ராகுல் திராவிட் சந்திக்க இருக்கும் சவால்கள்!

கடைசியாக புலி வந்தே விட்டது. இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என கடந்த பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய பேட்டிங் பெருஞ்சுவரான ராகுல் திராவிட், பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி திணறிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அவரது நியமனம் நடைபெற்றுள்ளது.

இம்மாத இறுதியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக தொடங்கவுள்ள தொடரில் இருந்து இப்பணியை அவர் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்கவுள்ள ராகுல் திராவிட்டின் முன்பு தற்போதுள்ள சவால்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்:

சிதறிக் கிடக்கும் அணி:
தோனியின் காலத்தில் சேவக், காம்பீர் போன்றோர் அவ்வப்போது போர்க்கொடிகளை உயர்த்தினாலும் பெரும்பாலும் ஒற்றுமையான அணியாகவே இந்தியா கருதப்பட்டது.

ஆனால் இப்போது அணிக்குள் பெரிய அளவில் வேற்றுமைகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

கேப்டன் கோலிக்கு ஆதரவான வீரர்கள் ஒரு பக்கம், ரோஹித் சர்மாவுக்கு ஆதரவான வீரர்கள் மறுபக்கம் என அணி துண்டுபட்டுக் கிடப்பதுபோன்ற தோற்றம் உள்ளது.

இது போதாதென்று கோலிக்கு பிடிக்காதவராக கருதப்படும் அஸ்வின் வேறு தனி ஆவர்த்தனம் ஆடி வருகிறார்.

இப்படி இந்திய அணி துண்டு துண்டுகளாகச் சிதறிக் கிடக்கும் வரை அதனால் வெற்றிகளைக் குவிக்க முடியாது.

எனவே அணியை மீண்டும் ஒன்றிணைப்பதுதான் இப்போதைக்கு திராவிட் முன் உள்ள முதல் சவாலாகும்.

கோலியைக் கையாளுதல்:
இந்திய அணிக்கு முன்னர் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, தனக்கென்று சில திட்டங்களைக் கொண்டிருந்தார். அவற்றை அணிக்குள் செயல்படுத்த முயற்சித்தார்.

அதே நேரத்தில் விராட் கோலிக்கென்றும் தனியாக திட்டங்கள் இருந்தன.

இருவரின் உத்திகளும் ஒரு கட்டத்தில் உரசிக்கொள்ள, கும்ப்ளேவுக்கு எதிராக கொடி பிடித்தார் கோலி. அதன்பின் பொறுப்பேற்ற ரவி சாஸ்திரி, முற்றிலும் விராட் கோலிக்கு ஏற்றவராக இருந்தார்.

அவரது அபிப்பிராயங்களையே தனதாக மாற்றிக்கொண்டு செயல்பட்டார். இதனால் பெரிய அளவில் முட்டல்கள் இல்லை.

ஆனால் திராவிட், தனக்கென்று திட்டங்களை வைத்திருப்பவர். தேசிய கிரிக்கெட் அகாடமியிலும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியிலும் அவற்றைச் செயல்படுத்தியவர். மைதானத்தில் விராட் கோலி நெருப்பு என்றால், ராகுல் திராவிட் தண்ணீரைப் போன்றவர்.

இந்தச் சூழலில் ஒரு பயிற்சியாளராக வெற்றிபெற வேண்டுமானால், முதலில் உலகின் சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலியை தன் கட்டுப்பாட்டுக்குள் கோலி கொண்டுவர வேண்டும்.

ஐசிசி போட்டிகள்:
2013-ம் ஆண்டு நடந்த ஐசி சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு ஐசிசி போட்டிகளில் இந்திய அணி, ஒரு கோப்பையைக்கூட வெல்லவில்லை.

இந்த நிலையை மாற்றி, அடுத்த ஆண்டில் மீண்டும் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியிலும், அடுத்து 2023-ம் ஆண்டு நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியிலும், இந்தியாவுக்கு பட்டம் பெற்றுத் தரவேண்டிய நிலையில் திராவிட் உள்ளார்.

இதைப் பொறுத்துதான் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அவரது மரியாதை உயரும்.

தென் ஆப்பிரிக்க தொடர்:

திராவிட் முன் உள்ள உடனடி சவால் என்று தென் ஆப்பிரிக்க தொடரைச் சொல்லலாம். இன்னும் சில வாரங்களில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.

பொதுவாகவே இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சிறப்பாக செயல்பட்டதில்லை. கடைசியாக கடந்த 1992-ம் ஆண்டில்தான் இந்திய அணி அங்கு தொடரை வென்றுள்ளது.

இந்த நிலையை மாற்றி, இத்தொடரில் இந்திய அணியை வெல்ல வைக்க வேண்டிய பொறுப்பு திராவிட்டுக்கு உள்ளது.

இந்த சவால்களைக் கடந்து சிறந்த பயிற்சியாளராக ராகுல் திராவிட் புகழ்பெறுவரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

-பிரணதி