இலக்கியவாதியை உச்சிமோந்து பாராட்டிய எம்.ஜி.ஆர்!

கம்பவாரிதி ஜெயராஜ்.

வாரிதி என்றால் கடல். கம்பனில் தேர்ச்சி பெற்றதால் இந்த அடைமொழி.

நம்மூர் கம்பனடிப்பொடி மாதிரி இலங்கையில் உள்ள தேர்ந்த தமிழறிஞர். தகுதியான பேச்சாளர். பட்டிமன்றங்களில் பிரபலம். மேடைகள் வழியே பலருக்கும் அறிமுகமானவர்.
கொழும்பு வெள்ளவத்தையில் தான் இவருடைய வீடு.

இவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நினைவுகூர்ந்திருப்பது தனி அழகு.

“1981 ஆம் ஆண்டு. அப்போதைய முதலமைச்சரான எம்.ஜி.ஆர் மதுரையில் ஐந்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த ஆயத்தமான நேரம்.

எங்களை மாநாட்டுக்கு அழைக்கும்படி ஒரு வெள்ளைத்தாளில் கடிதம் எழுதிப் போட்டோம்.

“இளைஞர்களான நாங்கள் தமிழ்ப்பணி செய்ய விரும்புகிறோம். தாங்களின் மதுரை மாநாட்டைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால் ஊக்கம் பெறுவோம்” என்பது தான் நாங்கள் எழுதிய கடிதத்தின் செய்தி.

‘முதலமைச்சர், தமிழ்நாடு, இந்தியா’ என்ற முகவரிக்கு நாங்கள் அனுப்பிய கடிதத்திற்குப் பதில் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

ஆனால் ஒரே வாரத்தில் பதில் வந்தது.

முதல்வரின் முதன்மைச் செயலர் கா.திரவியம் கையொப்பம் இட்டுவந்த கடிதத்தில், கம்பன் கழகத்தினர் பத்துப்பேருக்கு அழைப்பு.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ‘தொல்காப்பியர் அரங்கு’ என்ற பெயரில் ஆய்வரங்க மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்குத் தொடங்க வேண்டிய அமர்வுக்கு ஏழு மணிக்கே போய்விட்டோம்.

திடீரெனப் பேரிரைச்சல். கறுப்புக் கண்ணாடியுடன் ஒரு கார் வர, நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் திடீரென்று அங்கே முதல்வர் எம்.ஜி.ஆர்.

மண்டபத்திற்கு எம்.ஜி.ஆர் வந்ததும், மாநாட்டில் பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மேலும் அதிகரித்தது. ஒருவாறு அனுமதியும் பெற்றேன்.

தமிழின ஒற்றுமை பற்றி அன்றைய என் பேச்சு அமைந்தது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது தமிழர்களின் லட்சியமா அல்லது தமிழர்களுக்குள் இருந்த பேதங்களைப் பார்த்து சங்கச் சான்றோர் அவர்களுக்குச் சொன்ன புத்திமதியா?” என்று நான் கேட்டதை அரங்கம் ரசித்தது.

“உலகத் தமிழர்களுக்குத் தாயகம் தமிழ்நாடு தான். ஈழத்தவர்களாகிய நாங்கள் மாமியார் வீட்டில் வசிக்கும் தமிழர்கள். தாய்வீடு ஒற்றுமையாக இருந்தால் தான் மாமியார் வீட்டில் மகள் மரியாதையாக வாழலாம்” என்றேன்.

பேச்சு முடிகிற நேரம். மேடையில் நின்றபடியே எம்.ஜி.ஆரைப் பார்த்து “உங்களின் நேரடி அழைப்பில் வந்திருக்கிறேன். பெரும் கொடையாளியான உங்களிடம் ஒன்றைக் கேட்கப் போகிறேன்” என்று சொல்லி ஜெயராஜ் நிறுத்தியதும் சபை பரபரப்பின் உச்சநிலைக்குப் போனது.

எம்.ஜி.ஆர் இவரை நிமிர்ந்து பார்த்துக் கண்களால் ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டிருக்கிறார்.

“நான். என்ன கேட்கப் போகிறேனோ என்று சபையில் பெரும் எதிர்பார்ப்பு. இளமை தந்த ஊக்கத்தில் எம்.ஜி.ஆரிடம் “உங்களை நான் சந்தித்ததை ஊரில் சென்று நிரூபிக்க ஆட்டோகிராபில் கையெழுத்திட்டுத் தாருங்கள்” என்று குழந்தைத்தனமாகக் கேட்டேன்.

ஜெயராஜ் அப்போது இருபத்து நான்கு வயது இளைஞர்.

எம்.ஜி.ஆர் கைகாட்டி இவரை அருகில் அழைத்திருக்கிறார்.

ஜெயராஜ் மேடையை விட்டு இறங்கிவந்து அவரின் கால் தொட்டு வணங்க, உச்சிமோந்து அவரை ஆசீர்வதித்திருக்கிறார். பின்னர் ஆட்டோகிராபில் கையெழுத்திட்டுத் தந்தாராம்!”

– வீயெஸ்வீ எழுதிய கட்டுரையில் இருந்து ஒரு பகுதி.

நன்றி: 11.10.2017 தேதியிட்ட ஆனந்த விகடன் வார இதழ்

Comments (0)
Add Comment