதன் பலன், பல பகுதிகளில் நீர் அடைப்புகள் சரி செய்யப்பட்டு, மின் விநியோகம் சீரானது.

இயற்கைப் பேரிடர் எதிர்பாராத விதமாகச் சூழும்போது, மக்களுக்கு உடனடித் தேவை உணவு போன்றவை இருந்தாலும், அதைவிட முக்கியமான தேவை பாதுகாப்புணர்வு.

இக்கட்டான இந்த நேரத்தில் அந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்தால் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை அடர்த்தி கொண்ட சென்னையின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி பண்ணுவது என்பது எந்த ஒரு மாநில அரசுக்கும் சவால் தான்.

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பெரு வெள்ளத்தைத் திறந்துவிட, அதிகாரிகள் அனுமதி கேட்பதில் காட்டிய தயக்கம் சென்னையின் பல பகுதிகளை வெள்ளக் காடாக்கியது. பலர் வீடுகளுக்குள்ளேயே இறந்து போனார்கள்.

சில சடலங்கள் வெள்ளநீரில் மிதந்து வருவதை நேரடியாகக் காட்டிய தனியார் தொலைக்காட்சிகளின் மீது கடுமை காட்டினார்கள் அப்போதிருந்த ‘பொறுப்பான’ சில அதிகாரிகள்.

ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நேரடி சாட்சிகளாக இருந்த ஊடகவியலாளர்களுக்கும் அப்போது நடந்த உண்மையும், குழப்பமும் நன்றாகவே தெரியும்.
அதோடு இன்னொரு பிரச்சினை. பெரு மழைக்குப் பிறகு வரும் நோய்கள்.

ஏற்கனவே கொரோனா பரவலுடன், டெங்கு போன்ற தொற்றுகளும் மழை ஈரத்தோடு பரவும் நேரம் இது.

இனி வெள்ளத்தினால் திண்டாடிய மக்கள் அந்த நோய்களை எதிர் கொள்ளத் தயாராக வேண்டும். நோய்த்தடுப்பு சக்தியைப் பெற வேண்டும்.

இதைப் போன்றதொரு மழைக்காலத்தில் சென்னையில் பரவிய எலிக்காய்ச்சல் கொத்தாகப் பலரை அள்ளிக் கொண்டு போனது.

பலரைத் தன் விரல் நுனியில் கொத்திக்கொண்டு போன எலிக் காய்ச்சல் என்ற நோய் பரவிக்கொண்டிருந்த போது, எந்தத் தனியார் மருத்துவமனைகளும் உயிரிழந்தவர்கள் குறித்த உண்மையான புள்ளி விபரத்தைத் தரக்கூடாது என்கிற ஆணைகளும் அரசு தரப்பிலிருந்து வந்தன.

இறந்த உயிர்களுக்கு எண்ணிக்கையில் இடம் பெறும் குறைந்தபட்ச மதிப்புக்கூடக் கிடைக்கவில்லை.

மீண்டும் அதைப்போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்து விடாதபடி முன்னெச்சரிக்கையாகத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டாக வேண்டும்.

இதைவிட மிகமிக முக்கியமான விஷயம் – சென்னையில் ஒரே இடத்தில் அடர்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகை.

தமிழகத்தின் பிறபகுதிகளில் வாழ வாய்ப்பில்லாத நிலையில் தான், தமிழகத்தின் பிற்பகுதிகளில் இருந்து இவ்வளவு பெருந்திரளான மக்கள் சென்னையில் குவிகிறார்கள்.

இது தவிர வட மாநிலங்களில் இருந்து சென்னையில் தங்கிப் பணியாற்றும் தொழிலாளர்களே பல லட்சம் பேர்.

இதை பெரு நகர விரிவாக்கம் என்று நாசூக்காகச் சௌகர்யமாகச் சொல்ல முடியும் என்றாலும், சரியான அர்த்தத்தில் சொன்னால் இது பெரு நகர வீக்கம்.

சென்னையில் பல பகுதிகளில் நீர்ப்பிடிப்பு மையங்களாக, குளங்களாக இருந்த இடங்களிலும், ஆற்றோரங்களிலும் வீடு கட்ட அனுமதி கொடுத்தது யார்? புறம்போக்கு, கோவில் நிலங்களை எல்லாம் ஆக்கிரமித்தது யார்? ஆக்கிரமிக்க விட்டது யார்?

சில ஆயிரக்கணக்கான அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இணைந்து நடத்திய ஆக்கிரமிப்பு அல்லது முறைகேடான அனுமதியின் விளைவை இம்மாதிரியான பேரிடர்க் காலங்களில் அனைவரும் சேர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

சென்னப்பட்டணமாக ஒரு காலத்தில் இருந்த சென்னையை இப்படி மாற்றி அமைத்ததில் நம் அனைவருக்குமே பங்கு இருக்கிறது.. இல்லையா?

– யூகி

Comments (0)
Add Comment